சில உறவுகள் சண்டையால் பிரிவதில்லை. பேசாமல் தவிர்ப்பதால் உடைகிறது

மந்திரச்சொல்

அது ஒரு வீடு. கணவனும் மனைவியும் ஒரே படுக்கையறையில் படுக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரும் பேசி ஏழெட்டு வருடங்கள் கடந்துவிட்டன. சாப்பாடு செய்து வைப்பதை மனைவியும், பணம் கொடுப்பதை கணவனும் கடமையாக செய்கிறார்கள். பிள்ளைகள் மூலம் பேசுவார்கள். ஆனால், அவர்கள் முகத்தைப் பார்த்துக்கொள்வதில்லை.

அவர்கள் வீட்டுக்குள் பேசாமல் வாழ்வது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியும். எப்படியோ டைவர்ஸ் என்று போய்விடாமல், ஒரே வீட்டில் வாழ்ந்தால் சரி என்று ஏற்றுக்கொண்டார்கள். சிலர் இந்த பிடிவாதத்தை பாராட்டினார்கள். என்ன நடந்தாலும் விட்டுக்கொடுக்காதே என்று தூண்டிவிட்டதால், இன்றும் வைராக்கியமாக பிரிந்து வாழ்கிறார்கள்.

நண்பர்களுக்குள் சின்ன மன வருத்தம் வரும். அதன் பிறகு சந்திக்கத் தயங்குவார்கள், போன் பேசுவதைக் குறைப்பார்கள். ஒரு கட்டத்தில் அந்த பிரிவு நிரந்தமாகிவிடும். நீண்ட காலங்களுக்குப் பிறகு என்ன காரணத்தால் மன வருத்தம் என்பதுகூட மறந்துவிடும், ஆனால் பிரிவு மட்டும் நிரந்தரமாக இருக்கும்.

மூல காரணம் என்னவோ, ஒரு சிறிய பேச்சுதான். அவர் முதலில் பேசட்டும் என்று இருவரும் ஈகோ காட்டியது, இந்த விரிசலைப் பெரிதாக்கிவிட்டது. ஒரு கட்டத்தில் இந்த மெளனம் இருவருக்கும் பழகிவிட்டது. இனி, பேசாமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இப்படி லட்சக்கணக்கான மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி தரும் உண்மை.

ஒரு உறவில் சண்டை வருவது சகஜம். வெவ்வேறு மனிதர்கள் இடையில் கருத்து வேறுபாடு வருவது இயல்பு. ஆனால் அந்தக் கருத்து வேறுபாட்டைத் பேசித் தீர்ப்பது மிகவும் முக்கியம். பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போடுவது, தொடர்பைத் துண்டிப்பது, அழைப்பைத் தவிர்ப்பது, பதில் அளிக்காமல் இருப்பது போன்றவை உறவில் ஆழமான காயத்தை ஏற்படுத்துகிறது.

சண்டையினால் வலி இருக்கும். மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது தெரியும். நீ இப்படிச் செய்தது எனக்கு பிடிக்கவில்லை, உன் வார்த்தையால் காயப்பட்டுள்ளேன் என்று சொல்ல முடியும். ஆனால், ஆனால், மௌனம் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். பேசாமல் தவிர்க்கும்போது மற்றவரின் மனதில் ஏதேதோ புதுப்புது சந்தேகம், கேள்விகள் வரும். இதனால் மெளனம் தண்டனையாக மாறிவிடுகிறது

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து கோபத்தை குறைத்துக்கொள்கிறேன் என்பது ஆரோக்கியமான இடைவெளி. ஆனால், ஒரு பாடம் கற்பிக்க வேண்டும், அவர் முதலில் பேசட்டும், நான் பேசவே மாட்டேன் என்று திட்டமிட்டு தொடர்பைத் துண்டிப்பது நிராகரிக்கப்பட்ட வலியை, பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும்.

நல்ல கணவன்–மனைவி என்றால் ஒருபோதும் சண்டையிடாதவர்கள் அல்ல. நல்ல நண்பர்கள் என்றால் ஒருபோதும் மனஸ்தாபம் கொள்ளாதவர்கள் அல்ல. நல்ல உறவு என்றால், சண்டைக்குப் பிறகும் பேச முடிவதுதான். காயப்படுத்திய பிறகும் மன்னிப்பு கேட்க முடிவது. தவறைப் புரிந்துகொண்ட பிறகு மாற்றிக்கொள்வதே புரிதலுடன் கூடிய உறவு.


நாம் இருவரும் பிரச்சினைக்கு எதிராக இருக்கிறோம், ஒருவருக்கொருவர் எதிரி அல்ல என்பதுதான் உண்மையான முதிர்ச்சி. சில நேரங்களில் பேசாமல் இருப்பது நல்லது. கோபம் அதிகமாக இருக்கும்போது உடனடியாகப் பேசுவது பிரச்சினையை மோசமாக்கலாம். அப்போது சிறிய இடைவெளி நல்லது. ஆனால் அந்த இடைவெளிக்கு ஒரு எல்லை வேண்டும்.

உண்மையில் உறவுகளை உடைப்பது சண்டை அல்ல. ஒரு சிறிய மனவருத்தம். அதற்குப் பிறகு பேசாமை. அதற்குப் பிறகு விலகுதல். பின்னர் பழைய காயங்களை மட்டும் நினைத்து நினைத்து வருந்துதல். அதன்பிறகு வைராக்கியம் வருவதால், ஒரே வீட்டில் இருந்தாலும் இரு தனி மனிதர்களாகிறார்கள்.

சண்டை வந்தால் உறவு முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. சண்டைக்குப் பிறகு பேச முடியவில்லை என்பதுதான் உறவு முடிவதன் அறிகுறி. மௌனம் சில நேரங்களில் நல்லதாகத் தெரியலாம். ஆனால் அன்புள்ள உறவில் நீண்ட மௌனம், ஒரு பிரிவுக்கு ஆரம்பம். எனவே, அமைதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பழகுவதுதான்,  உறவைக் காக்கும் வழி.

எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment