ஆய்வு சொல்லும் ரகசியம்
மனிதனுக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் வயிறுதான். அதனால், வயிற்றைச் சுத்தமாக வைத்துக்கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர்தான் பெரிதும் உதவியாக இருக்கிறது, என்கிறது ஓர் ஆய்வு.
அதனால், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. காரணம், காலையில் எழுந்தவுடன், நம் வயிற்றில் ‘ஹைட்ரோகுளோரிக் அமிலம்’ சுரக்கும், இதன் தன்மையை குறைக்க தினமும் காலை எழுந்ததும், ஒருநாள் முழுவதும் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை வெறும் வயிற்றில் எழுந்த அரை மணி நேரத்துக்குள் குடித்தால், உடலை நோய்களின்றி பேணிக்காக்கலாம். இது அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவி செய்யும். தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைத்துவிட முடியும். அதேநேரத்தில், தினமும் வெறும் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக, உடலுக்கு ஆரோக்கியமான விதத்திலும் நாம் சில பானங்களை எடுத்துக்கொள்ளலாம்.
நீராகாரம்:
காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மோரில் உள்ள லாக்டோபேசில்லஸ் என்னும் பாக்டீரியா, உடலுக்கு நன்மை செய்வதுடன், வயிற்றில் வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.
வெந்தய நீர்:
முதல்நாள் இரவு தூங்கச் செல்வதற்கு முன் சிறிதளவு வெந்தயத்தை ஒரு டம்ளரில் ஊறவைக்கவும். பின்பு, காலை எழுந்ததும் அந்த தண்ணீர் மற்றும் வெந்தயத்தைச் சாப்பிட, செரிமான பிரச்சினைகளும் மலச்சிக்கலை தீரும்.
அருகம்புல் சாறு:
அருகம்புல்லில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சாறு எடுத்து குடிப்பது பல மருத்துவ பலன்களைத் தரும். குறிப்பாக, அருகம்புல்லில் உள்ள தண்டில்தான் மருத்துவக் குணம் உள்ளது. அதன் புற்களில் சுனை தன்மை இருப்பதால் அதனை தவிர்த்து விடுவது நல்லது.
பூசணி சாறு:
உடல்பருமன் உள்ளவர்கள், தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள், வாரத்தில் இரண்டு அல்லது 3 முறை வெள்ளை பூசணிக்காய் சாறு அருந்துவது நல்லது. வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறைந்துவிடும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக்கொண்டால் முழுப் பலனைப் பெறலாம். பூசணி சாறு மிகவும் குளிர்ச்சி என்பதால் கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இதைத் தவிர்ப்பது நல்லது.
நெல்லிக்காய் சாறு:
தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு பருகுவதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். மலச் சிக்கல் பிரச்சினை சீராகும். தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
இளநீர்:
இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தால், செரிமானம் மேம்படும். தவிர, வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும்.