என்ன செய்தார் சைதை துரைசாமி – 150
அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமாக ஸ்போக்கன் இங்கிலீஸ் இருப்பது மேயர் சைதை துரைசாமியின் கவனத்திற்கு வந்தது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் பாடம் படித்தாலும், நிறைய மதிப்பெண் எடுத்தாலும் ஸ்போக்கன் இங்கிலீஸ் என்பதில் தனியார் பள்ளிகளை விட மிகவும் பின் தங்கியே இருந்தார்கள். பள்ளிகளுக்கு இடையிலான குவிஸ் போன்ற பல போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட முடியாமல் தவித்தனர்.
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் பிள்ளைகள் கூட, சின்னச்சின்ன ஆங்கில வார்த்தைகள் பேசுவதைக் கண்டு பெற்றோர் பெருமிதப்படுகிறார்கள். அதற்கேற்ப தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் பேசுவதைக் கட்டாயமாக்குகிறார்கள். எனவே, ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் பேசுவதும், எழுதுவதும் சகஜமாகிவிடுகிறது. அதனாலே கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.
அரசு மற்றும் மாநகாரட்சிப் பள்ளிகளில் சட்டத்துக்குப் புறம்பாக ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்பது சைதை துரைசாமிக்குப் புரிந்தது. அதேநேரம், உலகம் முழுவதும் இன்று ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கிறது. எனவே, மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஸ் மிகவும் முக்கியம் என்பதால், அதற்கான பயிற்சி கொடுப்பதற்குத் திட்டமிட்டார்.
மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஸ் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றால், ஆசிரியர்களுக்கு அதற்குரிய திறமை இருக்க வேண்டும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டீச் ஃபார் இந்தியா, பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கத் தூதரகம், டெக் மகேந்திரா போன்ற நிறுவனங்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத்தரும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் மூலம் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் அதிகரித்தது. இதைக் கண்ட பெற்றோர்கள் பெருமகிழ்வு அடைந்தார்கள்.
- நாளை பார்க்கலாம்.