என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 77
டெங்கு காய்ச்சல் குறித்த அச்சத்தைத் தவிர்க்கும் வகையில், களப்பணியாளர்களை வீடுவீடாக தேடிச் சென்று கொசு ஒழிப்பு குறித்து அறிவுறுத்தும் பணியில் ஈடுபடச் செய்தார். அவர்கள் குடிமக்களிடம், ‘வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரித்தாலே டெங்கு நோயில் இருந்து தப்பித்துவிட முடியும். குறிப்பாக, வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள். தேங்காய் சிரட்டை, பழைய மண் பானை, டயர் என்று தேவையில்லாத பொருட்களை அகற்றுங்கள். குடிப்பதற்கு குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்துங்கள்.
வீட்டுக்குள் கொசுக்கள் நுழைய முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பயனடுத்துங்கள். படுக்கை அறையுல் கொசுவலை, கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள். மனிதர்களின் உடலில் வெளிப்படும் வியர்வை வாசம், சுவாசித்தலின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, உடலின் வெப்பம் ஆகியவை கொசுக்களை ஈர்க்கும். எனவே, கை, கால் முழுக்க மறைக்கும் வகையில் ஆடைகளை அணியுங்கள்’ என்று அறிவுறுத்தப்பட்டது.
இவற்றால் மட்டும் டெங்கு பற்றிய பயத்தை மக்களிடம் இருந்து முழுமையாகப் போக்கிவிட முடியாது என்பதை உணர்ந்தே இருந்தார் சைதை துரைசாமி. எனவே, டெங்குக்கு நிரந்தரத் தீர்வாக ஒரு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பினார்.
டெங்கு காய்ச்சலுக்கு மருந்து இல்லை என்று அலோபதி மருத்துவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு மேயர் சைதை துரைசாமிக்கு மனம் வரவில்லை. ஏனென்றால், அவர் சித்த வைத்தியம், இயற்கை வைத்தியம் மீது அபார நம்பிக்கை உள்ளவர்.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே நம் நாட்டில் அலோபதி மருத்துவம் முக்கியத்துவம் பெற்றது. அதுவரையிலும் அனைத்து நோய்களையும் நமது சித்த மருத்துவர்களே குணப்படுத்தினார்கள். அதனால் டெங்கு நோய்க்கு நிச்சயம் சித்த வைத்தியத்தில் மருந்து இருக்கும் என்று நம்பினார்.
இது குறித்து சித்த வைத்தியர் வீரபாகு மற்றும் அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை சித்த வைத்தியர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது தான் டெங்குக்கு, ‘ஒன்றல்ல, இரண்டு மருந்துகள் உள்ளன’ என்று கூறினார்கள். தமிழகத்தில் மிகப்பெரும் சித்த வைத்தியப் புரட்சியை உருவாக்கத் தயாரானார் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.