• Home
  • சட்டம்
  • ரயில்வே பாலம் அருகே வீட்டுமனை வாங்கலாமா..?

ரயில்வே பாலம் அருகே வீட்டுமனை வாங்கலாமா..?

Image

வாங்குங்க தடையில்லா சான்று

வீடு வாங்குவதே சாதாரண மனிதனின் பெரிய கனவாக இருக்கும்போது இன்றைய சூழ்நிலையில், குடியிருப்பு வீடுகளை எங்கு கட்டக்கூடாது, எங்கு கட்ட வேண்டும் என்பதை, ஒழுங்குமுறைப்படுத்த ஓர் அங்கீகார அமைப்பு தேவைப்படுகிறது. உதாரணத்துக்கு விமான நிலையத்துக்கு அருகில் எவ்வளவு தூரத்தில் வீடு அமைய வேண்டும், அதற்கு என்ன நிபந்தனைகள் இருக்கின்றன, அதற்காக யார் யாரிடம் தடையில்லாச் சான்றிதழ்கள் பெற வேண்டும் என வீட்டுமனை வாங்கும் சிலருக்குத் தெரிவதில்லை.

 இதுகுறித்து வழக்கறிஞர் நிலாவிடம் பேசினோம்.  “இன்றையச் சூழ்நிலையில் நகரங்களைவிட கிராமங்களில்தான் வீட்டு மனைகள் அதிகளவில் விற்பனையாகின்றன. அதற்குக் காரணம், நகரங்களில் காலி மனைகளே இல்லை எனும் அளவுக்கு எல்லாமே, வீடுகளாகவும், கட்டடங்களாகவும் இருக்கின்றன. இந்த நிலையில், கிராமப் பகுதிகளில் பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற  வீட்டு மனை என்று ரியல் எஸ்டேட் தரகர்கள் கூறினால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  ஏனென்றால், உண்மையில் மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்க கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் இல்லை.
உள்ளூர் திட்டக் குழு மற்றும் டி.டி.சி.பி-தான் லேஅவுட்களை அங்கீகரிக்கின்றன. 5 ஏக்கர் பரப்பளவு வரை உள்ளூர் திட்டக்குழுவின் அதிகாரத்துக்குள் வரும். ஐந்து ஏக்கருக்கு மேற்பட்ட லே அவுட்டை அங்கீகரிக்கும் அதிகாரம் டி.டி.சி.பி-யின் வரம்புக்குள்ளும் வருகிறது. ஆகவே, நாம் வீட்டு மனை வாங்கும் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். வீடு வாங்கும் ஆர்வத்தில் நாம் பலவற்றைத் தவற விட்டுவிடுகிறோம். குறிப்பாக, மனை லேஅவுட்டுக்கு என்னென்ன நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு அங்கீகாரம் அளிக்கிறது என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட நிலம் புறம்போக்கு இல்லை என்று தடையில்லாச் சான்று பெறுதல் அவசியம். நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அரசு அறிவிக்கை எண் 4(1)-ன் படியும், நிலச் சீர்திருத்த சட்டம் (1961), நில உச்ச வரம்பு சட்டம் (1978)-ன் கீழ் வராமலும் இருக்கவேண்டும். பருவ மழைக் காலத்தில் மனைப் பகுதியில் வெள்ளம் வந்திருக்கக் கூடாது.

தாசில்தாரிடமிருந்து நில அளவை புத்தகம்/ நகர சர்வே வரைபடம்; பட்டா/ சிட்டா/ நகர சர்வே நில ஆவணங்கள்; கிராம வரைபட நகல், நிலம் அமைந்திருக்கும் பகுதி வழியாகச் செல்லும் நீர்த்தடம் பற்றிய விவரங்களையெல்லாம் அரசு ஆராயும்.
2,500 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவுள்ள நிலத்துக்கு, திறந்தவெளி ஒதுக்கீட்டுக்காக 10 சதவீதத்துக்கு மேல் இடம் ஒதுக்க வேண்டும். அதை வரைபடத்திலேயே காட்ட வேண்டியது அவசியம். குறிப்பிட்ட நிலத்தின் வழியாக மின்சாரம்/ தொலைபேசி இணைப்பு தடம் இருக்குமானால், அதை மாற்றுவதற்கான அங்கீகாரத்துக்கு 20 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தீர்வையை அளிப்பது முக்கியம்.
இதுதவிர, வீட்டு மனை வாங்கும்போது அருகில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதையும்  ஆராய்ந்து பார்த்தே வாங்க வேண்டும். ஏனென்றால், மனையோ … நிலமோ குறிப்பிட்ட இடங்களுக்கு அருகில் இருந்தால், அதற்கெல்லாம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். குளமோ, ஏரியோ 15 மீட்டர் தூரத்தில் இருந்தால் பொதுப்பணித் துறையிடமும், ரயில்வே இருப்புப் பாதைக்கு 30 மீட்டர் அருகில் இருந்தால் ரயில்வே துறையிடமும், குப்பைக் கிடங்கு அருகில் இருந்தால் உள்ளாட்சித் துறையிடமும்,  மயான பூமி/ சுடுகாட்டுக்கு 90 மீட்டருக்கு அருகில் இருந்தால் சுகாதாரத் துறையிடமும், கல்குவாரிக்கு 300 மீட்டர் தூரத்துக்குள் இருந்தால்  சுரங்கத்துறையிடமும், விமான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் மனை இருந்தால் விமான நிலைய ஆணையத்திடமும் கட்டாயம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும்.
இது தவிர, கடைசியாக 30 ஆண்டுகளுக்கு வில்லங்கமில்லாச் சான்றிதழும் அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையும் தேவைப்படும். கிராம, நகரப் பகுதிகளில் மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற நிபந்தனைகள் இருப்பதைபோல மலைப் பிரதேசங்களில் சிறப்பு நிபந்தனைகள் உள்ளன. மலைப் பகுதிகளில் மனைப் பிரிவு அமைக்க வேளாண்மைப் பொறியியல் துறையிலிருந்தும், மாவட்ட வன அதிகாரியிடமிருந்தும் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது அவசியம். மேலும், நிலவியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரிடமிருந்து நிலவியல் தொழில்நுட்ப அறிக்கையும் வாங்க வேண்டும்” என்றார், மிக விவரமாக.
தடையில்லாமல் வாழ தடையில்லாச் சான்றும் அவசியமுங்கோ…

Leave a Comment