டச்யானா எனும் தேவதை
தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால், எந்தச் சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் நிற்பவர், அமெரிக்கப் பெண் டச்யானா. ஆம், பாஸ்டன், நியூயார்க், சிகாகோ, லண்டன் என்ற நான்கு நகரங்களில் நடைபெற்ற மாரத்தான் பட்டங்களை ஒரே ஆண்டில் பெற்றுத்தந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை இவர்.
டச்யானா, முதுகெலும்பில் துளை; இடுப்புக்குக் கீழே இயங்காத தன்மை போன்ற உடல் குறைகளுடன் மாற்றுத்திறனாளி குழந்தையாக, ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு தாய்க்கு மகளாகப் பிறந்தார். பிறந்து மூன்று வாரங்களே ஆன நிலையில் டச்யானாவுக்கு, அறுவை சிகிச்சை செய்யவிட்டால் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். மருத்துவச் செலவை உடனடியாக ஏற்கும் நிலையில் டச்யானாவின் தாயாருக்கு சூழல் அமையவில்லை. ஆனால், டச்யானா மருத்துவர்கள் சொன்ன மந்திரச் சொல்லையே மாற்றியமைத்தாள்.
அவர்கள் சொன்ன மூன்று வாரங்களுக்குப் பிறகும் டச்யானா உயிரோடு இருந்தார். அதனால், மருத்துவ உலகத்துக்கே ஆச்சர்யமாக இருந்தது. டச்யானாவின் தாயுமே அதைக் கண்டு அதிசயித்துப் போனாள். ஆனால், வேறு வழியின்றி அந்தக் குழந்தையை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் சேர்த்துவிட்டார். அவர் பிறந்த நேரம், அவரது அன்னை மட்டும் வறுமை நிலையில் இல்லை, அந்த இல்லமும் வறுமையிலே இருந்தது. உண்மையில், அந்த இல்லத்தால் டச்யானாவுக்கு ஒரு சக்கர நாற்காலியைக்கூட ஏற்பாடு செய்ய இயலவில்லை. அதனால், ஆறு ஆண்டுகள்வரை தன் கரங்களையே பாதங்களாகப் பயன்படுத்தி, பலரும் அதிசயிக்கும் வகையில் ஒரு பாடமாக அமைந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டிபோரா மெக்பேடன். அரசாங்க பணி காரணமாக ரஷியாவுக்கு வந்த டிபோரா, டச்யானாவைச் சந்தித்து அவரைத் தத்தெடுத்தார். ரஷிய மொழி மட்டுமே அறிந்திருந்த டச்யானா, ஆங்கிலம் பேசும் தாயாருடன் அமெரிக்காவுக்கு வந்துசேர்ந்ததும், சக்கர நாற்காலி ஒன்றை வாங்கிக் கொடுத்து சரித்திரத்தில் இடம்பிடித்தார், டிபோரா. பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சில அறுவைச்சிகிச்சைகளையும் மேற்கொண்டார். ஆனால், உடல் தேறியதே தவிர, அவரின் பாதி உடல் இயங்கும் வாய்ப்பை நிரந்தரமாக இழந்திருந்தது.
என்றாலும், அவர் மன உறுதியில் இருந்து விலகவில்லை. பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்த டச்யானா, ஓய்வு நேரங்களில் விளையாடவும் ஆரம்பித்தார். டச்யானாவின், தசைகளை வலுவாக்கினார் டிபோரா. இதனால் நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், சக்கர நாற்காலி கூடைப்பந்து, பனி சறுக்கு ஆக்கி, ஸ்கூபாடைவிங் என்று வரிசையாகக் கற்றுக்கொண்டு களத்தில் இறங்கினார், டச்யானா. இறுதியில் சக்கர நாற்காலி ஓட்டப்பந்தயத்தில்தான் அவரது ஆர்வம் நிலைகொண்டது. தன்னுடைய வலுவான தோள்கள் மூலம் எளிதில் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தார், டச்யானா.
15 வயதில் மாற்றுத்திறனாளிகளுக்கான கோடை ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்ற டச்யானாவின் வெற்றி வேகத்தை இன்றுவரை குறைக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகளில் தங்கப்பதக்கம் பெற்று உலகச் சாம்பியனாக மாறியதோடு, 100 மீட்டர் பந்தயத்தில் புதிய சாதனையையும் படைத்தார், டச்யானா.
‘எந்த குழந்தை உயிர் பிழைக்காது’ என்று சொன்ன மருத்துவர்கள்தான், இன்று டச்யானாவின் உயிர் பிழைத்த அதிசயத்தைக் கண்டு உலகில் மெச்சுகின்றனர். தவிர டச்யானாவின் தாயாரும், ஆதரவற்ற இல்லமும்கூட அவர் வாங்கி அடுக்கியிருக்கும் தங்கப் பதக்கங்களை வாய்பிழந்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
தன்னம்பிக்கைக்கு உதாரணம், டச்யானா!