சரத்குமார் 150 வயது ஆரோக்கிய ரகசியம்

Image

உடல்நல நம்பிக்கை

தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பை ஃபிட் ஆக வைத்துக்கொள்வது மட்டும் ஆரோக்கியத்திற்கு போதுமானது இல்லை என்கிறார் நடிகர் சரத்குமார். சிக்ஸ் பேக், எய்ட் பேக் வைப்பதை விட உடல் உள்ளுறுப்புகளைக் கவனிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் 150 ஆண்டுகள் வாழ்வது சாத்தியம் என்று நம்பிக்கை தருகிறார்.

யார் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே எந்தவொரு விஷயமும் முக்கியத்துவம் அடைகிறது. அப்படித்தான் நடிகர் சரத்குமார், ‘’நான் 150 வயது வரையில் உயிருடன் வாழ்வேன்…’’ என்று நம்பிக்கையுடன் பேசியது முக்கியத்துவம் அடைந்தது.

எந்த மனிதரும் 150 வயது வாழ்ந்தது இல்லை, சும்மா டூப் விடுகிறார் என்று சிலர் சரத்குமாரை கிண்டல் செய்தாலும், நிறைய பேர் சரத்குமார் பேச்சில் உண்மை இருக்கலாம் என்று நம்புகிறார்கள். ஏனென்றால், அதுவே அவரது இளமை ரகசியம். இப்போது சரத்குமாருக்கு வயது 70. ஆனாலும், 25 வயது இளைஞனைப் போலவே சுறுசுறுப்பாக இருக்கிறார். இந்த வயதிலும் உடற்பயிற்சிகள் செய்வதையும் டயட் மேற்கொள்வதையும் ஒரு தவம் போன்று கடைபிடிக்கிறார்.

1974-ஆம் ஆண்டு மிஸ்டர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி பட்டத்தை வென்றவர். பள்ளி மற்றும் கல்லூரியில் ஹாக்கி, ஃபுட்பால், கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வென்றுள்ளார். 1970ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டவர் என்பதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், அவரது உடற்கட்டு.

தினகரன் பத்திரிகையில் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய சரத்குமார், அதன் பிறகு சினிமா கனவுடன் கோலிவுட்டில் குதித்தார். ’புலன் விசாரணை’ படத்தில் வில்லனாக அறிமுகமான சரத்குமார் விரைவிலேயே கதாநாயகனாக மாறினார். சூரியன், நாட்டாமை, சூரியவம்சம் போன்ற சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்து முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறினார். அதன் பிறகும் முக்கியமான வேடங்களில் நடித்து சினிமாவில் தன்னுடைய பயணத்தை இன்று வரையிலும் வெற்றிகரமாகத் தொடர்கிறார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், விஜய்யுடன் வாரிசு போன்ற படங்களில் நடித்து, இப்போது வெளியாகியுள்ள, ‘தி ஸ்மைல் மேன்’ மூலம் 150வது படத்தை நடித்து முடித்திருக்கிறார்.

நடிகராக மட்டுமே பலரும் அறிந்திருந்த சரத்குமாரை கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஒரு அறிவுஜீவியாகவும் அடையாளப்படுத்தியது. விஜயகாந்த் போலவே சினிமா தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டுபவர் என்பதாலே நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்தார். மக்கள் நலனிலும் பொதுவாழ்விலும் ஆர்வம் காட்டினார். எனவே தி.மு.க., அ.தி.மு.க.வில் பயணித்தவர் அங்கிருந்து வெளியேறி, ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ தொடங்கினார். அதனை கலைத்துவிட்டு இப்போது பா.ஜ.க.வில் பயணித்துவருகிறார்.

உடல் நலன் என்றதும் ஆர்வமாகப் பேசுகிறார் சரத்குமார், ‘’புனீத் ராஜ்குமார் எனக்கு நெருக்கமான நண்பர். அவரது மரணம் ஆரோக்கியத்தில் நிறைய பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, தினமும் உடற்பயிற்சி செய்வதால் மட்டும் நூறு சதவிகிதம் ஃபிட்டாக இருந்துவிட முடியாது என்பதைப் புரிய வைத்திருக்கிறது. அதாவது உடலுக்குள் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. சிக்ஸ் பேக் வைத்திருந்தாலும், எய்ட் பேக் வைத்திருந்தாலும் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியப்போவதில்லை. எனவே ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது மூன்று முறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.

