சுறுசுறுப்பான 72 வயது இளைஞன். சம்மணம் கட்டி அமர்ந்த
இடத்திலிருந்து, கைகளைக் கீழே ஊன்றாமல் நொடியில் எழுந்து நிற்கிறார். முதுமைக்குரிய
எந்த சுவடுகளும் இன்றி தேனீயை போன்று இயங்கிக்கொண்டே இருக்கும் முன்னாள் சென்னை பெருநகர
மேயர் சைதை துரைசாமி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம்.
கேள்வி :
பெரும்பாலான மனிதர்கள் 58 வயதில் ஓய்வு பெற்றதும்
தங்களுடைய வேலை நேரத்தை சுருக்கிக்கொள்கிறார்கள். ஆனால் 60 வயதில் மேயர் பதவிக்கு வந்த
நீங்கள் தினமும் 19 மணி நேரம் உழைத்தீர்கள். இப்போதும் முழுநேர உழைப்பாளியாக இருக்கிறீர்கள்.
இது எப்படி சாத்தியமாகிறது..?
சைதையார் :
என்னைப் பொறுத்தவரை வயது என்பது மூப்பு அல்ல, நமக்கு
கிடைக்கும் கூடுதல் அனுபவம். உடலையும், மனதையும் அக்கறையுடன் பராமரித்து வருபவர்களால்
125 வயதுக்கு மேலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உடலுக்கு மதிப்பு கொடுத்து அதனை
பராமரிப்பதுதான் மனிதரின் முதல் கடமை என்பதால் உணவு உட்கொள்ளும் நேரத்தையும், பழக்கத்தையும்
எதற்காகவும், யாருக்காகவும் நான் தள்ளிப்போடுவதில்லை. போதிய அளவு நன்றாக தூங்குவதையும்,
சரியான நேரத்திற்கு சரியான அளவு தண்ணீர் குடிப்பதையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன்.
அதனால்தான் காலை 4:30 மணி முதல் இரவு 11:30 மணி வரையிலும் என்னால் ஓய்வு எடுக்காமல்
மேயர் பணியில் ஈடுபட முடிந்தது.
நீண்ட நேரம் உழைக்க வேண்டும் என்றால் உடலில் ஹீமோகுளோபின்
அளவு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொண்டேன்.
அதனால்தான் என்னால் கடினமாகவும் நீண்ட நேரமும் உழைக்க முடிந்தது. காரிலேயே உணவு உண்டு,
கார் கதவின் மறைப்பிலேயே ஆடையை மாற்றிக்கொண்டு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும்
எனக்கு ஆற்றல் கிடைத்தது. நான் மட்டுமல்ல,
உடல் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒவ்வொரு நபரும் என்னை போலவே சுறுசுறுப்பாக நோயின்றி
செயல்பட முடியும்.
கேள்வி : ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு
எப்போது ஏற்பட்டது..?
சைதையார்
:
என் அன்புக்கும் வணக்கத்திற்குமுரிய புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆரிடம் அனைத்துவிதமான நல்ல பண்புகளும் நிரம்பியிருந்தன. ஆனால், உணவுக் கட்டுப்பாட்டில்
மட்டும் அவர் உறுதியாக இல்லை. விருந்தோம்பலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த காரணத்தால் உடலுக்கு
ஒவ்வாத உணவுகளை, கால, நேர முறையற்று எடுத்துக்கொண்டார். இதனால் அவரது உடல் நலன் குன்றியது.
புரட்சித்தலைவரின் மரணம்தான் என்னை ஆரோக்கியத் தேடலுக்கு வித்திட்டது.
கந்தசாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் என்ற நூல்
எனது ஆரோக்கியத்திற்கான பயணத்திற்கு புதிய வழியைக் காட்டியது. அதன் மூலம் ‘உணவே மருந்து,
மருந்தே உணவு’ என்ற முன்னோர் வழிகாட்டுதலின் உண்மையைக் கண்டறிந்தேன், மண்ணின் மரபு
சார்ந்த சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா நேச்சுராபதி போன்ற மருத்துவ முறைகளை
கடைபிடிக்கிறேன். சித்தர்கள் வாழ்ந்து காட்டிய பண்புகளை கடைபிடித்து, மருந்து மாத்திரைகளுக்குச்
செலவில்லாமல், நல்ல உடல் தகுதியை உறுதி செய்து, எதிலும் வெற்றிபெறத்தக்க வகையில் ஆரோக்கிய
மனிதனாக வாழமுடியும் என்பதை அறிந்துகொண்டேன்.
கேள்வி : அப்படியென்றால் நல்ல உணவு எடுத்துக்கொண்டால்
போதும் என்கிறீர்களா..?
சைதையார் :
ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மகத்தானது என்றாலும்
அது மட்டுமே போதாது. நீர் பருகுதல், உறக்கம்,
சுற்றுச்சூழல், சூரிய ஒளி, நற்சிந்தனை, உடற்பயிற்சி, கழிவுகள் அகற்றம் போன்ற நிறைய
அம்சங்கள் ஆரோக்கியத்திற்கான காரணங்களான இருக்கின்றன.
கேள்வி : ஆரோக்கியத்திற்கு சூரிய ஒளியும் முக்கியமா..?
சூரிய ஒளி பட்டால் உடல் கருத்துவிடுமே..?
