அ.தி.மு.க.வுக்கு விதை போட்ட சைதை துரைசாமி

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 48

அண்ணா உணவகத்திற்கு ஏழை, எளிய மக்களிடம் கிடைத்திருக்கும் மகத்தான வரவேற்பு காரணமாக 2016 சட்டமன்றத் தேர்தலில் எளிதாக வெற்றி அடைய முடியும் என்று அறிக்கை கொடுத்த உளவுத் துறை அதிகாரியிடம், ‘சைதை துரைசாமி தான் அ.தி.மு.க. இயக்கம் தோன்றுவதற்கு விதை போட்டவர் என்பது தெரியுமா?’ என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

உடனே அந்த அதிகாரி, ‘’1972, அக்டோபர் 1ம் தேதி ரசிகர் மன்றக் கூட்டத்தைத் தானே சொல்கிறீர்கள்?’’ என்று பதில் சொன்னதும் ஜெயலலிதா மகிழ்ச்சியானார். ‘’இந்த தகவல் உங்களுக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது என்றால், உங்கள் அரசியல் ரிப்போர்ட் சரியாகத் தான் இருக்கும்’’ என்று பாராட்டி அனுப்பி வைத்தார்.

அம்மா உணவகம் பற்றி மேலும் சில தகவல்கள் கூறுவதற்கு முன்பு, 1972 அக்டோபர் 1ம் தேதி நடந்த அரசியல் நிகழ்வை முழுமையாகப் பதிவு செய்வது அவசியம். ஏனென்றால், அது இன்றைய அ.தி.மு.க.வினர் பலருக்கும் தெரியாத  வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு.

படித்தவர்கள், சிந்தனையாளர்களின் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்த பெருமை புரட்சித்தலைவருக்குத் தான் உண்டு. 1953ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தது முதல் திரைப்படம் மூலமாகவும், தன்னுடைய பிரச்சாரம், நாடகங்கள் மூலம் தி.மு.க. வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

புரட்சித்தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கழுத்தில் கட்டுப்போட்டிருந்த படத்தை தமிழகமெங்கும் சுவரொட்டியாக ஒட்டியே 1967ம் ஆண்டு தி.மு.க. முதன்முதலாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதியை முதல்வராக அமரவைத்ததும், அண்ணா மறைவுக்குப் பிறகு 1971 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 184 இடங்களைப் பிடித்து, மாபெரும் வெற்றி பெற்றதற்குக் காரணமும் புரட்சித்தலைவரின் தீவிர பிரசாரம் தான்.  

அதன் பிறகு தி.மு.க. ஆட்சியில் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஊழல் பெருகிவிட்டது, குடும்பக் கட்சியாக மாறிவிட்டது என்றெல்லாம் பெருந்தலைவர் காமராஜர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தி.மு.க.வின் பொருளாளராக இருந்தவரும், தி.மு.க.வை ஆட்சியில் அமரவைத்தவருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இந்த குற்றச்சாட்டுகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களுக்கும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment