அமிர்தானந்த மயியை அம்பலப்படுத்தும் அமெரிக்கர்
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்த மன்ஹட்டன் நகருக்கு அமிர்தானந்தமயி வருகை தந்த நேரத்தில் அவரை சந்தித்த டிமி எனும் அமெரிக்கர், அங்கு நடந்த சம்பவங்களை அப்படியே எழுதி வெளியிட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள், சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் நபர்களின் இன்னொரு முகத்தை தரிசிக்க முடியும்.
’’இந்தியாவில் அம்மா என்று அழைக்கப்படும் அமிர்ந்தானந்தமயியிடம் யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது… அமெரிக்கா என்பதால் அது சாத்தியமானது. நான் அமிர்தானந்தமயி அம்மாவை நெருங்கினேன், அம்மா என்னை எந்த வித உணர்வுகளும் வெளிக்காட்டாமல் என்னைக் கட்டி அணைத்தார் தோளில் என் முகம் பதிய வைத்து எனது காதில் கிசுகிசுப்பாகக் கேட்டார்.
“அம்மையுடெகொச்சு மோனே, தனிக்கு எந்தா வேண்டேன்னு சோதிச்சோளு…’’ (அம்மாவின் சின்ன மகனே உனக்கு என்ன வேண்டும் என்று கேள்!} எங்களுக்குள் நடந்த மலையாள சம்பாஷணைகளை இனி தமிழில் தருகிறேன்..
“எனக்கு ஒன்றும் வேண்டாம், காரணம் மனிதர்கள் இறைவனாவது இல்லை” அம்மா அதிர்ச்சி அடைந்து என்னை தள்ளி விட்டார். சுற்றிலும் இருந்தவர்கள் இதைப் பார்த்ததும் அம்மாவிடம் பதறிப் போய், “அம்மா என்ன நடந்தது?” என்றனர் அம்மா அவர்களிடம் ‘இவன் ஒரு நாத்திகன்” என்றார்..
உடனே அவரது பிரதம சிஷ்யர் என்னை எழுப்பி ‘அம்மாவிடம் என்ன கேட்டீர்கள்’’ என்றதும், “இனிமேல்தான் கேட்க வேண்டும்” என்றேன்.
அவர் உடனே அம்மாவின் காதில் அவர் என்னவோ சொன்னார். அதற்கு அம்மா சைகையால் என்னவோ காண்பித்தார். அதற்குப் பின் அந்த சீடர் என்னை அம்மாவின் பின்புறம் நின்று தன் வழியாக ஏதாவது கேட்க வேண்டும் என்றால் கேளுங்கள் என்றார்.
நான் கேட்கத் தொடங்கினேன். “மதத்தின் பெயரால் ஏன் நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள்? இந்த வழி குறுக்கு வழி இல்லையா? மதம் என்பது உங்களுக்கு பணம் சம்பாதிக்கும் மார்க்கமா இல்லை பக்தியைப் பரப்புவது மார்க்கமா?”
“நாங்கள் பணம் சம்பாதிக்க வரவில்லை. அமெரிக்க மக்களிடம் இந்து மதத்தை பரப்பவே வந்துள்ளோம்”
“அப்படி என்றால் உங்கள் அருகில் உள்ள உண்டியல் பெட்டியில் அமெரிக்கர்கள் தரும் டாலர்களை ஏன் சேர்த்து வைக்கிறீர்கள்? அவர்களிடம் காணிக்கையோ நன்கொடையோ வேண்டாம் என்று சொல்வதுதானே?”
“அவர்களாக விரும்பித்தரும் பணம் இது. அதைக் கொண்டு நாங்கள் நற்காரியங்கள் செய்து கொண்டு இருக்கிறோம்”
“என்ன நற்காரியங்கள்?”
“கல்வி நிறுவனங்கள் அமைத்து அங்கே மாணவர்களுக்கு கட்டணமில்லாக் கல்வி தருகிறோம்”
“மாணவர்கள் சேர்க்கைக்கு நீங்கள் நன்கொடை, டொனேஷன் வாங்குவது இல்லையா?”
“இல்லை.”
