தினமும் 100 முறை சிரியுங்கள்

Image

மகிழ்ச்சிக்கு ஷார்ட் கட்

உலகில் படைக்கப்பட்டுள்ள எந்த உயிரினமும் சிரித்து, மகிழ்ச்சியாக வாழ்வது இல்லை. அப்படியிருக்கும்போது, மனிதன் மட்டும் மகிழ்ச்சியாக வாழ முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.

அதாவது, இந்த உலகிலுள்ள மற்ற உயிரினங்களையும் போலவே, மனித குலமும் உயிர் வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்குமே  முதன்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே, மகிழ்ச்சியாக வாழ்வது மனிதனின் மரபணுக்களிலேயே இல்லை என்கிறார்கள்.

இது ஒரு வகையில் உண்மையே. ஏனென்றால், மனிதனின் திருப்திக்கான மனநிறைவு நிலையானது அல்ல. உதாரணத்திற்கு குகையில் வாழ்ந்த மனிதன், அதனையே போதும் என்று நினைத்திருக்கலாம். பழங்களை உண்பதும், விலங்குகளை வேட்டையாடி தின்பதை மட்டுமே உணவுப் பழக்கமாக வைத்திருக்கலாம். சைக்கிள் மட்டுமே பயணத்துக்குப் போதும் என அடுத்தகட்ட ஆய்வை நிறுத்தியிருக்கலாம். வெளிச்சத்துக்கு மெழுகுவர்த்தி போதும் என்று திருப்தி அடைந்திருக்கலாம்.

ஆனால், மனிதனுக்கு உயிர் வாழ்தலில் இருக்கும் பயம், அச்சம் போன்றவை அப்படி நிம்மதியாக வாழ்வதற்கு இடம் கொடுப்பதில்லை. எனவே, நிலையான நிம்மதியைத் தேடி அடுத்தடுத்த நகர்வுகளை செய்துகொண்டே இருக்கிறான்.

மண் குடிசையில் இருப்பதைவிட, காங்கிரீட் வீடு கட்டினால் புயல், மழைக்கு பாதுகாப்பு என்று கட்டுகிறான். வில், அம்பு வைத்திருப்பதைவிட துப்பாக்கி அதிகம் பாதுகாப்பு என்று நம்புகிறான். இப்படி அடுத்தடுத்த மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருப்பதால், இருப்பதைக் கொண்டு நிம்மதியும் மகிழ்ச்சியும் அடையும் வாய்ப்பை இழந்துவிடுகிறான்.

தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருப்பதை பார்க்கும்போது மனிதனின் மனதில் பெரும் குறையும், அதனை சரிக்கட்டுவதற்கு தவறான எண்ணங்களும் தலை தூக்குகின்றன. பேராசை, பிறர் மீது குற்றம் சொல்வது, குறை கண்டுபிடிப்பது, எதிர்மறை எண்ணங்கள், சாத்தியமில்லாத ஆசைகளை வளர்ப்பது, பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றை வளர்த்துக்கொள்கிறான்.

மேலும், மனிதனால் கட்டுப்படுத்தவே முடியாத விஷயங்களை நினைத்தும் கவலைப்படுகிறான். மழையை பெய்ய வைக்க மனிதனால் முடியாது. நேரத்தை நிறுத்துவதற்கு மனிதனால் முடியாது. புயலை தடுக்க முடியாது. ஆனால், இவற்றுக்கு எல்லாம் கவலைப்பட மட்டும் மனிதனால் முடிகிறது. எனவே, மனிதனால் மகிழ்ச்சியாகவோ திருப்தியாகவோ வாழ முடியாதது நமது மரபணுவில் கலந்துள்ளது என்பதும் உண்மையே. எனவே,  நான் 100 சதவிகிதம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று யாராலும் எல்லா நேரத்திலும்  சொல்ல முடியாது. அது சாத்தியமும் இல்லை.

அதேநேரம், இதனை சாத்தியமாக்கும் வல்லமை மனிதனுக்கு உண்டு என்பதும் நிஜம்.

எப்படி தெரியுமா..?

மற்ற எந்த உயிரினத்திடமும் இல்லாத ஒரு தனித்தன்மை மனிதனிடம் உள்ளது. அது, பகுத்தறிவு. மேலும், ஆழ் மனதை அறிந்துகொள்ளும் சக்தி மனிதனிடம் உள்ளது. ஆழ்மனதை தான் விரும்பும் வகையில் செயல்படவைக்கும் சாத்தியக்கூறுகளும் மனிதனிடம் உள்ளது.

’இன்று ஒரு நாள் முழுவதும் நான் 100 முறையாவது மகிழ்ச்சி அடைய வேண்டும்’ என்று ஆழ்மனதில் சங்கல்பம் எடுத்துக்கொண்டால், அப்படி மகிழ்ச்சி அடைய ஒவ்வொரு மனிதனாலும் முடியும்.

ஆம், வயிறு நிரம்ப சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான நேரத்திற்கு அலுவலகம் அடைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அணிந்திருக்கும் ஆடை எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று எல்லா செயல்களிலும் மகிழ்ச்சியைக் காண முடியும். இப்படிப்பட்ட மகிழ்ச்சியை தினமும், வாழ்க்கை முழுவதும் அனுபவிக்கவும் முடியும்.

எனவே,  எல்லோராலும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்பதுவே உண்மை.  அதற்கு தேவை, மகிழ்ச்சியை விரும்பும் மனது மட்டும்தான். மரபணுவை நினைத்து கவலை எதற்கு… அதை மாற்ற முடியும் என்பதுதான் மனிதனின் ஆகப்பெரும் மகிழ்ச்சி.

Leave a Comment