ஜெயலலிதாவா இருந்தா என்ன நடந்திருக்கும்?
எதிர்க் கட்சி என்ன திட்டம் கொண்டுவந்தாலும் அதனை அப்படியே இழுத்து மூடுவது ஜெயலலிதா பாணி. கருணாநிதி மிகவும் திட்டமிட்டு கட்டிய தலைமைச் செயலகத்தை இழுத்து மூடி மருத்துவமனையாக மாற்றினார். சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயில் வரையிலான கூவம் மேம்பாலத் திட்டத்தை முடக்கி வைத்தார். அதோடு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இழுத்து மூடுவதற்கு முயற்சி செய்தார்.
ஆனால், இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திருக்கும் காரியம் அ.தி.மு.க.வினரையே பாராட்ட வைத்திருக்கிறது. ஆம், இன்று அம்மா உணவகத்திற்கு திடீர் விசிட் செய்த ஸ்டாலின் அங்கு ஆய்வு நடத்தியிருக்கிறோம்.
அதோடு, அம்மா உணவகங்களைத் தொடர்ந்து சிறப்பாக நடத்தவும் உத்தரவு போட்டிருக்கிறார். சமையலறை மற்றும் உணவுக் கூடத்தை தூய்மையாகப் பராமரிக்கவும், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்கவும் ஸ்டாலின் அறிவுரை கூறியிருக்கிறார்.
தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் அவ்வப்போது அம்மா உணவகம் செயல்பாடு குறித்து நேரில் ஆய்வு செய்து தேவையான உதவிகள் செய்து தருமாறும் உத்தரவு போட்டிருக்கிறார்.
அதோடு 21 கோடி ரூபாய் செலவில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்திடவும் ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்கிறார். எதிர்கட்சியினர் என்ன திட்டம் கொண்டுவந்தாலும் அதை குற்றம் சொல்லவும் மட்டம் தட்டவும் செய்யும் அரசியல் யுகத்தில் ஜெயலலிதா காலத்தில் கொண்டுவந்த திட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு உத்தரவு போடுவதெல்லாம் செம சூப்பர் ரகம்.
இதுவே நல்ல அரசியல் மாண்பு.