தினமும் ஒரு மணி நேரம் அவசியம்
குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. டாக்டராக, இன்ஜினியராக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக தங்கள் பிள்ளை மாறவேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுவது நியாயம்தான். அதற்காக நல்ல பள்ளியில் சேர்ப்பது, சிறந்த கோச்சிங் சென்டருக்கு அனுப்புவது, கண் விழித்து படிக்கும் குழந்தைக்கு அவ்வப்போது டீ போட்டு கொடுப்பது, கடன் வாங்கியாவது செலவழிப்பது என்று பெற்றோர் எவ்வளவோ செய்கிறார்கள்.

ஆனால், அடிப்படையான ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். ஆம், பிள்ளையின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். இதற்காக அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஆம், தினமும் ஒரே ஒரு மணி நேரம் மட்டும் பிள்ளைகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.
விளையாண்டால் உடல் களைத்துவிடும், படிப்பில் மனம் செல்லாது, அதிகம் தூக்கம் வரும் என்று சொல்லப்படுபவை எல்லாமே கட்டுக்கதைகள். ஆம், விளையாண்டால் மனம் புத்துணர்வு பெறும். உடலும் மனதும் ஒருங்கிணைந்து செயல்படும். வெற்றி, தோல்விகளைக் கண்டு அச்சப்படும் நிலை வராது. மற்ற மாணவர்களுடன் இணைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். இவை எல்லாவற்றையும்விட, ஞாபகசக்தி அதிகரிக்கும். நேர மேலாண்மையை இளம் வயதிலேயே கற்றுக்கொள்ள முடியும். இரண்டு மணி நேரத்தில் படிப்பதை, அரை மணி நேரத்தில் படித்து புரிந்துகொள்ள முடியும்.
உடல் ஆரோக்கியமாகத் திகழும் என்பதால் எளிதில் தொற்றுநோய்களும், சீஸன் நோய்களும் தாக்காது. இத்தனை நன்மைகள் இருப்பதால் தினமும் பிள்ளைகளை குறைந்தது ஒரு மணி நேரமாவது விளையாட பழக்கப்படுத்துங்கள். அது, என்ன விளையாட்டாக இருந்தாலும் பரவாயில்லை. நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், ஹாக்கி, ஸ்கேட்டிங் என அவர்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டை சந்தோஷமாக விளையாடட்டும். இந்த விளையாட்டு என்றில்லை, அவர்களாக மனதுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்று விளையாடட்டும். செல்போன் இல்லாமல் ஒரு மணி நேரம் செலவழிக்கட்டும்.
தினமும் ஒரு மணி நேரம் விளையாடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆயுள் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைவிட அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுடன் பழகவும், விளையாடும் செய்யும் பிள்ளைகளுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், எதையும் தாங்கும் இதயமும் கிடைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
இதைவிட வேறு என்ன வேண்டும். பிள்ளைகளை விளையாட அனுப்புங்கள்.
எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
தொடர்புக்கு : 9840903586