கெட்ட செயலுக்கு நல்ல நேரம் பார்க்கலாமா..?

ஆச்சர்ய உண்மை

சின்னச்சின்ன செயலுக்கும் நல்ல நேரம் பார்க்கிறார்கள். அதேநேரம், முன்பு நல்ல நேரத்தில் தொடங்கிய அத்தனை செயல்களும் முழு நன்மை கொடுத்ததா என்று யாருமே ஆய்வு செய்வதில்லை. நல்ல நேரம் பார்த்து கிளம்பிச்சென்று விபத்தில் சிக்கியிருக்கலாம், பணத்தைத் தொலைத்திருக்கலாம், வேறு ஏதேனும் சிக்கலில் மாட்டியிருக்கலாம். ஆனால் அதற்கு அந்த நல்ல நேரத்தைக் குறை சொல்ல மாட்டார்கள்.

நல்ல நேரம் பார்த்து ஏரோபிளேன், ரயில், பஸ் எடுப்பதில்லை. நல்ல நேரம் பார்த்து மருத்துவர்கள் ஆபரேஷன் செய்வதில்லை. நல்ல நேரம் பார்த்து மழை பெய்வதில்லை. நல்ல நேரம் பார்த்து யாரும் சாப்பிடுவதில்லை, நல்ல நேரம் பார்த்து யாரும் இயற்கை கடன் கழிப்பதில்லை. ஆனாலும், நல்ல நேரத்தின் மீது அபார நம்பிக்கை வைக்கிறார்கள்.

நல்ல நேரம் பார்த்து நல்ல செயல் செய்வது போன்று கெட்ட செயலுக்கு நல்ல நேரம் பார்த்தால் என்னாகும்..? நல்ல நேரத்தில் செய்வதால் தீய செயல் நல்ல செயலாக மாறிவிடுமா..? நல்ல நேரத்தில் திருடுவதால் அகப்பட மாட்டாரா..? நல்ல நேரத்தில் பாலியல் வன்முறை செய்வது குற்றமாகாதா..?

இதை நன்றாக சிந்தித்துப் பார்த்தால் நல்ல செயல் அல்லது கெட்ட செயல் என்பது மட்டுமே உண்டு என்பது புரியும்.  நல்ல நேரம், கெட்ட நேரம் என்று எதுவும் இல்லை. கெட்ட நேரத்திலும் பூக்கள் மலர்கின்றன. நல்ல நேரத்திலும் கொலை நடக்கிறது.

நல்ல நேரம் குறித்து இந்து மதத் துறவி விவேகானந்தர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா..?

காத்திருப்பதால் வருவது நல்ல நேரம் இல்லை, மனிதர்கள் உருவாக்கிக்கொள்வதே நல்ல நேரம் என்கிறார்.

எனவே, நல்ல நேரம், கெட்ட நேரம் என்று நேரத்தைப் பிரிக்காதீர்கள். ஒரு விநாடியின் மகிமையை ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது வந்தவர் அறிவார். ஒரு நிமிடத்தின் மகிமையை ரயிலை கோட்டை விட்டவர் அறிவார். ஒரு மணி நேரத்தின் மகிமையை விபத்து பிரிவு மருத்துவர்கள் அறிவார்கள். ஒரு நாளின் மகிமையை அன்றாடக் கூலிக்காரர் அறிவார். ஓர் ஆண்டின் மகிமையை படிப்பில் ஃபெயில் ஆன மாணவன் அறிவார். எனவே, எல்லா நேரமும் நல்ல நேரம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment