ஞானகுரு பதில்கள்
கேள்வி : ஏதாவது ஒரு கவலை என்னை துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது. கவலையிலிருந்து விடுபடுவதற்கு ஏதேனும் வழிகள் இருக்கிறதா..?
- பி.ஷியாமளா, கோவை.
ஞானகுரு :
பாதை இல்லாத ஊர் என்று எதுவுமில்லை. நோய், எதிரி, தோல்வி, பயம், அச்சம், நிச்சயமற்ற நிலை, அவமதிப்பு, பலவீனம் போன்ற எத்தனையோ காரணங்களால் கவலை உருவாகலாம். கவலை இல்லாத மனிதர்கள் இந்த உலகில் யாருமே இல்லை.. கவலையை எப்படி எடுத்துக்கொள்கிறாகள் என்பதிலே வித்தியாசம் இருக்கிறது. கவலையைப் போக்குவதற்கு உங்களுக்கு ஐந்து வழிகள் உள்ளன.
- எதுவெல்லாம் தவிர்க்க முடியாததோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். விபத்து நடந்துவிட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருந்திருக்கலாம், பிறர் சொன்னதைக் கேட்டிருக்கலாம் என்றெல்லாம் கவலைப்படுவதால், நடந்த விபத்து மாறிவிடப் போவதில்லை. விபத்திலிருந்து எப்படி மீள்வது என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமெ தவிர, விபத்து பற்றி அல்ல.
- இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்யுங்கள். செய்வதற்கு நிறைய வேலைகள் இருப்பவருக்கு கவலைப்படுவதற்கு நேரம் இருப்பதில்லை. எனவே, எதையாவது செய்துகொண்டே இருங்கள். கவலைக்கு நேரம் இருக்காது.
- யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அன்பு, பாராட்டு, நன்றி போன்றவைகளை பிறரிடம் எதிர்பார்த்து ஏமாந்துபோகாதீர்கள். நீங்கள் அன்பு செலுத்துங்கள், பிறரை பாராட்டுங்கள். எதற்கும் பிரதிபலன் பாராமல் இருந்தால் கவலை தோன்றாது.
- எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற அச்சமே நிறைய பேரை பாடாய் படுத்துகிறது. இன்றைய தினத்தில் வாழுங்கள். நாளை நல்லதாகவே நடக்கும் என்பதை உறுதியாக நம்புங்கள். அந்த நம்பிக்கையே கவலையை போக்கடிக்கும்.
- பிறருக்கு உதவி செய்வதற்கு, பிறர் நன்மைக்கு ஏதேனும் செய்யுங்கள். பிறருக்காக வேலை செய்பவருக்கு ஒரு போதும் கவலை எட்டிப் பார்ப்பதில்லை.
கேள்வி : இந்த மாதத்துடன் வேலையில் இருந்து ரிடயர் ஆகிறேன். முதுமையை எப்படி எதிர்கொள்வது என்று வழி காட்டுங்கள்..?
- என்.ராகேஷ், வாணியம்பாடி.
ஞானகுரு :
ஒவ்வொரு நாளும் மனிதன் மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறான். குழந்தைப் பருவம், இளம் பருவம், முதுமை என எந்தவொரு காலகட்டத்திலும், எந்த ரூபத்திலும் மரணம் வரலாம். எனவே, முதுமையில் மட்டுமே மரணம் வருவதாகக் கருதுவது உண்மையில்லை. முதுமை என்பதும் ஒரு பருவம். இந்த வயது வரையிலும் வாழ்ந்திருப்பதே ஒரு சாதனை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதே மகிழ்ச்சியுடன் முதுமையை அனுபவியுங்கள்.
முதுமையை அனுபவிக்க 10 தகுதிகள் வேண்டும் 1. நோயில்லாத உடல் 2. போதிய அளவு பணம் 3. பிரியாத உறவு 4. நல்ல நினைவாற்றல் 5. நட்பு வட்டம் 6. படுத்தவுடன் தூக்கம் 7. ஆசைகள் இல்லாத மனம். 8. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை. 9. பிறரிடம் குற்றம் காணாத மனநிலை. 10. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனநிலை. இவற்றில் எதுவெல்லாம் இல்லையோ, அதனை எல்லாம் வளர்த்துக்கொள்ளுங்கள். முதுமையும் இனிமையாகவே கழியும்.