இப்படியும் சில ‘பைக்’ சாதனைகள்

Image

ஆச்சர்யம் ஆனால் உண்மை



தங்கள் வாகனத்தின் மீது அலாதி பிரியமும் அன்பும் கொண்ட மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். வாகனத்தை பராமரிப்பதிலும்,  அழகுபடுத்துவதிலும் அதிக அக்கறை செலுத்துவார்கள். அந்த வகையில், மோட்டார் சைக்கிள்களை வைத்து செய்யப்பட்டுள்ள  சில விசித்திரமான கின்னஸ் உலக சாதனைகளை இங்கு பார்ப்போம்….

* இந்தியாவைச் சேர்ந்த ரத்னேஸ் பாண்டே என்பவர்,  தனது ஹோண்டா யுனிகார்ன் மோட்டார் சைக்கிளின் சீட்டில் நின்று கொண்டவாறே, 32.3 கிலோ மீட்டர் பயணித்தார். இந்த பயணம் முழுவதும் அவர் சீட்டில் அமரவில்லை. ஹேண்டில் பாரையும் தொடவே இல்லை. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

* அமெரிக்காவைச் சேர்ந்தவர் லாய்டு வீமா. இவர், ஆர்கன் மாகாணத்தின் போர்ட்லேண்ட் பகுதியில் இருந்து கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு 49 சிசி மொபட்டில் சென்றார். அவர் கடந்த தூரம் 1894.1 கிலோ மீட்டர். இதில், சாதனை என்னவென்றால், குறைந்த சக்தி கொண்ட மொபட்டில் பெரிய தூரத்தை கடந்திருப்பதுதான்.  இந்த சாதனை, கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி நிகழ்த்தப்பட்டது.


* 58 ராணுவ வீரர்கள் ஒன்றுசேர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த சாகச நிகழ்ச்சி, கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. 500 சிசி கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்கில் டர்னடோஸ் ராணுவக் குழுவினர் தங்களது சாகச பயணத்தை நடத்தினர்.

* பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு ஜெஸி என்பவர், தனது தலைமீது ஒரு மோட்டார் சைக்கிளைச் சுமந்துகொண்டு, 14.93 வினாடிகள் அப்படியே நின்றார். இந்தச் சாதனையை உடைக்க பலர் முயன்றனர். ஆனால் முடியவில்லை. இச்சாதனை கடந்த 2015ம் ஆண்டு மே 15ம் தேதி நிகழ்த்தப்பட்டது.

* அமெரிக்காவைச் சேர்ந்த 18 பேர் அலுவலக சேர்களில், ரயில்போல் வரிசையாக அமர்ந்துகொண்டனர். அவர்கள் அனைவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்று ஒருசேர இழுத்துச் சென்றது. மோட்டார் சைக்கிள் ஒன்றால் இழுக்கப்பட்ட நீண்ட அலுவலக சேர் டிரெய்ன் இதுதான். கின்னஸ் நிறுவனம் இதற்கும்கூட உலக சாதனை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

* இந்தியாவைச் சேர்ந்தவர் மோண்டிஸ்டர் அகர்வால். இவர், 110 கிலோ எடை கொண்ட ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் மோட்டார் சைக்கிளை தூக்கிக்கொண்டு 8 படிகளில் மேலும் கீழும் இறங்கினார்.

* குஜராத்தைச் சேர்ந்த பரத் சின் பர்மார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சில மாற்றங்களைச் செய்து, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது, பஜாஜ் டிஸ்கவர் பைக்கின் பின்புற சக்கரம் கழற்றப்பட்டு, அந்த இடத்தில் வெல்டிங்வைத்து மிக நீண்ட உலோகச் சட்டம் ஒன்று இணைக்கப்பட்டது. அதன்பின் கடைசியாக பின்புற சக்கரம் சேர்க்கப்பட்டுவிட்டது. இதன்மூலம், இது உலகின் மிக நீண்ட மோட்டார் சைக்கிளாக மாறிவிட்டது.

* சேலத்தைச் சேர்ந்த கோபிநாத என்பவர், கடந்த 2010ம் ஆண்டு, “பல்சர் 150′ மோட்டார் சைக்கிளில், தன்னுடைய இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு இரண்டரை மணி நேரத்தில், 185 கிலோ மீட்டரை கடந்து லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்தார்.

Leave a Comment