கிள்ளியது யாரோ… கண்டுபிடி கண்டுபிடி

Image

பாரம்பரிய விளையாட்டு கண்ணாமூச்சி!



சரணாகதி அடைந்த ஒருவரை, காப்பாற்றி பாதுகாக்கும் அழகு,  தமிழ் மண்ணுக்கே உரியது. அந்தப் பெருமையை வெளிப்படுத்தும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று, கண்ணாமூச்சி. அந்தக் காலத்தில் தாய்மார்கள், குழந்தையைவிட்டுக் கொஞ்சதூரம் விலகிச் சென்று கதவுக்குப் பின்னாலோ, திரைக்குப் பின்னாலோ நிற்பர். குழந்தை அழுவதற்கு முன்னர், அதன்முன் தோன்றி அதைச் சிரிக்கவைத்து மகிழ்வர். குழந்தை வளர்ந்த பின்னரும் இது நீடிக்கும். இப்படியாகத் தோன்றிய இந்த கண்ணாமூச்சி விளையாட்டு, பின்னர் குழந்தைகளே விளையாடும் அளவுக்கு வளர்ச்சிபெற்றது. இதை, கண்களில் துணியைக் கட்டிவிட்டு சுற்றி நின்றும் விளையடலாம் அல்லது ஒருவர் கண்ணை மூடி இருக்கையில் மற்றவர்கள் ஓடி ஒளிந்துகொண்ட வகையிலும் ஆடலாம்.
இது, உலகெங்கிலும் விளையாடப்படுகிறது. மேலை நாடுகளில், கிரேக்கர்கள் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய சங்கத் தமிழ் இலக்கியத்திலும், அதற்குப் பின்னர் வந்த கம்பராமாயணத்திலும் கண்ணாமூச்சி குறித்த கருத்துகள் பதிவாகி இருக்கின்றன. குறிப்பாக, பழங்காலத்தில் இதைப் பெண்கள் விளையாடியதாகவே தமிழ் மற்றும் சம்ஸ்கிருத இலக்கியங்கள் கூறுகின்றன. கண்ணன் தன் நிழலைக் காட்டி ஆடிய நிலை மாறி, கண்ணை மூசிக்கொண்டவர் (பொத்திக்கொண்டவர்) பிறர் நிழலை நிலா வெளிச்சத்தில் அடையாளம் கண்டு அவரைத் தொடும் விளையாட்டாக மாறியுள்ளது. அதனால் இந்த விளையாட்டு, கண்ணாம்பூச்சி என ஆகி, பின்னர் கண்ணாம்மூச்சி,  கண்ணாமூச்சி என மருவியிருக்கலாம்.
பார்வதி, சிவபெருமானின் கண்களை மூடி விளையாடியதாகவும் உடனே உலகமே இருண்டதாகவும், அதன் காரணமாக உலகிற்கு ஒளியூட்ட சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க நேரிட்டது என்றும் புராணங்கள் சிலவற்றில் சொல்லப்படுகிறது. கண்ணாமூச்சி  ஐஸ் பாய் என அழைக்கப்படுகிறது. இதை, எத்தனை பேர் வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எவ்வளவு நேரம் ஆனாலும் விளையாடலாம். இதற்கு வயது வரம்போ, காலவரம்போ கிடையாது. உலகிலேயே மிகப்பெரிய கண்ணாமூச்சி ஆட்டம், கேம்பிரிட்ஜ் அருகில் உள்ள மில்டன் பூங்காவில் 2016 செப்டம்பரில்  நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.
இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பு, எல்லா விளையாட்டுகளையும்போலவே அணி பிரிப்பது அவசியமாகிறது. ‘அச்சக்கா மச்சக்கா சொச்சக்கா’ எனவும், சில ஊர்களில் ‘சாட் பூட் த்ரீ’ எனச் சொல்லியும் கைகளை நீட்டுவர்.  உள்ளங்கையை மொத்தமாகக் குவித்துப் புறங்கை தெரியவைத்தவர்கள் காய் அணியாகவும், உள்ளங்கை தெரியவைத்தவர்கள் பழம் அணியாகவும் பிரிகிறார்கள். காய் அணியில் இருப்பவர்கள் மறுபடியும் மச்சக்கா சொச்சக்கா சொல்லிக் காய் பழம் பிரிப்பார்கள். கடைசியாகக் காய் விழுபவரோ கண்களை மூடிக்கொண்டு கண்டுபிடிக்கத் தயாராவார்.
அவரது கண்களை தலைவர் மூடிக்கொள்ள, மற்ற குழந்தைகள் ஓடி ஒளிந்துகொள்வர். அவர்கள் ஓடி ஒளிந்துகொள்ளும் நேரத்தில் தலைவரானவர்,  ‘கண்ணாமூச்சி ரேரே… காரே முட்டே ரேரே… ஒருமுட்டையை தின்னுபுட்டு… ஊளை முட்டைய கொண்டுவா…’ என்று பாடுவார். அப்படிப் பாடும்போது ஒளிந்திருக்கும் நபர்களில் ஒருவர்வந்து கண்களை மூடியிருக்கும் கைகளை மெல்லக் கிள்ளிவிட்டுப் போவார்.

