காமராஜர் நினைவலைகள் – 17
குழந்தைகளின் பசியைப் போக்கி எழுத்தறிவிக்கக் காமராஜ் செயல்படுத்திய மதிய உணவு திட்டம், மக்களிடையே அறிவை மட்டும் வளர்க்கவில்லை, பல்வேறு இனத்தை சேர்ந்த பிள்ளைகளை ஒன்றாக அமர்ந்து உணவு அருந்த செய்தது. அதனால் அக்காலத்தில் நிலவி வந்த ஜாதிப்பாகுபாடுகள் மலிந்தன.
கல்வி என்பது, உயர் குடிப் பிறந்தோர்கள் மற்றும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்ற நிலைமை மாறியது. கல்வி கற்பது எளிதாக்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கும் இலவசக் கல்வி என்றானது.
பெண் கல்வி பெருகியது, கிராமங்களில் கூடப் பெண் பிள்ளைகள் கல்வி கற்க முற்பட்டார்கள். கையெழுத்துப் போடு என்று காட்டினால், இடது கைக்கட்டை விரலை நீட்டுகிறவர்கள் தான் அந்தக் காலத்தில் ஆண்களிலும், பெண்களிலும் அதிகமாக இருந்தார்கள். இந்த நிலை மாற இளைய தலைமுறையினர் காமராஜர் ஆட்சியால் கல்வி நலம் பெற்றார்கள்.
சீருடைத் திட்டத்தினால் பள்ளிகளில் ஏழை, பணக்காரன் பிள்ளைகள் என்கிற பாகுபாடுகள் நீங்கின. மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வுகள் மேலோங்கின. இந்த மாற்றம் சமுதாயத்தில் காமராஜர் நிகழ்த்திக் காட்டிய பெரிய மாற்றம்.
மிகவும் பின் தங்கிய சமுதாயத்தினர்களும், ஏழை, எளியவர்களும் கூடத் தங்களது பிள்ளைகளைப் பள்ளிகளுக்குத் தயங்காது அனுப்பி வைத்தார்கள். ‘வீட்டில் இருந்தால்தான் பசி, பட்டினி – பிள்ளை பள்ளிக்கூடம் சென்றாலாவது நாலு எழுத்துக் கற்றுக்கொள்ளும் – மதியமும் வயிறாரச் சாப்பிட்டுக்கொள்ளும்’ என்று நினைத்துத் தங்களது பிள்ளைகளைத் தயங்காது பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.
- நாளை பார்க்கலாம்
