செம்மொழி தமிழாய்வு சர்ச்சை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக ஆன்மீகப் பேச்சாளர் டாக்டர் சுதா சேஷையனை மத்திய அரசு நியமித்த் விவகாரம் எக்கச்சக்க சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. செம்மொழித் தமிழ் ஆய்வுக்கும் சுதாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள். சுதா சேஷையனுக்கு என்ன குறை ? என்று கிண்டலடிக்கிறார்கள்.
சமூகவலைதளங்களில் சுதா சேஷய்யன் குறித்து கடும் கண்டனம் எழுப்புகிறார்கள். ‘’சுதா சேஷய்யன் தொடர்ந்து அதிகாரத்தின் கனிகளைச் சுவைப்பவர். தமிழிலே உறவாடுவதாக காட்டிக்கொண்டு பிராமணிய சிந்தனைகளை பரப்பிக்கொண்டே இருப்பவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்த போது, அவரின் விடுதலைக்காக வாராவாரம் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதை முன்னின்று நடத்தியவர் அன்றைக்கு தமிழ்நாட்டு அரசின் கீழ் வரும் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் சுதா சேஷய்யன்! ஒரு அரசு ஊழியர், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பிராமண மடாதிபதி ஒருவரின் விடுதலைக்காக அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறி பொதுவெளியில் பிரார்த்தனை நடத்தலாமா? ஆரியம் போற்றும் சுதா சேஷய்யன்னால் முடியும்.
பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தை விகடன் தமிழில் கொண்டு வரும் பணிகளில் தமிழறிஞர் மணவை முஸ்தபா, சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் குழுவை அமைத்தது. தனித்தமிழுக்காக யுனெஸ்கோ வரை இறுதிமூச்சு வரை உழைத்த தமிழறிஞர் மணவை முஸ்தபாவிற்கு தமிழ் தெரியாது என ‘தமிழ்’ தெளிந்த சுதா சேஷய்யன் சான்றளித்தார். கண்ணீர் மல்க மணவை முஸ்தபா அப்பணிகளை விட்டு வெளியேற்றப்பட்டார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பாக உலகெங்கும் உள்ள பல்துறை நூல்கள் அன்னைத்தமிழிற்கு மொழியாக்கம் புரியும் பணிகள் முடுக்கப்பட்டன. டாக்டர் சுதா சேஷய்யனிடம் தமிழில் மருத்துவ நூல்களை கொண்டு வரும பொறுப்பு தரப்பட்டது. ஏறத்தாழ இரண்டாண்டுகள் ஒரு பக்கத்தைக் கூட தராமல் காலத்தைக் கடத்தினார். தமிழில் மருத்துவ நூல்களை கொண்டு வருவது சாத்தியமில்லை என முகத்திற்கு நேராக சொன்னார். அவர் ஆரியம் சிறக்கவும், சனாதனம் தழைக்கவும் உழைக்கும் பீகார் பிராமணர் ஆர்.என்.ரவிக்கு உரைகள் எழுதித்தந்து எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணி நீட்டிப்பு பெற்றார். அப்போது அவர் செய்த பணி என்ன தெரியுமா? கோவிட்டில் மக்கள் செத்துக்கொண்டிருந்த போது பொருநை போற்றுதும் என சம்ஸ்கிருத பெருமை போற்றி, தமிழ் வளர்த்த நெல்லைக்கு ஆரியச்சாயம் பூசிக்கொண்டிருந்தார்.
செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு துணைத்தலைவராக தமிழைக் காட்டிக்கொடுப்பதும், சம்ஸ்கிருதத்தை போற்றிப்பரப்புவதும் என்பதைத் தவிர வேறென்ன தகுதி வேண்டும்? ஸகல ஸௌபாக்யங்களும் அருளும் ஶ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் – விளக்கவுரை) எழுதிய சுதா சேஷய்யன்களைக் கொண்டு நம் தமிழ் எட்டுத்திக்கும் வெற்றிக்கொடி நாட்டும் கனவுகளைக் காவு கொடுக்கப்பார்ப்பார்கள். கவனம் தேவை. கைட்டன் மற்றும் ஹால் எழுதிய ‘Textbook of Medical Physiology’ நூல் மருத்துவ உடற்செயலியல் எனும் பெயரில் முழுமையாக ‘முத்தமிழறிஞர் கலைஞர் மொழிபெயர்ப்புத்தி்ட்டத்தின்’ கீழ் இந்திய மொழிகளிலேயே முதல்முறையாக தமிழில் திமுக அரசால் வெளிவந்துள்ளது.
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், தமிழின் தொன்மை, அதன் இலக்கண, இலக்கிய செழுமை குறித்த ஆய்வுக்கானது. இதில் செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இத்தகு ஆழ்ந்த ஆய்வு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சதா சர்வ காலமும், ஆன்மீக கதாகாலாட்சேபங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள்.. எனவும் தொலைகாட்சி, வானொலிகளில் முக்கிய நிகழ்வுகளின் போது வர்ணனை செய்கின்றவருமான சுதா சேஷய்யனை நியமிப்பது முறையா?
சுதா சேஷய்யனுக்கு பாஜக கவர்னர் பன்லாரிலால் புரோகித் காலத்தில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலையின் துணை வேந்தராக நியமித்தார்கள். அப்போதும் துணைவேந்தர் பொறுப்புக்கான நேரத்தை தர முடியாதவராக சதா சர்வகாலமும் ஆன்மீகச் சொற்பொழிவுகள், கதாகாலாட்சேபம், காசி சங்கமம், சங்கரமட ஆராதனை நிகழ்வுகள்.. என்று தான் அலைந்து கொண்டிருந்தார்.
பார்ப்பன எழுத்தாளர்கள் கூட்டம் நுழைந்து கொள்ளும். புராணங்களையும், இதிகாசங்களையும் கரைத்துக் குடித்து, அதை மெய்யன்று நம்பி உருக்கமாக கதாகாட்சேபம் செய்கின்ற ஒருவர் தமிழ் செம்மொழி ஆய்வுத் துறைக்கு பொருத்தமானவர் தானா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் ஆய்வுக்கு தேவை உண்மையான தரவுகளை தேடிச் சேகரித்து, சமரசமற்ற நேர்மையான அணுகுமுறை மூலம் நிறுவுதலாகும். இத்தகு ஆய்வு மையத்தில் இது போன்ற பிற்போக்கு கருத்தியலைக் கொண்ட ஆழ்ந்த மத நம்பிக்கை சார்ந்த பேர்வழிகள் தலைமை பொறுப்புக்கு வருவது ஆபத்தானது..’ என்று வரிசை கட்டி அடிக்கிறார்கள்.
இத்தகைய விமர்சனங்களை எல்லாம் பார்க்கும்போதே, இந்த பதவி வகிப்பதற்குத் தனக்கு எந்த தகுதியும் இல்லை என்பது சுதா சேஷையனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அதனால் அவராகவே பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கிறார்கள்.
பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு சுதா நல்லவரா என்று பார்க்கலாம்.