• Home
  • பிரபலங்கள்
  • தலித் தலைவர் அம்பேத்கரை எல்லோரும் கொண்டாட வேண்டுமா..?

தலித் தலைவர் அம்பேத்கரை எல்லோரும் கொண்டாட வேண்டுமா..?

Image

அப்படி என்ன செய்துவிட்டார்?

கடவுள் இல்லை என்று கூறிய கெளதம புத்தரை, இன்று கடவுளாக வழிபடுகிறார்கள். அதேபோல் ஜாதி ஒழிய வேண்டும் என்று போராடிய அம்பேத்கரை, இன்று ஜாதித் தலைவராக மாற்றி விட்டார்கள்.

காந்தி, நேரு, நேதாஜி போன்ற தலைவர்களின் பெயரை பிள்ளைக்கு சூட்டுகிறார்கள், புகைப்படத்தை வீட்டில் மாட்டுகிறார்கள். ஆனால், அம்பேத்கர் பற்றி பேசுபவர், அம்பேத்கர் படம் வைத்திருப்பவரை அறிவுஜீவி என்று பார்க்காமல், பட்டியலினம் என்று முத்திரை குத்துகிறார்கள். சாக்ரடீஸ், புத்தர், கார்ல்மார்க்ஸ் வரிசையில் போற்ற வேண்டிய ஒரு மாமேதையை, ஜாதித் தலைவராகச் சுருக்கியிருப்பது ஒரு வரலாற்றுப் பிழை.

தன்னுடைய ஜாதியை மட்டும் உயர்த்திப் பிடிப்பவரைத்தான், ஜாதித் தலைவர் என்று சொல்ல வேண்டும். அம்பேத்கர் பட்டியலின மக்கள் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், பெண்கள், தொழிலாளர்கள் என்று பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் போராடியவர். ஒட்டுமொத்த மனிதகுலம் மேன்மையடையவும் வழி காட்டியவர்.

ஜாதி பற்றி முழுமையாக ஆய்வு செய்து அழிப்பதற்கும் வழி காட்டியிருக்கிறார்.

ஒருவருக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுத்து அதிக வேலை வாங்குவதற்கு உருவானதே ஜாதி என்ற அமைப்பு. வேதம், சாஸ்திரம், சம்பிரதாயம், மனுநீதி என்றெல்லாம் சொல்லி ஜாதியை மதத்திற்குள் திணித்து நம்ப வைத்தார்கள். அந்தணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நிறைய படிநிலைகளை உருவாக்கினார்கள். தனக்குக் கீழே அடிமையாக ஒரு ஜாதி இருக்கிறது என்று ஒவ்வொருவரும் பெருமைப்படுவதாலே ஜாதி இன்னமும் அழியாமல் உள்ளது.

ஜாதி மறுப்புத் திருமணம், இட ஒதுக்கீடு, மதம் மாற்றம் போன்றவைகளால் ஜாதியை அழித்துவிட முடியும் என்று வழி காட்டியிருக்கிறார் அம்பேத்கர். இந்தியாவிற்கு சமத்துவம், சகோகதரத்துவம், சமூகநீதி கற்றுக்கொடுத்தவர்.

மற்ற எல்லாவற்றையும் விட் பெண்களுக்கு துணை நின்ற முதல் தலைவர் அம்பேத்கர். எல்லா மதங்களும் பெண்ணை இரும்பு சிறையில் தான் வைத்திருந்தது. சுதந்திரத்தை யாரும் தரமாட்டார்கள், பெண்களே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வழி காட்டி அழைத்துச்சென்றவர். ஆகவே, உலகப்பெரும் சிந்தனையாளர் என்ற கண்ணோட்டத்தில் அம்பேத்கர் கொண்டாடப்பட வேண்டியவர், அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லப்பட வேண்டியவர்.

Leave a Comment