திருமணத்திற்கு முன் வீடு வாங்க வேண்டுமா..?

பணமே மந்திரம்

ஞானகுருவை சந்திக்கவந்தான் இளைஞன் பரந்தாமன். ஐ.டி நிறுவனத்தில் சேர்ந்து நாலைந்து வருடங்களாகிவிட்டது என்பதால் நல்ல சம்பளம். திருமணம் முடிக்கும் முன்பு வீடு வாங்குவதா அல்லது வீடு வாங்கிவிட்டு கல்யாணம் முடிப்பதா என்ற குழப்பத்துக்குத் தீர்வு கேட்டு வந்துசேர்ந்தான்.

ஞானகுருவை பார்த்ததும் மனதிலிருந்த சந்தேகத்தைக் கேட்டான். ‘’பொண்ணு பார்க்கப் போற இடத்தில் எல்லாம் சொந்த வீடு இருக்கிறதா என்றுதான் கேள்வி கேட்கிறார்கள். அதனால் இப்போது சொந்தவீடு வாங்கிவிடலாமா… வட்டி விகிதமும் இப்போது குறைந்திருக்கிறது. வீடு வாங்குவது லாபம் என்று தெரிந்தாலும் கொஞ்சம் பயமாக இருக்கிறது’’ என்றான்.

‘’வீடு இருந்தாலும் திருமணம் நடக்கும், வீடு இல்லையென்றாலும் திருமணம் நடக்கும். அதனால் திருமணத்தையும் வீட்டையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்ளாதே…’’ என்றார் ஞானகுரு.

‘’இவ்வளவுதானா பதில்..? என்னுடய குழப்பம் தீரவில்லையே…’’

‘’திருமணத்திற்கு முன்பு சொந்த வீடு என்பது ஆண்களுக்கு தன்னம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது.  செட்டில் ஆகிவிட்டது போன்ற திருப்தி கிடைக்கிறது. பெண் வீட்டாருக்கு பொருளாதார நம்பிக்கை கிடைத்துவிடுகிறது.

அதேநேர்ம், சொந்த வீடு என்பது இருப்பதற்கான இடம் என்றும் பொருளாதார நம்பிக்கையாக மட்டும் பார்க்கக்கூடாது.

சொந்த வீடு என்பது நல்ல மனநிலை, கூட்டுணர்வு, எதிர்கால வசதிகள், மகிழ்ச்சி ஆகியவற்றை எல்லாம் அலசிப் பார்த்தே வாங்க வேண்டும். அதாவது, திருமணத்திற்கு முன் அல்லது திருமணத்திற்குப் பின் என்று யோசிக்காமல் எது சரியான நேரம், எங்கு வாங்குவது, எப்போது வாங்குவது என்று நன்கு அலசிப் பார்க்க வேண்டும்…’’

‘’அதுதானே குழப்பமாக இருக்கிறது…’’

’’திருமணத்திற்கு முன்பு வீடு கட்டும் போது வருமானம் நிலையாகத் தெரியும். ஏனென்றால் வேறு பொறுப்புகள், கடமைகள், சுமைகள் எதுவும் இருக்காது. சம்பளத்தில் மாத இ.எம்.ஐ. கட்டுவது எளிதாகத் தெரியும். பொருளாதார ரீதியில் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும், ஆனால் திருமணத்திற்குப் பிறகு பல்வேறு மாற்றங்கள் நடக்கும், பிரச்னைகள் உருவாகும், தேவைகள் வரும். அப்போது வீடு வாங்கியதற்காக வருத்தப்படலாம்…’’

‘’அப்படி என்ன சிக்கல் வரும்..?’’

‘’திருமணத்திற்குப் பிறகு ஒரு வருமானம் என்றால் வீட்டு இ.எம்.ஐ. பெரியதாக மாறிவிடும். ஏனென்றால் திருமணத்திற்குப் பிறகு அத்தியாவசியச் செலவுகள், ஆடம்பரச் செலவுகள், திருமணச் செலவுகள், மருத்துவச் செலவுகள் என எல்லாமே தாறுமாறாக அதிகரிக்கும். இரண்டு பேர் வேலை செய்வதாக இருந்தாலும் சில சிக்கல்கள் வரலாம். குறிப்பாக பணி புரியும் இடம்…’’

அப்படியென்றால்…?’’

‘’இப்போது பணி புரியும் இடத்திற்குப் பக்கத்தில் வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். கொஞ்ச நாட்களில் இடம் மாறலாம், வேலை மாறலாம், சிலர் வெளிநாடு போகிறார்கள். அதேபோல் மனைவி வேலை பார்க்கும் இடத்துக்கும் இந்த வீட்டுக்கும் போய்வருவதற்குச் சிக்கல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு, வேறு ஒரு வீட்டில் வசிக்க வேண்டியிருக்கும். வீடு வாங்கியதற்கான அர்த்தமே காணாமல் போய்விடும்…’’

அதனால் திருமணத்திற்குப் பிறகு வீடு கட்டுவது நல்லது. குறிப்பாக மனைவியின் ஆலோசனையும் வீடு விஷயத்தில் இருப்பது நல்லது. இது, உணர்வுரீதியாக மகிழ்ச்சி தரும். வீடு போன்ற பெரிய முடிவுகளை இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுக்கும்போது நம்பிக்கை, சமத்துவம் வலுப்படும். அதனால் வீடு கட்டுவது, வாங்குவது போன்ற பெரிய முடிவுகளை திருமணத்திற்குப் பிறகு திட்டமிட்டுவதே நல்லது….’’ என்றார் ஞானகுரு.

‘’ஆனால், இப்போது என்னிடம் பணம் இருக்கிறது, வட்டி விகிதம் குறைவாக இருக்கிறது. இந்த நல்ல தருணத்தை நழுவ விடலாமா..?’’

‘’வாய்ப்பு இருக்கும்போது பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம் என்பது உண்மையே. ஆனால், எல்லா விஷயத்திலும் அப்படி இருக்க அவசியம் இல்லை. இப்போது கையில் பணம் இருந்தால் எங்காவது நிலம் வாங்கிப் போடலாம், ரிஸ்க் இல்லாத வகையில் முதலீடு செய்யலாம். தேவைப்படும் நேரத்தில் வீடு வாங்கிக்கொள்ளலாம்.

ஆனால், கடனுக்கு வட்டி குறைவாக இருக்கிறது என்பதற்காக வீடு வாங்குவது சரியான நிதி மேலாண்மை இல்லை. ஏனென்றால், உலகப் பொருளாதாரத்தில் நாளை என்ன மாற்றம் நிகழும் என்று யாருக்கும் தெரியாது. எந்த நேரத்திலும் வட்டி விகிதம் உயரலாம். எனவே, வட்டி விகிதம் குறைவு அல்லது அதிகம் என்பதை அடிப்படையாக வைத்து வீடு வாங்குவதைத் தீர்மானிக்கக்கூடாது…’’ என்றதும் ஓரளவுக்குத் தெளிவுக்கு வந்தான்.

‘’வீடு இல்லாமல் நல்ல திருமணம் நடக்கும். ஆனால், தெளிவான மனநிலை இல்லாமல் எந்த வீடும் சுபிட்சமாக இருக்காது. அதனால் வீடு என்படு இலக்கு அல்ல, நல்ல வாழ்க்கையே இலக்கு. வீடு கட்டுவது ஆணின் சாதனை அல்ல, ஒரு நல்ல குடும்பம் நடத்துவதே அதைவிட முக்கியம்…’’

மகிழ்ச்சியுடன் கிளம்பினான் இளைஞன்.

Leave a Comment