பாடல் முடிந்தவுடன் தலைவர், அந்த நபரின் கண்களைத் திறந்துவிடுவார். அப்போது, ஒளிந்திருக்கும் குழந்தைகளில் தன்னைக் கிள்ளிய நபர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். யூகத்தின் அடிப்படையில் அவர், சரியாகக் கண்டுபிடித்துவிட்டால் அந்த நபர் அவுட்டானதுடன், அதன்பிறகு அவரின் கண்கள் மூடப்பட்டு, மீண்டும் விளையாட்டு தொடரும். கண்ணாமூச்சியில் இது ஒருவகை என்றாலும், இதில், இன்னொரு வகையும் இருக்கிறது. இந்த விளையாட்டில் கண்கள் கட்டப்பட்டவர் ஆட்களைத் தொடுவது சிரமம். அவரால் யாரையும் தொட முடியவில்லை என்று முடிவுசெய்தால், ‘சரணாகதி’ அடைவார். அப்போது தலையில் இரண்டு கைகளையும் வைத்துத் தரையில் குத்தவைத்து உட்காருவார். அவர் உட்கார்ந்த அடுத்த நிமிடமே, அனைவரும் உட்கார்ந்து இருப்பவர் தலையைத் தொட வேண்டும். இதில் யார் கடைசியாகத் தலையைத் தொடுகிறார்களோ, அவரே பட்டவர் ஆவார். இதனால், மீண்டும் அவர் மூலம் இந்த ஆட்டம் தொடரும்.
தற்போது இந்த ஆட்டம் சில மாற்றத்துடன் விளையாடப்பட்டு வருகிறது. ஒருவர், ஒன்றுமுதல் குறிப்பிட்ட எண்கள் வரை (எ.கா 50 வரை) எண்ணி முடிப்பதற்குள், மற்றவர்கள் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டும். பிறகு, எண்களைச் சொன்னவர் தேடிக் கண்டுபிடிப்பார். அவர், ஒவ்வொரு நபரையும் ஒரு நம்பர் சொல்லி அழைப்பார். அப்படி அவர் கண்டுபிடிப்பதற்கு முன், ஒளிந்திருக்கும் நபர் அவருக்குத் தெரியாமல் போய் முதுகில் அடித்துவிட்டால், மீண்டும் அவரே முதலிலிருந்தே கண்டுபிடிக்க வேண்டும். அப்படி, அந்த நபர் அனைவரையும் கண்டுபிடித்துவிட்டால், முதல் நம்பர் சொன்னவர் அவுட்டானவர் ஆவார். அவர், இதுபோல் தொடர்ந்து கண்டுபிடிக்க வேண்டும். மொத்தத்தில், இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எந்த வகையில் ஆடினாலும் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருக்கும். இதனால், குழந்தைகளும் ஊக்கத்துடன் விளையாடி மகிழ்வர். இது காலை, மாலை வேளை தவிர, இரவுப் பொழுதிலும் விளையாடப்படுகிறது.
இதனால் குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது. மனத் தெளிவு பிறக்கிறது. சிந்திக்கும் திறனும், மனோதைரியமும் கிடைக்கிறது. பலருடன் ஆடுவதால் சகோதரத்துவம் வளர்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், ஒருங்கிணைந்த உடல் செயல்பாடு, தர்க்கப்பூர்வமாகச் சிந்தித்தல் போன்றவற்றுக்கு நல்ல பயிற்சியாக கண்ணாமூச்சி விளையாட்டு இருக்கிறது.

Leave a Comment