ஏனென்றால் எல்லோருடைய வாழ்க்கை முறைகளும் தலைகீழாக மாறியிருக்கின்றன. அதனால் சிறுநீரகம், இதயம் முதலான உடலின் உள் உறுப்புகள் இயக்கத்தில் சிக்கல் இருக்கலாம். எந்த காரணமும் இல்லாமல் இந்த பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஆகவே, அனைவருமே முழு உடல் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அனைவராலும் இதற்கு செலவழிக்க முடியாது என்பதால் அரசு இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாடு ஆரோக்கியமாக இருக்கும்.

நான் `பொன்னியின் செல்வன்’ படத்தில் பணியாற்றிய போது, கால் மடங்கியதால் என்னால் நடக்க முடியாமல் போனது. கடுமையான வலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அதன் பிறகு 10 கிலோ எடை அதிகரித்துவிட்டது. அறுவை சிகிச்சை காரணமாக ஓடுவது, டிரட்மில் பயிற்சி எடுத்துக்கொண்டு உடம்பைக் குறைப்பதற்கு வழியில்லை என்பதால் டயட் மூலம் உடலின் எடையைக் குறைத்துக்கொண்டேன்…’’ என்பதுடன் அவரது டயட் ரகசியத்தையும் சொல்கிறார்.

‘’உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் சிக்கன் போதும். டயட் மூலம் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் மதிய உணவாக இரண்டு துண்டு சிக்கன், இரவில் இரண்டு துண்டு சிக்கன் மட்டும் எடுத்துக்கொள்வேன். இதன் மூலம் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதோடு, எடையும் குறைந்துவிடும். மழை காலம், வெயில் காலம் என்றெல்லாம் கணக்கு பாராமல் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்துவிடுவேன்.

பொதுவாக என்னுடைய டயட் மிகவும் சிம்பிளாகவே இருக்கும். காலை எழுந்தவுடன் தண்ணீர் குடித்துவிட்டு 10 பாதாம் பருப்பு சாப்பிடுவேன். பிளாக் காபியில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிடுவதை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறேன். உடற்பயிற்சி செய்துவிட்டு 9 மணியளவில் 4 முட்டைகளின் வெள்ளைக்கரு எடுத்துக்கொள்வேன். தொடர்ந்து 11 மணியளவில் ஏபிஸி ஜூஸ் குடிக்கிறேன். ஏபிஸி என்பது ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ். இதில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பியுள்ளது.

மதிய உணவாக சிக்கனை வேகவைத்து அத்துடன் அதிகமான காய்கறிகளையும் வேக வைத்து மிளகு, உப்பு சேர்த்து சாப்பிடுவேன். சாதம், சப்பாத்தி போன்ற எதையும் எடுத்துக்கொள்வதில்லை. மாலை 4 மணியளவில் அவல், வேர்க்கடலை சாப்பிடுவேன். இரவு 7 மணியளவில் சிக்கன் அல்லது மட்டன் சூப் குடிப்பேன். பீனட் பட்டர் சேர்த்து ஒரு சப்பாத்தி அல்லது பாதாம் பால் எடுத்துக்கொள்வதுடன் இரவு உணவை முடித்துக்கொள்வேன். இந்த டயட் உணவை அவ்வப்போது மாற்றிக்கொள்வேன்.

உடலை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயத்தைப் போலவே செய்ய வேண்டாதவை குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் தூக்கத்தையும் காலை உணவையும் புறக்கணிக்கிறார்கள். அது, உடலுக்கு மிகப்பெரும் ஆபத்து. அதேபோல், நம்மால் கட்டுப்படுத்த இயலாத விஷயங்களை எண்ணி கவலைப்படக் கூடாது.

அதுபோல் மது அருந்துதல், புகை பிடித்தல் போன்றவைகளை செய்யவே கூடாது. இவை எல்லாம் ஆரோக்கியத்திற்கு நாமே தோண்டிக்கொள்ளும் படுகுழி. இப்போது மதுக்கடைகள் பெருகிவிட்டதால் மது குடிப்பவர்களும் பெருகிவிட்டார்கள் என்பது உண்மை. அதேநேரம், தனி மனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தனிமனித ஒழுக்கத்துடன் மதுவை புறக்கணித்தால் மதுக் கடைகள் எல்லாம் தானாகவே மூடப்பட்டுவிடும். பள்ளி சிறுவர்கள், பெண்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதற்கு பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்று ஆரோக்கியப் பாடம் எடுக்கிறார் சரத்குமார்.

சீக்கிரமா 150 வயது ரகசியத்தை சொல்லுங்க சரத்.

Leave a Comment