• Home
  • அரசியல்
  • அமித்ஷாவுக்கு சீமான் எசகுபிசகான கேள்வி

அமித்ஷாவுக்கு சீமான் எசகுபிசகான கேள்வி

Image

அம்பேத்கர் வணக்கம் எல்லாம் நடிப்புதானா..?

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக அமித் ஷாவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு மிகப்பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்கு நாம் தமிழர் சீமானும் கடும் எதிர்ப்பு காட்டியிருக்கிறார். இன்று அவரது அறிக்கையில், ‘’அம்பேத்கர்! அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ‘பேஷன்’ ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும்” என்கிறார் அமித்ஷா. உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும். அதற்காக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் அவர்கள். “அழகும், நிறைவும் கொண்ட வாழ்க்கையை சொர்க்கத்தில் அல்லாது நாம் வாழ்கிற பூமியில் படைக்கப் பாடுபடுகிறேன்” என்றார் பொதுவுடமைத் தத்துவத்தின் பிதாமகன் எங்கள் ஐயா ஜீவானந்தம்.

அப்படியொரு சொர்க்கத்தில் எப்படியெல்லாம் வாழலாம் என்று சொல்லி வைத்தார்களோ, அப்படியெல்லாம் இப்போது வாழுகின்ற பூமியிலேயே தன் மக்களை வாழ வைக்க அரும்பாடாற்றியவர் சட்டமேதை அம்பேத்கர். “எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள். அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தவர்தான் அங்கு வென்றார், இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் யார் பெயரை உச்சரிக்க?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அமித் ஷா பேசியதை வைத்து திசை திருப்ப வேண்டாம் என்று மோடி கொதிக்கிறார். தமிழக பா.ஜ.க.வினர், ‘’டாக்டர் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜனசங்க காலம் முதல் டாக்டர் அம்பேத்கரை போற்றி வருகிறது பாஜக டாக்டர் அம்பேத்கர் மீது உண்மையான மரியாதை இருந்தால் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை திமுக துணை முதலமைச்சராக்க வேண்டும்’ என்று சம்பந்தமில்லாமல் உருட்டுகிறார்கள்.

.ஆனாலும், அமித்ஷா பற்ற வைத்த தீ கொளுந்துவிட்டு எரிகிறது. அம்பேத்கர் பற்றி அதிகம் பேசிய விஜய் எப்போது கருத்து தெரிவிப்பார் என்பது தான் யாருக்கும் தெரியவில்லை.

Leave a Comment