என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 52
அக்டோபர் 1, 1972. சென்னை, சத்யா திருமண மண்டபத்தில் சென்னை – செங்கை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ‘தாய்க்கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று என்னைக் கேட்டால், தாய்க்கழகம்தான் வேண்டும் என்பேன். அண்ணா கண்ட இருவர்ணக் கொடிதான் நமது அடையாளம். தனித்த அடையாளம் தேவையில்லை” என்று அறிவித்ததும், ஒட்டுமொத்த நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தார்கள். கூட்டத்தில் மயான அமைதி நிலவியது.
புரட்சித்தலைவர் இப்படி ஒரு முடிவு அறிவிப்பார் என்று அன்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆகவே, புரட்சித்தலைவர் பேசி முடித்தபிறகு வாழ்த்தொலி எழுப்பாமல் அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.
அந்த நேரத்தில் முதலில் சுதாரித்துக்கொண்டவர் சைதை துரைசாமி. மேடையில் புரட்சித்தலைவருக்குப் பின்னே நின்றுகொண்டிருந்த சைதை துரைசாமி, உடனடியாக மேடையில் இருந்து கீழே குதித்து, புரட்சித்தலைவரின் காருக்கு அருகில் சென்று நின்றுகொண்டார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்பது புரிந்தாலும் அமைதியாக காருக்கு வந்து ஏற முயன்ற புரட்சித்தலைவரிடம் சைதை துரைசாமி துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, “வணக்கம்ணே. எம்ஜிஆர் மன்றத்தை க்ளோஸ் பண்ணிட்டீங்க. இனி ஒரு எம்ஜிஆர் மன்றம் கூட உருவாகாத வகையில் உங்களது பேச்சு அமைந்து விட்டது’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
சைதை துரைசாமியிடமிருந்து அப்படியொரு பேச்சை எதிர்பார்க்காத புரட்சித்தலைவர் ஆச்சர்யமாக, “என்ன?” என்று கேட்டார்.
இதற்காக காத்திருந்தது போன்று தன் மனதிலிருந்த அத்தனை விஷயங்களையும் மளமளவென கொட்டத் தொடங்கினார் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.