சிரியுங்கள். சிரிப்பைப் பரிசாகக் கொடுங்கள். அதற்கு எந்த செலவும் ஆகப்போவதில்லை.

மந்திரச்சொல்

பணம் இருந்தால் நல்ல உணவு வாங்கலாம். அழகான வீடு கட்டலாம். ஆடம்பரமான வாழ்க்கை வாழலாம். ஆனால், பணம் இல்லாமலே மகிழ்ச்சி தருவது சிரிப்பு. மனம் விட்டுச் சிரிப்பதற்கும், நம்மால் ஒருவர் சிரிப்பதைக் காண்பதற்கும் பணம் அவசியமே இல்லை.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களைச் சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின். அவரது திரைப்படங்களைப் பார்த்து மக்கள் சிரித்தார்கள். ஆனால், அந்தச் சிரிப்பின் பின்னால் சவால்கள் நிறைந்த வாழ்க்கை இருந்தது.

1889-ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த சாப்ளின், சிறுவயதிலேயே வறுமையையும் குடும்பச் சிக்கல்களையும் எதிர்கொண்டார். அவரது குழந்தைப் பருவம் எளிதாக இல்லை என்றாலும், திரைப்பட உலகில் நுழைந்து, தனது தனித்துவமான நடிப்பால் உலகப் புகழ்பெற்றார்.

அவருடைய திரைப்படங்கள் சிரிப்பை மட்டுமல்ல, மனிதர்களின் வறுமை, தனிமை, சமூக அநீதி, அன்புக்கான தேவைகளையும் பேசின. சாப்ளின் மக்களைச் சிரிக்க வைத்தார்; அதே நேரத்தில் அந்தச் சிரிப்புக்குள் மனித வாழ்க்கையின் வலியையும் உணர வைத்தார். ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பது மட்டும் சிறப்பான வாழ்க்கையல்ல. மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய மனிதராக மாறுவதுதான் வாழ்க்கையை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.

சிரிப்பதால் கடன், வேலைப்பளு, குடும்பப் பிரச்சினை, எதிர்காலத்தைப் பற்றிய கவலை போன்றவை உடனடியாகத் தீர்ந்துவிடாது. ஆனால், அவற்றை அணுகும் மனநிலையில் சிறிய மாற்றம் ஏற்படலாம்.

தனியாகச் சிரிக்கும்போது நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால், நம்மால் ஒருவர் சிரிக்கும்போது அந்த மகிழ்ச்சியில் நமக்கும் பங்கு இருக்கிறது. ஒருவருடன் மனம் விட்டுச் சிரித்த அனுபவம், அவருடன் இருக்கும் உறவை இன்னும் நெருக்கமாக மாற்றக்கூடும். மகிழ்ச்சியைப் பகிரும்போது அது குறைவதில்லை; பல நேரங்களில் நம் மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது.

ஒரு வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் இருக்கலாம். வசதிகள் இருக்கலாம். அனைவருக்கும் தேவையான பணம் இருக்கலாம். ஆனால், அங்கே சிரிப்பு இல்லையென்றால், அந்த வீடு உணர்ச்சிரீதியாக வெறுமையானது.

கணவன் மனைவியிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். பெற்றோர் குழந்தைகளுடன் விளையாட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்யும்போதுகூட அது அன்பின் எல்லைக்குள் இருக்க வேண்டும்.

குழந்தை ஒரு சிறிய தவறு செய்துவிட்டால், உடனே கோபப்படுவதற்குப் பதிலாக, மென்மையான நகைச்சுவையுடன் பேசலாம். ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை அதன் வருமானம் மட்டும் தீர்மானிப்பதில்லை; அந்த வீட்டில் மனிதர்கள் எவ்வளவு சுதந்திரமாகவும் அன்பாகவும் சிரித்துப் பேசுகிறார்கள் என்பதும் தீர்மானிக்கிறது.

வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கவும், மற்றவர்களின் முகத்தில் புன்னகையை உருவாக்கவும் சில எளிய வழிகள் உள்ளன. புன்னகையுடன் நாளைத் தொடங்குங்கள். காலையில் எழுந்தவுடன் அன்றைய கவலைகளை மட்டும் நினைக்காமல், இன்று செய்யக்கூடிய நல்ல செயல்களையும் நினைத்துப் பாருங்கள்.

ஒருவரைப் பாராட்டுங்கள். உண்மையாகப் பாராட்டுவதற்கு பணம் தேவையில்லை. நல்ல நகைச்சுவைகளைப் படியுங்கள், பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள். ஆனால், பிறரின் துயரத்தைக் கேலியாக்காதீர்கள். மனம் விட்டுச் சிரியுங்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்.

பணம் சம்பாதியுங்கள். வெற்றி பெறுங்கள். வாழ்க்கையை வசதியாக வாழுங்கள். ஆனால், அந்தப் பயணத்தில் உங்கள் புன்னகையையும் மனிதநேயத்தையும் இழந்துவிடாதீர்கள். வெற்றி என்பது நாம் எவ்வளவு உயரத்துக்குச் சென்றோம் என்பதில் மட்டும் இல்லை; நம்முடன் பயணித்த எத்தனை பேரின் முகத்தில் மகிழ்ச்சியை உருவாக்கினோம் என்பதிலும் இருக்கிறது.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்,

Leave a Comment