என்ன செய்தார் சைதை துரைசாமி – 340
தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, இந்தியா முழுவதிலிருந்தும் சென்னையை நோக்கி தினமும் மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். வந்தாரை வாழவைக்கும் சென்னை மண்ணை விட்டுப் பிரிய பெரும்பாலோருக்கு மனமே இருப்பதில்லை. இப்படி கிடுகிடுவென அதிகரிக்கும் சென்னையின் மக்கள் தொகைப் பெருக்கத்தின் மிகப்பெரும் சிக்கலாக கழிவு நீர் வெளியேற்றம் மாறிவிட்டது. அதனாலே, சென்னைக்கு அழகூட்ட வேண்டிய அடையாறு, கூவம் ஆகிய இரண்டு ஆறுகளும் சாக்கடை நதியாக ஓடிக்கொண்டு இருக்கின்றன.
இந்த ஆறுகளைக் கடக்கும் நேரத்தில் எல்லாம் மேயர் சைதை துரைசாமிக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்த இரண்டு ஆறுகளையும் எப்படியாவது சுத்தப்படுத்திவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். கூவம் நதியை தூய்மைப்படுத்துவதற்கு 1971ம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது மேயர் சைதை துரைசாமிக்கு நன்றாகவே தெரியும்.
அதாவது, ஆக்கிரமிப்புகள், குடியேற்றம் போன்றவை குறைவாக இருந்த காலத்தில் கூவத்தை சுத்தப்படுத்தும் நடைமுறையை திட்டமிட்டு வேகமாக செயல்படுத்தியிருந்தால் நிச்சயம் நல்ல பயன் கிடைத்திருக்கும். அதன் பிறகு பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டதும், எதுவும் முழுமையாகக் கை கொடுக்கவில்லை என்பதும் மேயர் சைதை துரைசாமிக்கு நன்றாகவே தெரியும். கோடிக்கணக்கான பணத்தை விழுங்கிவிட்டு கூவம் நதி எப்போதும் போல் அசுத்தமாக ஓடிக்கொண்டே இருக்கிறது.
இதுவரை போடப்பட்ட திட்டங்களால் சரியான பயன் கிடைக்கவில்லை என்பதால், இந்த திட்டத்தைக் கைவிடக் கூடாது, இதனை எப்படியு வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினார் மேயர் சைதை துரைசாமி. அவரது எண்ணத்துக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முட்டுக்கட்டை போட்டார்கள். எத்தனையோ பேர் முயற்சி எடுத்தும் யாராலும் முடியவில்லை, உங்களால் மட்டும் எப்படி முடியும் என்று கேலி செய்தார்கள்.
ஆனால், லட்சியமும் கனவும் தீவிரமாக இருந்தால் அதனை அடைவதற்கான வாய்ப்புகள் தானாகவே கூடி வரும் என்பார்கள். அப்படி ஒரு வாய்ப்பு மேயர் சைதை துரைசாமிக்குக் கிடைத்தது. ஆம், அரசு முறை பயணமாக சிங்கப்பூர் செல்வதற்கு வாய்ப்பு வந்தது. அப்போது தான் சிங்கப்பூரில் ஒரு கூவம் நதி முன்பு இருந்த வரலாறு மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.
- நாளை பார்க்கலாம்.