Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை
வீட்டுக்கு ஒருவர் சர்க்கரை நோயாளியாக இருந்தாலும் என்ன சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்பதில் எக்கச்சக்க குழப்பங்கள் உள்ளன. தீர்வு தருகிறார் மருத்துவர்.

நீரிழிவு உள்ள சகோதர சகோதரிகளில் சிலர் உணவு முறை மற்றும் வாழ்வியல் மாற்றத்திற்கு உட்படும்போது மனச் சோர்வுக்கு உள்ளாகின்றனர். நீரிழிவு வந்தவர்களுக்கு எகஸ்க்ளூசிவ் (பிரத்யேக) டயட் வேண்டும் என்கிறார்கள். ஆனால் நீரிழிவு வந்தவர்களுக்கு நாம் பரிந்துரைப்பது எக்ஸ்க்ளூடிங் (பலவற்றை ஒதுக்கும்) டயட்.
இயன்றவரை பல வகை உணவுகளையும் உள்ளடக்கிய உணவு முறையைப் பரிந்துரைத்தாலும் ரஸ்க், பிஸ்கட், மிக்சர், வடை, பஜ்ஜி, பிரட் என்று தங்களுக்குப் பிடித்த ஸ்நாக்குகளை விட்டு வெளி வர மறுக்கிறார்கள். கூடவே சீனி அல்லது ஏதாவது ஒரு வகை இனிப்பு கலக்காமல் டீ காபி பருக மாட்டார்கள். இது இல்லை என்றால் சற்று காஸ்ட்லியான சத்து மாவு பொடிஅல்லது உடல் வளர்ச்சிக்கு உதவும் புரதம் அதிகமாக உள்ளதாக நம்பப்படும் ஊட்டச்சத்து பொடிகளைப் பாலில் கலந்து பருகுகிறார்கள்.
இன்னும் பலர் நல்லதென்றே எண்ணி வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள் போன்றவற்றை பழமாக அல்லது சாறாக உட்கொள்கிறார்கள். மேற்கூறிய அனைத்து உணவுகளிலும் சில பொதுவான விஷயங்கள் இருக்கும். அவை இனிப்பு சுவை மற்றும் எண்ணெயில் பொரித்த ட்ரான்ஸ் ஃபேட். இவையிரண்டுமே மூளையின் ஊக்கமளிக்கும் மையங்களில் தூண்டுதலை ஏற்படுத்தி டோபமின் எனும் உயிர் ரசாயனத்தின் அளவுகளை சற்று அதிகமாக்கும்.
ரத்தத்தில் குறிப்பாக மூளையில் டோபமின் மழை கூட பொழியத் தேவையில்லை. சாரல் தூரல் போட்டால் கூட மூளையின் “இயங்கு வடிவமான” நமது மனம் பூரித்துப் போகும். மனதை மகிழச் செய்யும் இது போன்ற விஷயங்களை மூளை தூண்டித் தூண்டிப் பெறும். இதுவே நம்மிடையே பழக்கங்கள் உருவாக காரணமாகின்றன. மூளை கூறும் அனைத்து விஷயங்களும் நமது உடலுக்கு நன்மை தருவதாக இருப்பதில்லை.
சிகரெட் புகைப்பாளர்களை மீண்டும் மீண்டும் சிகரெட் புகைக்க வைப்பது மூளை தான். மதுவுக்கும் அப்படியே, இனிப்புக்கும் அப்படியே, எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கும் அப்படியே. மேற்கூறிய விஷயங்களை உட்கொள்ளும் போது மனம் மகிழ்ச்சி கொள்கிறது. ஏற்கனவே இருக்கும் சஞ்சலங்கள், சோகங்கள் போன்றவற்றை சிறிது மறக்கச் செய்கிறது. இதனால் நம்மில் பலர் அவரவர்க்கு பிடித்த உணவுகள் மூலம் தங்களின் வாழ்க்கையில் நேரும் பிரச்சனைகளில் இருந்து தற்காலிக விமோசனம் தேடுபவர்களாக மாறுகிறார்கள். சிலருக்கு அடிக்கடி சீனி போட்ட காபி, டீ, சிலருக்கு பிரியாணி, சிலருக்கு பழைய சோறு, சிலருக்கு வடை, பஜ்ஜி, சிலருக்கு பழங்கள், சிலருக்கு எண்ணெயில் பொரித்த பண்டங்கள் என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப நமது “ஃபீல் குட்” உணவு அமைகிறது.
இந்நிலையில் மத்திய வயதுகளை அடைந்த ஒருவரின் வளர்சிதை மாற்றத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீரிழிவு எனும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்பட்ட பின் அவருக்கு என உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. அதில் அவர் அதுநாள் வரை தினசரி உட்கொண்டு வந்த பல விஷயங்களுக்கு தடை போடப்படுகிறது. இதை அவர்களது மனம் ஏற்க மறுக்கிறது.
நீங்க சீனி வேணாம்கறீங்க நான் நாட்டு சர்க்கரை இல்லைன்னா கருப்பட்டிக்கு மாறிக்கவா?
நீங்க ஸ்வீட்ஸ் வேணாம்னு சொல்றீங்க சரி, நான் பழங்களுக்கு மாறிக்கிறேனே? – இவ்வாறாக எப்படியாவது அவர்கள் வாழ்வில் தினசரி எந்த வடிவிலாவது “இனிப்பு சுவை” அல்லது எண்ணெயில் பொரித்த உணவுகள் உள்ளே செல்லுமாறு பணிப்பது அவர்களது மூளையும் மனமும் தான். இதற்கு அவர்களை முழுமையாக குற்றம் காண இயலாது. எனினும் இதிலிருந்தும் மீள முடியும்.
