பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க

பேசுவதும் ஒரு மருந்து

செல்போன் ரீல்ஸ் மோகத்தில் திளைக்கும் மனிதர்கள், இப்போது சக மனிதர்களுடன் பேசுவதைக் குறைத்துவிட்டார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கணவன், மனைவி படுக்கையறையில் இருக்கும்போதும் செல்போன் பார்க்கவே விரும்புகிறார்கள்.

ஆனால், மனிதர்களுடன் பேசுவதை ஒரு மருந்து என்கிறது மருத்துவம். ஏனென்றால், மனித மூளை தனிமையில் இருப்பதை விரும்புவதில்லை. எப்போதும் நம்பிக்கையான நபர்களுக்கு அருகில் இருப்பதை பாதுகாப்பாக உணர்கிறது.

ஒரு பிரச்சினையை மனதுக்குள் வைத்திருப்பதும், அதை மீண்டும் மீண்டும் சிந்திப்பதும் குழப்பதையே உருவாக்கும். ஆனால் அதையே நம்பிக்கையான ஒருவரிடம் சொல்லும்போது, உடனடி தீர்வு கிடைக்காவிட்டாலும் மனம் லேசாக மாறுகிறது.

மன அழுத்தம் உருவாகும் நேரத்தில், என்னால் தனியாக ஒரு பிரச்சினையை சமாளிக்க முடியுமா என்ற எண்ணம் கவலையை உருவாக்குகிறது. அதேநேரம், எனக்கு ஒரு நபர் இருக்கிறார் என்ற எண்ணமே நம்பிக்கை தருகிறது.

அமெரிக்க சர்ஜன் ஜெனரல் வெளியிட்ட ஆய்வு ஒன்றில், அதிக சமூக உறவுகளைக் கொண்டவர்களுக்கு உயிர் வாழும் ஆயுள் அதிகம் என்பதை உறுதி செய்திருக்கிறது. அதனால் மனிதர்களுடன் பேசுவது மனதுக்கான ஆறுதல் மட்டுமல்ல, நீண்டகால ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.

துயரம் வரும்போது நண்பரிடம் பேசுகிறோம். பயத்தில் குடும்பத்தினரைத் தேடுகிறோம். குழப்பத்தில் ஆலோசனை கேட்கிறோம். மன அழுத்தத்தில் யாரிடமாவது மனம் திறக்கிறோம். இதன் மூலம் எமோஷனல் பாதுகாப்பு கிடைக்கிறது.

வெறுமனே அரட்டை அடிப்பது, எந்த அர்த்தமும் இல்லாமல் பேசி சிரிப்பது, பழைய கதைகளை பேசி மகிழ்வது போன்ற எல்லாமே உடலுக்கும் மனதுக்கும் மருந்து போன்று பயன் தருகிறது. எனவே, இலவசமாக கிடைக்கும் மருந்தை வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.

பேசுங்கள், பேசுங்கள், பேசிக்கொண்டே இருங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment