இன்று தமிழ்நாடு தினம்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி சங்கரலிங்கனார் 1956ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்த்தை காமராஜர் ஏற்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் உயிர் பிரிந்தபிறகும் காங்கிரஸ் அதை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை.
1957ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க முதல்முறையாக வெற்றி பெற்று, பேரவையில் நுழைந்தபோது தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தது. அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்குகளே பதிவாயின. எதிர்ப்பாக 127 வாக்குகள் பதிவாகின.
1961ல் அப்போதைய சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சின்னதுரை மீண்டும் தமிழ்நாடு பெயர்மாற்ற தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முன்னெடுத்தார். நாடாளுமன்றத்தில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் புபேஷ் குப்தா, தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கையை முன்வைத்து தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்தார்.
1967ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபிறகு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டும் தீர்மானத்தை இதே ஜூலை மாதம் 18ம் நாள் கொண்டுவந்தார் அண்ணா.
“சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒன்றுபட்ட தமிழ்நாடு என்று இருந்ததில்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது. எதற்காக புதிதாக தமிழ்நாடு என்ற பெயரை உருவாக்க முனைகிறீர்கள்?” என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பட்டாபிராமன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பேரறிஞர் அண்ணா. ’இந்த மன்றத்துக்கும், இந்த உறுப்பினருக்கும் தெளிவுபடுத்த தமிழ்நாடு என்ற சொற்கள் இருக்கும் சில நூல்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பரிபாடல், பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை இவை எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ்க் காப்பியங்கள். பரிபாடலில் வருகிற ‘தண்டமிழ் வெளி தமிழ்நாட்டு அகமெல்லாம்’ என்ற வாக்கியத்துக்கு, மூன்று பகுதிகளும் இனிமையான தமிழ் சூழ்ந்த தமிழ்நாடு என்று பொருள். 1800 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பதிற்றுபத்தில் ‘இமிழ்கடல் வெளி தமிழகம்’ என்று எழுதப்பட்டு இருக்கிறது.
அதாவது கடலை எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு. சிலப்பதிகாரத்தில், ‘தென்தமிழ் நந்நாடு’ என கூறப்பட்டிருக்கிறது.இதன் பொருள் நல்ல தமிழ்நாடு. மணிமேகலையில், ‘சம்புதீவினில் தமிழக மருங்கில்’ என வருகிறது. தமிழ்நாடு சம்புத்தீவு என அழைக்கப்படுகிறது என்பதே இதன் பொருள்.
இதற்கு பின்னரே சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்ற மூன்று ராஜ்ஜியங்கள் வந்தன. தமிழ்க் காப்பியங்களில் தமிழ்நாடு என்று இருக்கிறது. இந்த காப்பியங்களில் கருத்து வளத்துக்கு ஒன்றும் பஞ்சமில்லை என்று கூறி தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்றினார் அண்ணா)
“தமிழ்நாடு” என்று நமது அண்ணா மூன்று முறை முழங்க, “வாழ்க” முழக்கத்தால் சட்டப்பேரவை அதிர்ந்த நாள் இன்று. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் நமக்கென தனி அடையாளம் உண்டான உணர்ச்சிமிகு வரலாற்று நாள். வரலாறுகள் படிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும்.