உரக்கப் பேசுவது இயலாமை
ஒருவர் டாக்டரிடம் போய், ‘என் மனைவிக்குக் காது சரியாகக் கேட்கவில்லை. ஏதாவது மருந்து கொடுங்கள். அவர் டாக்டரிடம் வர மறுக்கிறார்’ என்று வேதனைப்பட்டார்.
உடனே டாக்டர், ‘அவரது காது கேட்கும் திறன் எப்படி இருக்கிறது என்பது தெரிந்தால்தான் மருந்து கொடுக்க முடியும். அதனால் எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் அவரால் கேட்க முடிகிறது என்பதை அறிந்து வாருங்கள்’என்று அனுப்பினார்.
வீட்டு வாசலுக்குப் போனவர், ‘கீதா இன்னைக்கு என்ன சமையல்?’ என்று கேட்டார். உள்ளே இருந்து பதில் இல்லை.
அடுத்து ஹாலுக்குப் போனவர், ‘கீதா இன்னைக்கு என்ன சமையல்?’ என்று கேட்டார். அதற்கும் பதில் இல்லை. அடுத்து கிச்சனுக்குப் போனவர், ‘கீதா இன்னைக்கு என்ன சமையல்?’ என்று கேட்டார். அதற்கும் பதில் இல்லை. உடனே மனைவிக்கு எதிரே போய் நின்று, ‘கீதா இன்னைக்கு என்ன சமையல்?’ என்று கேட்டார்.
உடனே அவரது மனைவி, ‘வத்தக்குழம்புன்னு மூணு தடவை கத்தியும் காதுல விழலியா செவிட்டு முண்டமே’ என்று திட்டினார்.
இந்த நகைச்சுவையில் தெரிய வருவது என்னவென்றால், கணவரும் மனைவியும் ஒரே வீட்டில் இருந்தாலும் விலகியே இருக்கிறார்கள். அதனால்தான் யாருக்கு என்ன குறை என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.
நிறைய பேர், எதற்கெடுத்தாலும் குரல் உயர்த்திப் பேசுவார்கள். தாங்கள் சொல்வதுதான் சரி என்று அழுத்திப் பேசுவதற்காக குரல் உயர்த்துவார்கள். அப்படி ஒருவர், கத்திக் கத்தி பேசுவதால் மட்டும் எந்தக் காரியத்தையும் சாதித்துவிட முடியாது என்பதுதான் உண்மை. ஆம், மென்மையாகவும், தன்மையாகவும், அமைதியாகவும் பேசுவதுதான் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்கிறது ஓரு மருத்துவ ஆய்வு.
காதலில் விழுந்த ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதை கவனித்து இருக்கிறீர்களா? அவர்களுக்கு அருகே உட்கார்ந்து இருப்பவர்களுக்குக்கூட அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது கேட்காது. அத்தனை தூரம் மென்மையாகப் பேசுவார்கள். அதே போல் பாசத்துடன் அம்மாவும் பெண்ணும் பேசிக்கொள்வதைக் கேட்டு இருக்கிறீர்களா? அவர்கள் மணிக்கணக்காய் பேசினாலும் அடுத்தவர்களுக்குக் காதில் விழாது. அத்தனை மெதுவாகப் பேசுவார்கள்.
காதலில் விழுந்தவர்கள் தெருக்களில் செல்போனில் பேசிக்கொண்டே நடப்பார்கள். வண்டிகளின் இரைச்சல், ஆட்களின் கரைச்சல் இருந்தாலும் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசிக்கொண்டே நடப்பார்கள். நமக்கு அவர்கள் பேசும் சத்தம் கேட்காது என்றாலும் எதிர் முனையில் இருப்பவர்கள் தெளிவாகவே புரிந்துகொள்வார்கள்.
ஏன் தெரியுமா?
அவர்கள் தூரத்தில் இருந்தாலும் அவர்கள் இதயங்கள் நெருக்கத்தில் உள்ளன. இதயம் அருகருகே இருப்பதால் மெல்லப் பேசினாலே இருவருக்கும் கேட்கிறது. அதனால்தான் அன்பு இருப்பவர்கள் மெல்லப் பேசுகிறார்கள்.
அவர்களே சண்டை போடும்போது சத்தம் போட்டு கத்தி பேசுவதை பார்க்கலாம். கோபத்தில் அவர்கள் பேசும் வார்த்தைகள் எல்லோருக்குமே கேட்கும்படி இருக்கும். இதன் அர்த்தம் அவர்களுடைய இதயம் விலகியிருக்கிறது என்பதுதான். தூரத்தில் போய்விட்ட இதயத்துக்குத் தாங்கள் சொல்வது கேட்கவேண்டும் என்பதற்காகத்தான் உரக்கப் பேசுகிறார்கள். உரக்கப் பேசுவது இதயத்தை மேலும் மேலும் துன்புறுத்தக்கூடியது. அதனால்தான் சண்டை போடும்போது இருவரும் மூர்க்கமாகிறார்கள். சண்டை பிரிவாகிறது, பிரிவு வேதனையாகிறது.
எனவே, கருத்துவேறுபாடு ஏற்படும்போதும் அமைதியாகவும் அன்பாகவும் மென்மையாகப் பேசுவதற்கு கற்றுக் கொள்ளுங்கள். அப்படிப் பேசுவதைத்தான் இதயம் புரிந்துகொள்கிறது. வேறுபாடுகள் மறைந்துபோகிறது.
எத்தனை பெரிய பிரச்னை என்றாலும் அதனை அன்பான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியுமே தவிர சண்டை போடுவதாலோ, உரக்கப் பேசுவதாலோ அல்ல. மெல்லப் பேசுங்கள்.