கெட், செட், ரெடி
பெண்கள் மேக்கப் போட்டு கிளம்புவது குறித்து ஏராளமான ஜோக்ஸ் உண்டு. அது உண்மையும்கூட. ஏனென்றால், எப்படி அவசரமாக மேக்கப் செய்து கிளம்புவது என்று நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அவர்களுக்காகவே இந்த சிம்பிள் மேக்கப் டிப்ஸ்.
கோவில், ஷாப்பிங் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது அல்லது அவசரமாக சில இடங்களுக்குச் செல்ல நேரும்போது சிம்பிள் மேக்கப் போட்டுக் கொள்வதே போதுமானது. முதலில் முகத்தை நன்கு கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். பின்பு ஃபவுண்டேஷனை முகம், கழுத்து, காது மடல்கள் முதலிய இடங்களில் சீராகத் தடவ வேண்டும். அதன்மேல் ஐஸ் கட்டியைத் தடவினால் மேக்கப் அதிக நேரம் முகத்தில் தாக்குப் பிடிக்கும்.
அதற்குப்பின்னர், முகத்தை சந்தனப்பவுடர் அல்லது ரோஸ் பவுடரால் ஒற்றி, ஐ ஷேடோ தேவையெனில் உடையின் நிறத்திற்கேற்றவாறு கண்ணின் மேல்புறத்தில் புருவத்திற்குக் கீழே தடவலாம். கண்கள் சிறியனவாய் இருந்தால் ஐப்ரோ பென்சில் மூலம் கண்களுக்கு இலேசாக ஒளியூட்டிவிடலாம்.
லிப்ஸ்டிக் பிரஸ் கொண்டு முதலில் உதட்டின் மேல் ‘அவுட்லைன்’ வரைந்துகொண்டு, பிரஷ் கொண்டு உதடு முழுவதும் பூச வேண்டும். பின்னர் ஐஸ் கட்டியால் உதடுகளை நீவி, அடுத்து அதிகப்படியான லிப்ஸ்டிக்கை டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுக்க வேண்டும். ‘ரூஜை’ இரு கன்னங்களிலும் இலேசாக ஆள்காட்டி விரலால் அல்லது பிரஷால் பூச வேண்டும்.
மாலை, இரவு நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் கொஞ்சம் ‘ஹெவி’ மேக்கப் இட்டுக் கொள்ளவும். எப்படி என்றாலும் வீட்டிற்கு வந்தவுடன், முகத்தில் கிளன்சிங் மில்க் அல்லது தேங்காய் எண்ணெயை மேக்கப் இட்ட இடங்களில் தடவி 5 நிமிடம் கழித்து, பஞ்சினால் துடைத்து பின்னர் முகத்தை சோப் தேய்த்துக் கழுவலாம்.
நிறம் குறைவாக இருப்பவர்கள் வெளியில் தெரியும் உடற்பகுதிகளில் அதாவது பின்கழுத்து, கைகள் போன்றவற்றிலும் இலேசாக ரோஸ் பவுடரை இட்டுக் கொள்ள வேண்டும். மேக்கப்புடன் உறங்குவது நல்லதல்ல. முகத்திலுள்ள துவாரங்கள் தொடர்ந்து அடைக்கப்படும்போது சருமம் கெட்டுப் போய்விட வாய்ப்பிருக்கிறது.
ஒவ்வொருவரும் எந்த வகை மேக்கப் தம் முகத்திற்கு ஏற்றதாய் இருக்கும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு இட்டுக் கொள்ள வேண்டும்
கல்யாணமோ, பண்டிகையோ அதற்கு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன்பிருந்தே பெண்கள் படிப்படியாகத் தங்களை அழகுபடுத்திக் கொள்ளத் தயாராக வேண்டும். வேலைகளை முடித்துவிட்டு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து தலை உள்பட உடம்பு முழுவதும் நிதானமாக நன்றாக மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு இரண்டு முட்டையை எடுத்து அவற்றின் வெள்ளைக் கருவைத் தனியாகப் பிரித்து அடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து கருவோடு ஒரு டேபிள் ஸ்பூன் நீர் கலந்து, தலையில் தேய்த்து, நல்ல ஷாம்பூ கொண்டு கழுவிவிடுங்கள். ஒரு பெரிய கைக்குட்டையில் கால் கப் ஓட்ஸ் மீல், அரை கப் ஸ்டார்ச், அரை கப் பாலாடை உள்ள பால், அரை கப் பவுடர் பால் இட்டு முடிய வேண்டும். அந்த முடிப்பை உடல் முழுவதும் தேய்த்தால் உலர்ந்த சருமம் பளிச்சென்றாகும்.
மறுநாள் கை, கால்களை ப்யூமிங் கல் கொண்டு தேய்த்துச் சுத்தப்படுத்த வேண்டும். கை, கால்களை வெதுவெதுப்பான சோப் கலந்த நீரில் சற்று நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு சுத்தமாகத் துடைத்துவிட்டு நகங்களை சீர்செய்து, விரும்பிய நிறத்தில் நக பாலிஷ் இடவும்.
மூன்றாவது நாள் முகத்தில் சிறிது பாலாடை அல்லது தரமான ‘நர்ஷிங் கிரீம்’ கொண்டு மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நீராவி பிடித்து மாஸ்க் போடவும். மாஸ்க்குகள் தற்போது கடைகளிலேயே கிடைக்கின்றன. வறண்ட சருமம் உடையவர்கள் முட்டையின் மஞ்சள் கரு, சிறிது தேன், கடலைமாவு ஆகியவற்றைக் கலந்து குழைத்துப் பூசலாம். எண்ணெய்ச் பசை சருமம் உடையவர்கள் முட்டையின் வெண்கருவையும் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து உபயோகிக்கலாம்.
நான்காவது நாளை, ஹென்னா எனப்படும் மருதாணி கொண்டு தலைமுடிக்குச் செழிப்பூட்டுவதற்கும், கை, கால்களில் உள்ள முடிகளைப் போக்குவதற்கும் (வாக்ஸிங் மூலம்) செலவிடலாம். மருதாணிப் பொடி, சிறிது தயிர், அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு, டீ டிக்காஷன் சிறிது, முட்டை ஒன்று ஆகிய எல்லாவற்றையும் நன்கு கலந்து, தலையில் தேய்க்க வேண்டும். கடையில் கிடைக்கும் வாக்ஸை வாங்கி அதை முடி உள்ள இடத்தில் பூசி, அதன் மேல் துணிப்பட்டையை அழுத்தி, எதிர்ப்புறமாய் இழுத்தால் அதனுடன் முடிகள் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.
ஐந்தாவது நாள் பண்டிகை, திருமணம் அல்லது வேறு விசேஷ நாள் அன்று உங்கள் வயது, நிறம், உடல்வாகு ஆகியவற்றிற்கு ஏற்ற உடைகள், நகைகள், ஹேர்ஸ்டைல், முக அலங்காரம் ஆகியன செய்து அழகாகத் தோற்றமளிக்க முடியும்!