அதற்கு தங்களின் உடல் நிலை குறித்த தன்னிலை உணர்தல் சுயமாக நடக்க வேண்டும். புதிதாக கற்க வேண்டும். ஏற்கனவே கற்ற பழையதை மறக்க வேண்டும். படிப்பதற்கும், படித்ததை வாழ்வில் புகுத்தவும் முன் வர வேண்டும்.
எவற்றை மூளை கேட்கிறது என்பதை விட எவை எவை நம் உடலுக்கும் அதன் உள்ளுறுப்புகளுக்கும் நன்மை, தீமை என்பதை பிரித்தரிய இந்த தன்னிலை உணர்தல் நிகழ வேண்டும். எனினும் நம்மவர்களுக்கு இந்தத் தன்னிலை உணர்தல் ஏட்டறிவினாலோ (சுயமாகக் கற்றல்), சொல்லறிவினாலோ (மருத்துவர் வழி) ஏற்படாமல் பட்டறிவினால் தான் நேருகிறது.
சிகரெட்டை விடுங்கள் என்று ஒவ்வொரு முறை மனைவி மக்கள் மருத்துவர் கூறினாலும் விடாத ஒருவர், ஒருமுறை அட்டாக் வந்து ஸ்டெண்ட் வைத்த பின் தான் விடுகிறார். இனிப்பை விடுங்கள் விடுங்கள் என்று ஒவ்வொருமுறை மனைவி மக்கள் மருத்துவர் கூறினாலும் விடாத நீரிழிவு நோயர் தனக்கு ஏதாவது ஒருவகையில் நீரிழிவு தரும் இழப்பு கண் பார்வை இழப்பு, சிறுநீரக நோய், கல்லீரல் நோய், இதய நோய், மூளை தேய்மானம், நரம்பு அழற்சி என்று ஏற்பட்ட பின் தான் அதை விடுவதற்கு முயற்சி எடுக்கிறார்
நீரிழிவும் ரத்தக் கொதிப்பும் கட்டுப்பாடின்றி நீடிக்கும் உடலில் அவை தங்களது சுய சரிதையை கல்லெழுத்துகளாக எழுதுகின்றன. அவற்றை எந்த மருந்து கொண்டும் மாற்றி அமைக்க முடியாது. இங்கிருந்து டைம் ட்ராவல் செய்து பின் நோக்கியும் செல்ல முடியாது. எனவே நீரிழிவு நோயர்களே தயவு கூர்ந்து சிறிது சிறிதாகவேனும் நீரிழிவிற்கு உகந்த உணவு முறைக்கு வந்து அதை கட்டுப்பாட்டில் வையுங்கள்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்நாக்ஸ் சாப்பிடுவது பெருவிருப்பமாக இருக்கிறது. அதற்கு வழியும் இருக்கிறது. அதாவது, கிலோ எழுபது ரூபாய்க்கு பல விட்டமின்கள் நிரம்பிய கொய்யாகாய் இருக்கிறது. அதேநேரம், கொய்யா பழம் சுகரை அதிகமாக்கிவிடும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். சீசனுக்கு சீசன் கிடைக்குற வெள்ளரிக்காய் இருக்கிறது. விட்டமின் சி நிரம்பிய நெல்லிக்காய் இருக்கிறது. நல்ல கொழுப்பும் குறைவான மாவுச்சத்தும் கொண்ட தேங்காய் இருக்கிறது.
நல்ல புரதம் நல்ல கொழுப்பு குறைவான மாவுச் சத்தோட சீப் & பெஸ்ட் நிலக்கடலை இருக்கிறது. நிலக்கடலை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், வயிற்றுக் குத்தல், உப்புசம் ஏற்படுபவர்கள் மட்டும் தவிர்ப்பது நல்லது. முளை கட்டிய பயறு ரொம்பவே நல்லது.
புரதச்சத்து நல்ல கொழுப்புச் சத்து மிக்க கொஞ்சம் காஸ்ட்லியான பாதாம், வால்நட், பிஸ்தா போன்றவை தலா 20 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம். இரண்டு முட்டைகளை ஆம்லெட்டாக்கி அல்லது பொடி மாஸ் செய்து அல்லது அவித்த முட்டைகளாக உண்ணலாம். அதுவும் குட்டி ஸ்நாக்ஸ் தான். ஆனால் புரதச்சத்து ஊட்டச்சத்து நிரம்பிய ஸ்நாக்ஸ். மாவுச்சத்து கிட்டத்தட்ட ஜீரோ.
மாலை வேளை ஸ்நாக்ஸாக 50 கிராம் பன்னீருடன் சில காய்கறிகளையும் கொஞ்சம் மசாலா+ உப்பு போட்டு லேசான சூட்டில் சமைத்து உண்ணலாம். 100 கிராம் காய்கறி போட்டு வெஜிடபுள் சூப் செய்து அதில் 20 கிராம் வெண்ணெயை சூட்டோடு சூடாகக் கலந்து பருகலாம். 200 மில்லி ஆட்டுக் கால் சூப் அல்லது நெஞ்செலும்பு சூப் வாரம் இருமுறை மாலை நேரங்களில் பருகலாம்.
டீ, காபி பருக வேண்டும் என்றால் அதில் இனிப்பு எந்த ரூபத்திலும் சேர்க்காமல் தினசரி 100 மில்லி × 2 என்ற அளவில் இருமுறை மட்டும் பருகலாம். கட்டுப்படாத சுகர் இருப்பவர்கள் பால் டீயை கைவிட்டு ப்ளாக் டீ அல்லது லெமன் டீ வித் அவுட் சுகருக்கு மாறவும். இந்த ஸ்நாக்ஸ் காரணமாக சுகர் ஏறாது, வயிறும் நிரம்பும்.