“அம்மா நீங்கள் பொய் சொல்கிறீர்கள். உங்களது மருத்துவக் கல்லூரியில் சேர்க்க எனது மேலதிகாரியின் மகளுக்கு 25 லட்சத்திற்கான டிமாண்ட் டிராப்டை என் கையால் எடுத்து உங்களது தொண்டு நிறுவன விலாசத்திற்கு என் கையாலேயே அனுப்பியவன் நான்” அம்மாவின் முகம் வெளிறிப் போனது. பின்னர் சீடரிடம் என்னவோ சொன்னார்.
சீடர் என்னிடம், “அம்மா மேற்கொண்டு உங்களிடம் பேச விருப்பப் படவில்லை. நீங்கள் இந்தியா வந்தால் கொச்சி அல்லது கோவைக்கு வாருங்கள். நீங்கள் எங்கள் விருந்தினராக வரலாம். உங்களுக்கு எல்லா பதில்களும் சொல்வார்” என்றார்.
நான் சிரித்தபடி, “கொச்சியில் என்ன சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். காரணம் அது உங்கள் இராஜ்ஜியம். அமெரிக்காவில் உங்களால் பதில் சொல்ல முடியாதபோது கொச்சியில் என்ன சொல்லிவிட முடியும்?’ நான் விலகினேன்….
என்னை சமீபித்த ஒரு அமெரிக்கர், “நான் மன்ஹாட்டன் டைம்ஸ் பத்திரிக்கையாளர். உங்கள் இருவருக்கும் நடுவே என்னவோ காரசாரமான விவாதம் நடந்ததே…. அது குறித்து சொல்ல முடியுமா? நாங்கள் விவரம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதை நாங்கள் வெளியிடவும் விரும்புகிறோம்” என்றார்.
அவரிடம் நான், ‘’எங்களுக்குள் ஒன்றும் நடக்கவில்லை. இது இந்தியாவின் சாபக்கேடு. அதைக் குறித்து மட்டும் பேசினோம்!” இதற்குள் அடுத்த வரிசையில் இருந்த என் நண்பன் அனைத்தையும் நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டு இருந்தான். “நீ இப்படி நடந்து கொள்வாய் என்று எதிர்பார்க்கவில்லை. அம்மா எவ்வளவு பெரிய ஆள். அவரிடம் சங்கடப் படும் படியான கேள்விகளை கேட்டு விட்டாயே? இனி என்ன ஆகுமோ என்று பயமாக இருக்கிறது” என்றான்.
“நீதானே கூறினாய் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று. நான் கேட்டதும் சொன்னதும் 100% உண்மை. அம்மா போன்றவர்களால்தான் இந்த நாட்டில் பணம் செய்ய முடிகிறது. அது போகட்டும் என்ன நடக்குமோ என்று பயப்பட்டாயே? என்ன நடக்கும்?’’
“அம்மா கோபித்தாலோ, சபித்தாலோ விபரீதங்கள் நடக்கும். உனக்கு ஒரு விபத்து நடக்கலாம். உன் குடும்பத்தில் யாருக்கேனும் திடீர் நோய்கள் வரலாம், அல்லது நீ திரும்பி செல்லும் விமானம் வானிலே வெடிக்கலாம்…. இது போல எவ்வளவோ!”
“நண்பா கண் மூடித்தனமாக இந்த அம்மாவை நம்புகிறவர்கள் பரப்பும் விஷமத்தனம் இது. .எது நடந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் கேட்க விரும்பியது சத்தியம். சொன்னது சத்தியம். அவர் பொய் சொன்னது சத்தியம். எனக்கு ஏதேனும் ஒன்று நடந்தால் சத்தியங்கள் பொய்க்கட்டும்” என்றேன்.
அதற்குப் பின் அவன் சொன்னபடி ஒன்றும் நடக்கவில்லை. நான் நன்றாகவே இருக்கிறேன். எனது குடும்பமும்.
- இன்பா
பின்குறிப்பு :
இந்த கட்டுரை வெளியாகியிருக்கும் ஞானகுரு மகிழ்ச்சி ஜூன் மாத இதழ் முழுமையாகப் படிப்பதற்கு இந்த லிங்க் தொட்டுச் செல்லுங்கள். அட்டையைத் தொட்டால் இதழ் விரியும். படியுங்கள் பரப்புங்கள்.