எங்கே போகிறது சனாதனம்..?
சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கோஷமிட்டபடி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் இன்று உலகம் முழுக்க எதிரொலித்துள்ளது.

அப்படி என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார் வழக்கறிஞர் நிலா.
கஜூராஹோ (Javari) கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஒன்றின் தலை படையெடுப்பு காரணமாக துண்டாடப்பட்ட நிலையில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக தலை இல்லாத 7 அடி விஷ்ணு சிலையை சீரமைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தது.
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி தலைமை நீதியரசர் கவாய் மற்றும் நீதிபதி சந்திரன் அமர்வு அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்தது. அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி கவாய், ‘இது முழுக்க விளம்பரத்துக்காக தொடுக்கப்பட்ட வழக்கு. ஏதாவது செய்யும்படி நீங்கள் போய் அந்த சிலையிடமே வேண்டுகோள் வைக்கலாம். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்வீர்களானால், வேண்டுதல் செய்து தியானம் செய்யலாம்’ என்றார்.
சனாதன தர்மத்துக்கு எதிராக தலைமை நீதிபதி கவாய் கருத்து தெரிவித்துள்ளதாக விமர்சனம் எழுந்த நிலையில், “இந்திய தொல்லியல் துறை தான் அந்த குறிப்பிட்ட கோவிலை நிர்வகித்து, பராமரிக்கிறது. நான் அனைத்து மதங்களையும் நம்புபவன், மதிப்பவன்” என்று அடுத்த நாளே தமது கருத்துக்கு விளக்கமளித்த நீதிபதி கவாய், அதனை திரும்பப்பெற மறுத்துவிட்டார்.
கவாய் சனாதன தர்மத்தை அவமதித்துவிட்டார் என்று சிலர் கருத்து தெரிவித்தது சர்ச்சையாகி இருந்த நிலையில், இன்று சனாதன தர்மத்தை அவமதித்ததாக கூறி தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் செருப்பு வீசுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
சனாதனம் என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பது மிகப்பெரும் அச்சுறுத்தல் ஆகும். நீதிபதியின் கருத்துக்களை வழக்கறிஞர்கள் மதிக்கவில்லை என்றால் மக்கள் எப்படி மதிப்பார்கள்..?
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, செருப்பால் அல்ல.
- எம்.நிலா, சென்னை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.
