ஞானகுரு பதில்
கேள்வி : புனிதமான ஆசிரியர் பணியிலும் சிலர் தவறு செய்கிறார்களே… அரசு பள்ளி ஆசிரியர்களை விட தனியார் பள்ளி ஆசிரியர்கள் நன்றாக சொல்லித்தருவது எப்படி?
- பி.சுந்தரேசன், கள்ளக்குறிச்சி.
ஞானகுரு :
ஆசிரியர் பணி என்பது ஒரு வேலை மட்டுமே. போலீஸில் திருடர்கள் இருப்பது போன்று, நீதிபதிகளில் ஊழல்வாதிகள் இருப்பது போன்று ஆசிரியர் பணியிலும் அயோக்கியர்கள் இருக்கவே செய்வார்கள்.
அரசு பள்ளியில் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர், அவரது பிள்ளையை தனியார் பள்ளியில் 20 ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்க்கும் ஆசிரியரை நம்பி ஒப்படைக்கிறார். அரசு பணியில் இருப்பதை பெருமையாகக் கருதும் ஆசிரியர்கள், அரசு பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க வைப்பதை கேவலமாகக் கருதுகிறார்கள்.
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அதிகம் சம்பளம் வாங்கும் பணக்கார ஆசிரியர்கள் சொல்லித்தருகிறார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் பணக்கார மாணவர்களுக்கு ஏழை ஆசிரியர்கள் சொல்லித்தருகிறார்கள்.
நல்ல பள்ளி, சிறந்த ஆசிரியர் என்று யாரும் கிடையாது. நல்ல மாணவர்கள் மட்டுமே உண்டு. இப்படிப்பட்ட மாணவர்கள் எந்த பள்ளியிலும் நன்கு படிப்பார்கள். எனவே, பிள்ளையை நல்ல மாணவராக மாற்றுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
