அதிக மாணவர்களுக்கு உதவித் தொகை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 157

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தான் மாநகராட்சிப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் படிக்கிறார்கள். இவர்களில் தகுதியும் திறமையும் போதிய மதிப்பெண் வாங்கிய அனைவருக்கும் உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்க வேண்டியது மிகவும் முக்கியம் என்பது மேயர் சைதை துரைசாமியின் கொள்கையாக இருந்தது. ஏனென்றால், மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்த நேரத்தில் கடமைக்காக சுமார் 100 பேருக்கு மட்டுமே அந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.  

இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதுடன் எண்ணிக்கையின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கக்கூடாது என்பதற்காகப் போராடினார் மேயர் சைதை துரைசாமி. எண்ணிக்கை அடிப்படையில் உதவித் தொகை வழங்கினால் மாணவர்களின் உயர் கல்வி கனவு கருகிப் போய்விடும் என்பதால், தகுதியும் திறமையும் கொண்ட அனைவருக்கும் மாநகராட்சியில் இருந்து நிதி ஒதுக்குவதில் தன்னுடைய ஐந்தாண்டு காலமும் சிரத்தை எடுத்துக்கொண்டார். இந்த வகையில் தகுதி படைத்த அனைத்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

மாநகராட்சிப் பள்ளி முடித்த மாணவர்கள் மருத்துவம், பொறியியல், சட்டம், கலைக்கல்லூரி, நர்ஸிங் டீச்சர் டிரெயினிங், டிப்ளமோ போன்ற அனைத்து வகை உயர் கல்விக்கும், அவர்கள் படிக்கும் காலம் வரையிலும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்கள் படிப்புக்கு ஏற்ப 5,000 ரூபாயில் இருந்து 45,000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்பட்டது.

மேயர் சைதை துரைசாமி பதவி ஏற்ற முதல் வருடம் 301 மாணவர்களுக்கு 26 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.. அடுத்தடுத்த வருடங்களில் உதவித்தொகை பெறும் நபர்களின் எண்ணிக்கையும், அவர்களுக்குக் கொடுக்கப்படும் உதவித் தொகையின் அளவும் அதிகரிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்தார். சைதை துரைசாமியின் மேயர் பதவியின் கடைசி ஆண்டில் 879 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைத்தது. அதாவது முதல் ஆண்டு 26 லட்சமாக இருந்த உதவித்தொகை, 2016-ம் ஆண்டு 2 கோடியே 16 லட்சத்து 41 ஆயிரமாக உயர்ந்தது.

தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைத்தே தீரவேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி பிடிவாதமாக இருந்த காரணத்தால் தான், மாநகராட்சி இத்தனை பெரிய தொகையை மாணவர் நலனுக்காக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment