வீட்டுக்கு வீடு நடக்குதுங்க
படுக்கை அறையில் தங்களுடைய விளையாட்டுப் பொம்மையாகவே மனைவியை நிறைய ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை இது.
இளம் பெண் ஒருவர் செல்போனில் கவுன்சிலிங்கிற்கு வந்தார். ‘’என்னுடைய பெயர் டெய்சி. எனக்கு 35 வயதாகிறது. என் தந்தை ஓரளவுக்குப் பணக்காரர். அவரை விட அதிகம் பணக்காரர் என்று என் கணவரைக் கட்டி வைத்தார்கள். 23 வயதில் திருமணம் முடிந்து 26 வயதுக்குள் இரண்டு பிள்ளைகள் பெற்றுவிட்டேன். வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். இப்போது அவர்கள் படிப்பதற்கும் படுப்பதற்கும் தனி அறை ஒதுக்கிவிட்டோம்.

ஆகவே, இரவு நேரத்தில் இப்போது நான் வெறுமையை உணர்கிறேன். மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டும் என் கணவருக்கு விருப்பம் இருக்கும் நாட்களில் மட்டுமே என்னுடன் உறவு கொள்கிறார். அதுவும் அவசரம் அவசரமாக இயங்கிவிட்டு என் ஆசையைத் தூண்டிவிட்டு உறங்கிவிடுகிறார். எனக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதை எல்லாம் அவர் யோசிப்பதே இல்லை. ஒரு சில நாள் நான் மறுத்தாலும் அவர் விடுவதில்லை. என் விருப்பமில்லாமலே என்னுடன் உறவு கொள்கிறார்.
அதேநேரம், நான் ஆர்வமாக இருக்கும் நேரத்தில் அவருக்குக் காத்திருந்தாலும் பலன் இருப்பதில்லை. பெரும்பாலும் மறுத்துவிடுவார் அல்லது அவசரமாக இயங்கிவிட்டு தள்ளிப்படுத்து தூங்கிவிடுகிறார். இப்போது தனிமை அதிகரித்திருப்பதால் பாலியல் படங்கள் பார்த்து வருகிறேன். இதை பார்க்கும்போது எனக்கு ஆசை அதிகரிக்கிறது. காமத்தில் திசை மாறிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. உடல் ஆசையை அடக்குவதற்கு வழி காட்டுங்கள்’’ என்று கேட்டார்.
‘ஆசையை அடக்குவது ஆபத்து. எனவே அனுபவித்துவிடுங்கள்…’’
‘’அது தான் முடியவில்லை. கணவருடன் நன்றாகப் படுக்கையை அனுபவிக்கும் ஆசை வருகிறது. ஆனால், அவருக்கு அப்படியொரு எண்ணமே இல்லை. என்னுடைய ஆசையைச் சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கிறார். ‘நல்ல குடும்பப் பொண்ணு மாதிரி பேசு… பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டார்கள்’ என்று அட்வைஸ் செய்கிறார்.
அதேநேரம், அவருக்கு ஆசை வந்தால் மட்டும் வேகமாக வந்து என் உடலைப் பயன்படுத்திக் கொள்கிறார். இது எனக்கு அவமானமாக இருக்கிறது. என்னுடைய விருப்பத்தைக் கேட்பதே இல்லை. அது என்னை பாலியல் பலாத்காரம் செய்வது போல் கொடுமைப்படுத்தவும் செய்கிறார். அதை எல்லாம் நான் தாங்கிக்கொள்கிறேன். ஆனால், எனக்கு ஆசை வரும் நேரத்தில் அவரை தொடக்கூட முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் என் கணவர் மூலம் நான் முழுமையாக இன்பத்தை அனுபவித்ததே இல்லை…’’ என்றார்.
’’உங்களுக்கு என ஒரு பிஸியான வாழ்க்கை அமைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணங்களில் இருந்து ஓரளவு விடுதலை கிடைக்கும். ஆனால், நிரந்தர விடுதலை வேண்டும் என்றால் நீங்கள் தான் தைரியமாகக் கேட்க வேண்டும்…’’
‘’ஒரு குடும்பப் பெண் இப்படி பேசுவது தவறா என்றும் எனக்குப் புரியவில்லை. காசுக்கு அலையும் பெண்கள் தான் இப்படிப் பேசுவார்கள், ஆர்வமாக இருப்பார்கள் என்று என் கணவர் சொல்வது உண்மையாக இருக்குமோ என்றும் எண்ணவும் தோன்றுகிறது. அதேநேரம், இத்தனை பணம் இருந்தும் எதையும் அனுபவிக்காமல் எதற்காக வாழ வேண்டும் என்றும் தோன்றுகிறது. இந்த ஆசை அதிகம் இருப்பதால் எனக்குக் கடவுளைக் கும்பிடவும் பயமாக இருக்கிறது, நான் தவறு செய்யாமலே தவறு செய்தவள் போன்று உணர்கிறேன்’’ என்றார்.
