ஞானகுரு மந்திரம்
மனைவியுடன் வந்து ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். ‘’நாங்கள் இருவரும் வேலை செய்கிறோம். செலவுகளைத் தாண்டியும் பணம் கையில் இருக்கிறது. இவற்றை என்ன செய்வது..?” ஆர்வமுடன் கேட்டார் மகேந்திரன்.
‘’பணத்தை விதையாக்கு’’ என்றார் ஞானகுரு. புரியவில்லை என்று மகேந்திரன் விழிக்கவே, பேசத் தொடங்கினார்.
‘’விதையின் தன்மை என்ன தெரியுமா? அதற்குள் ஒரு மரம் உறங்கிக்கொண்டு இருக்கிறது. அந்த மரத்தின் விதைக்குள் ஆயிரக்கணக்கான மரங்கள் ஒளிந்திருக்கின்றன. அத்தனை விதைகளையும் நிலத்தில் விதைத்தால் இந்த உலகத்தையே மரங்களால் நிரப்பிவிட முடியும்.
சொல்வது எளிது. ஆனால், விதைகள் தானே முளைத்துவிடுவதில்லை. ஆம், சரியான இடத்தில் நீ விதைக்க வேண்டும். அந்த விதைக்கு தண்ணீர் வேண்டும். செடியாக வளரும்போது சூரிய ஒளி வேண்டும். ஆடு, மாடுகள் அதனை தின்றுவிடாமல் பராமரிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும்விட, அந்த விதை மரமாக முளைத்து பழம் தரும் வரையிலும் காத்திருக்கும் பொறுமை வேண்டும். இத்தனையும் செய்தால், அந்த விதை போதிய பலனைக் கொடுத்துவிடும்…’’
’’அப்படியென்றால் பணத்தை முதலீடு செய்ய வேண்டுமா..?”
‘’ஆம். அதேநேரம் மரமாக மட்டும் வளர்த்துவந்தால் உன் அவசரத் தேவைக்கு பயன்படாது. அதனால் உடனடியாக பலன் தரும் கீரை, காய்களை பயிர் செய். ஒருசில வருடங்களில் பலன் தரும் பழ மரங்களும் நல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு உறுதியான பலன் தரும் மரங்களும் தேவை. முட்டைகளை ஒரே கூடையில் வைக்காமல் பல இடங்களில் பாதுகாத்து வை…’’
‘பணத்துக்கு என்ன பாதுகாப்பு..?’’
‘’நம்பிக்கை மட்டுமே பாதுகாப்பு. ஒரு விதை பழுது என்றாலும் நான்கு பலன் கொடுக்கும். உன் செலவுக்கு மீறிய பணத்தைப் பற்றிய கவலை உனக்கு எதற்கு..? விதைத்துவிட்டு கவனமுடன் வேடிக்கை பார். நீ நல்ல பண விவசாயியாக மாறிவிடுவாய். உன்னுடைய மரத்தில் இருந்து பணம் கொட்டிக்கொண்டே இருக்கும்..”
சந்தோஷமாக திரும்பினர் தம்பதிகள்.