கல்வியே அழிக்க முடியாத சொத்து
கல்வியை கனவில் கூட நினைக்கத் தயங்கிய ஒரு தலைமுறையை பள்ளிக்கூடங்கள் நோக்கி அழைத்து வந்த முன்னாள் முதலமைச்சர் – பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் என்று உழைத்த காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கலைஞர் கருணாநிதி அறிவித்தார். இன்று காமராஜரின் பிறந்த நாளில், உலகமே போற்றி பின்பற்றுகிற காலை உணவுத் திட்டத்தை, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இத் திட்டத்தை தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் தொடங்கிவைத்து குழந்தைகளுடன் அமர்ந்து அவர் உணவு உண்டார்.
முதல்வர் ஸ்டாலின் அடுத்து பேசுகையில், ‘’தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியை உறுதி செய்ய பெற்றோரின் பாசத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த காலை உணவுத் திட்டம். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. அது பசியாக இருந்தாலும் சரி நீட் தேர்வாக இருந்தாலும் சரி. அந்தத் தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவர்களே, நீங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். அதுமட்டும்தான் யாரும் திருட முடியாத சொத்து. நீங்கள் உயர உங்கள் வீடு உயரும் தொடர்ந்து நாடும் உயரும்’’ என்று பேசினார்.
பெருந்தலைவர் பணி அவரது பிறந்த நாளில் மென்மேலும் மெருகூட்டுவது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.