‘’இன்பம் எதிர்பார்ப்பது தவறு இல்லை. அது தவறு என்றால் இயற்கை அப்படி உடலை படைத்திருக்காது. அதனால் நீங்கள் காமம் எதிர்பார்ப்பது தவறு இல்லை. எனவே வெளிப்படையாகப் பேசுங்கள். நீங்கள் எனக்கு சுகம் அளிக்க மறுத்தால் நான் விவாகரத்து செய்துவிட்டு வேறு ஆணைத் தேடுவேன் என்று எச்சரிக்கை செய்யுங்கள்….
அதேநேரம், பெண்களை தங்கள் அடிமையாகவே நிறைய ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கும் உணர்வு இருக்கும், ஆசை இருக்கும் என்றெல்லாம் யோசிப்பதே இல்லை. மேலும், பெண் உடலில் எங்கே இன்பம் ஒளிந்திருக்கிறது என்பதும் தெரிவதில்லை. அதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்குவதில்லை. தங்கள் ஆசை முடிந்ததும் பெண்ணுக்கும் இன்பம் கிடைத்துவிட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். இது ஒரு மோசமான சுயநலம் என்பதை அப்பட்டமாகப் புரிய வையுங்கள்.
படுக்கையில் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும் வகையில் முன்விளையாட்டில் ஈடுபடுவதற்கான வழிகளைக் கண்டுபிடியுங்கள். இவற்றை எல்லாம் உங்களால் பேச முடியவில்லை என்றால் உங்கள் கணவரை மருத்துவரிடம் அல்லது கவுன்சிலிங் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் ஆசைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் ஆண்மை இல்லாதவர் என்பதை வெளியில் சொல்ல வேண்டியிருக்கும் என்று உறுதியுடன் சொல்லுங்கள். இதில் கண்டிப்பாக கணவர் வழிக்கு வந்துவிடுவார். ஏனென்றால், ஆண்கள் ஊருக்குத் தான் அதிகம் பயப்படுகிறார்கள்…’’
‘’இப்படியெல்லாம் பேசினால் என் கணவர் என்னை விவாகரத்து செய்துவிட வாய்ப்பு இருக்கிறது. எனக்கு குழந்தைகள் முக்கியம், குடும்ப வாழ்வு முக்கியம்…’’
‘’உடல் ஆசைக்கு ஆசைப்பட்டால் பேசுங்கள். ஆசையை விட பாசம் முக்கியம் என்று நினைத்தால் தனிமையில் இன்பம் காண்பதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். மனதை வெவ்வேறு வழிகளில் திசை திருப்புங்கள். புதிதாக நீங்கள் ஒரு தொழில் தொடங்குங்கள். நிறைய சிக்கல் வரும். அதன் பிறகு உங்களுக்கே அப்படிப்பட்ட ஆசை வராமல் போகலாம்…’’
’’ஆசை வராமல் அடக்குவதற்கு ஏதேனும் மருந்து இருக்கிறதா..?’’
‘’வயிற்றுப் பசிக்கு மட்டுமல்ல உடல் பசிக்கும் மருந்து கிடையாது. ஆனால், நீங்கள் செய்வதற்கு வேறு ஒரு விஷயம் இருக்கிறது..?’’
‘’என்ன அது..?’’
‘’உங்கள் கணவர் ஆசையுடன் நெருங்கும் நேரத்தில் நீங்கள் முடியாது என்பதை உறுதியாகச் சொல்லுங்கள். பிள்ளைகளை எழுப்பிவிடுவேன் என்று அச்சமூட்டுங்கள். அவருக்கு ஆசை நிறைவேறவில்லை என்றால் மட்டுமே யோசிப்பார். அது உங்களுக்கு ஒரு வேளை சாதகமாக மாறலாம்…’’ என்றதும் போனை வைத்துவிட்டார். அதன் பிறகு அவரிடம் இருந்து போன் வரவே இல்லை.
இவர் போன்று தான் நம் நாட்டில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பெண்கள் இருக்கிறார்கள். படுக்கையறையில் கணவனை எதிர்க்க முடியாமல் தோற்றுப் போகிறார்கள். அதேநேரம், தங்கள் நிறைவேறாத காமத்தை எல்லாம் கோபமாக மாற்றி பிள்ளைகளுடன், கணவனுடன் சண்டை போடுகிறார்கள். பள்ளிகளில் பாலியல் கல்வியை புகுத்த வேண்டிய காலம் இது. குறிப்பாக ஆண்கள் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர். 9840903586