கள்ளக்குறிச்சி போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 62ஐ தொட்டிருக்கும் நிலையில், இதற்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டும் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். கள்ளக்குறிச்சி போராட்டத்தில் கொதித்து எழுந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அவர் பேசுகையில், ‘எதிர்க்கட்சியாக நாங்கள் சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி கேட்டபோது மக்களுடைய பிரச்சனைகளை தான் பேச வேண்டும் என்று கூறினார்கள். இது மக்களுடைய பிரச்சனை இல்லையா? இதைவிட வேறு என்ன பிரச்சனை இருக்கிறது நாட்டிலே. ஆனால் மக்களுடைய பிரச்சனைகளை எடுத்துரைக்க இறுதி வரை அனுமதி தரவில்லை. சட்டமும் விதியும் என்றும் மக்களுக்காக மட்டும் தான்.
போதை பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக புகார் கொடுத்தோம். அதை ஸ்டாலின் அரசு கண்டுகொள்ளவே இல்லை. அதன் விளைவாகவே இத்தனை மரணங்கள். இது குறித்து கவர்னரிடம் மனு கொடுக்க இருக்கிறோம். சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியாத கையாலாகாத ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும். தமிழகத்தை அ.தி.மு.க. மட்டுமே காப்பாற்ற முடியும்’’ என்று கூறினார்.
தமிழகம் முழுக்கவே பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் தீவிர ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக செயல்படத் தொடங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, நாளை முதல் சட்டசபைக்குப் போய் எதிர்ப்புக் குரல் கொடுப்பாரா என்பது கேள்வியாகி இருக்கிறது.