என்ன செய்தார் சைதை துரைசாமி – 223
பொதுமக்களின் வசதிக்காகவும் பொதுப் போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும் சாலை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்த சாலைகள் தரமாகவும் உறுதியாகவும் போடப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் கடமையும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மட்டுமே இருக்கிறது என்பதே உண்மை. ஆனால், இந்த ஆய்வுப் பணியில் சமூக ஆர்வலர்களையும், தங்கள் பகுதி மேம்பாட்டுக்கு உழைக்கும் பொதுநலச் சங்கங்கள் மற்றும் என்.ஜி.ஓ.க்களையும் களம் இறக்கும் சிந்தனை முதன் முதலாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு உதித்தது. உடனடியாக இதனை செயல்படுத்தினார்.
இதுகுறித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் முகவரி ஃபவுண்டேசன் டிரஸ்டியான ரமேஷ், ‘’சாலை ஆய்வுப் பணிகளில் சமூக ஆர்வலர்களும் பங்கேற்கும் திட்டத்தை மேயர் சைதை துரைசாமி அறிமுகம் செய்ததும் என்னைப் போன்ற சமூக ஆர்வலர்கள் பலரும் கண்காணிப்புகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டோம். பல இடங்களில் மேற்கொண்ட ஆய்வு அனுபவத்தை மறக்கவே முடியாது, இது யாரும் செய்யமுடியாத புரட்சி’’ என்கிறார்.
அதேநேரம், இந்த ஆய்வுக்கு ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சமூக ஆர்வலர்கள், பொதுநலச் சங்கங்கள் மற்றும் என்.ஜி.ஓ.க்களுக்கும் இந்த குறிப்பிட்ட துறையில் போதிய தெளிவு இருப்பதில்லை. அதனால் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிடுவது கூடுதல் சிக்கல் தருவதாகவே இருக்கும் என்றெல்லாம் இந்த ஆய்வுகளை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்தார்கள்.
ஆனால், மேயர் சைதை துரைசாமி தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார். சமூக ஆர்வலர்களே தனிப்பட்ட ஆதாயம் எதையும் எதிர்பாராமல் நேர்மையாகவும், தரமாகவும் பணி நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்வார்கள். அதோடு, பொதுநலச் சங்கங்கள் மற்றும் என்.ஜி.ஓ. அமைப்புகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் தொடங்கி பல்வேறு திறமையாளர்கள் இருக்கிறார்கள். ஆகவே, இவர்களையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்வதே பொதுமக்களுக்கு நன்மை தரும்’’ என்று ஆலோசனை வழங்கினார்.
மக்கள் பணி வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவேண்டும் என்பதற்காக மேயர் சைதை துரைசாமி எடுத்துக்கொண்ட இந்த முயற்சிக்கு பொதுமக்களும் பொதுநலச் சங்கங்களும் மிகுந்த ஆதரவும் பாராட்டுகளும் தெரிவித்தன.
- நாளை பார்க்கலாம்.