சைதையார் :
நம் முன்னோர்கள் வெயிலில் வேலை செய்துதான் உடல் ஆரோக்கியத்தை
பாதுகாத்தார்கள். அவர்களுடைய மேனி பளபளப்புடன் திகழ்ந்தது. நோய் தாக்குதலுக்கு
ஆளாகாமல் அவர்களை பாதுகாத்தது சூரிய ஒளிதான். அழகுப் பொருட்கள் விற்பனை செய்யும்
நிறுவனங்கள்தான் சூரிய ஓளிக்கு எதிராக பொய்யான தகவல் தருகின்றன. தினமும் சூரிய ஒளி
குளியல் எடுப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் வைட்டமின் டி
சத்தும் கிடைக்கிறது. அதிகாலை மாலை நேரங்களைவிட, மதியம் 11 மணி முதல் 2 மணி வரை
சூரிய ஒளியில் நிற்பதால் கூடுதல் வைட்டமின் டி பெற்றுக்கொள்ள முடியும். தினமும்
குறைந்தது 20 நிமிடங்கள் சூரிய ஒளி ஒவ்வொருவர் மீதும் படுவது நல்லது.
வெளிநாட்டினர் சூரிய ஒளி பெறுவதற்காக பணம் செலவழித்து சுற்றுலா செல்கிறார்கள்.
ஆனால், நமக்கு சூரிய ஒளி இலவசமாகக் கிடைக்கிறது. அதனை பயன்படுத்தாமல் இருப்பதுதான்
மனிதர்களின் மிகப்பெரும் அறியாமை. இதுபோன்று உடல் நலம் குறித்து நிறைய அறியாமை
மனிதர்களிடம் நிரம்பியிருக்கிறது. இந்த அறியாமையை அகற்றினால்தான் ஆரோக்கியம்
அனைவருக்கும் கிடைக்கும்.
கேள்வி : எவற்றை எல்லாம் அறியாமை என்கிறீர்கள்..?
சைதையார் :
காலை எழும்போது ஒவ்வொருவர் மனதிலும் மகிழ்ச்சி நிரம்பியிருக்க
வேண்டும். அப்போதுதான் காலைக்கடன், குளியல்,
அலங்காரம், உணவு போன்றவற்றை மகிழ்ந்து அனுபவிக்க இயலும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்
மற்றும் தொழில் உறவுகளிடம் அன்பையும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள முடியும். நாள் முழுவதும்
சிறப்பாக பணிபுரிய முடியும். உடலில் ஏதேனும் சிறு பிரச்னை, நோய் இருப்பவர்களால் எந்த
வேலையையும் மனமொன்றி செய்துவிட முடியாது. நோயிடம் அகப்பட்டவர்களால் மகிழ்ச்சியாக இருக
முடியாது. எனவே ஆரோக்கியமே மகிழ்ச்சிக்கு அடிப்படை.
மருந்து, மாத்திரைகளில் ஆரோக்கியம் கிடைத்துவிடும்
என்ற அறியாமையில் மக்கள் இருக்கிறார்கள். மருத்துவர்கள் அல்லது மருத்துவமனைக்குச் செல்லாமலும்
ஆரோக்கியமாக வாழமுடியும் என்ற உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உணவு, உண்ணும் முறை, நீர் பருகல் ஆகியவற்றில் உடல்
ஆரோக்கியம் மறைந்திருக்கிறது. சளைக்காமல் ஒரு மணி நேரம் செல்போனில் பொழுதுபோக்குபவர்களுக்கு,
சாப்பிடுவதற்கு மட்டும் நேரம் ஒதுக்க முடிவதில்லை. அப்படி சாப்பிடும் நேரத்திலும் செல்போன்
பார்த்துக்கொண்டு அல்லது பிறருடன் பேசிக்கொண்டு சாப்பிடுகிறார்கள். இது உடலுக்கு பெரும்
கேடு விளைவிக்கும் செயலாகும். உணவுடன் சேர்த்து தண்ணீர் அல்லது குளிர்பானம் குடிப்பதும்
சாப்பிடுவதும் ஐஸ் க்ரீம் சுவைப்பதும் தவறான பழக்கம்.
கேள்வி : அப்படியென்றால் எப்படி சாப்பிட வேண்டும்..?
சைதையார் :
‘மென்று தின்றவன் நின்று வாழ்வான்…’ ‘நொறுங்கத் தின்றால்
நூறு வயது…’ – என்ற நம் முன்னோர் வார்த்தைகள் சாதாரண சொற்கள் அல்ல, அவை வாழ்வியல் நெறி.
மூத்தோர் சொல் அமிர்தம் ஆகும்.
வாயில் உற்பத்தியாகும் உமிழ்நீருக்கு மட்டுமே உணவை
ஜீரணிக்கும் திறன் உண்டு. அதனால் உணவை மென்று
தின்பதற்கு போதிய நேரம் ஒதுக்க வேண்டும். ஒரு கவளம் உணவை 32 முறை அல்லது அது திரவமாகும்
வரை மென்று அதன்பிறகே உணவுக் குழாய்க்குள் அனுப்பவேண்டும். காளான், மாமிசம் போன்ற உணவுகளை
60 அல்லது 70 முறை மெல்ல வேண்டும். திரவமாகாத எந்த ஒரு திடப்பொருளும் வயிற்றுக்குள்
செல்லக்கூடாது. உணவு திரவநிலையில் வயிற்றுக்குள் செல்வதால், தண்ணீர் குடிக்கும் அவசியம்
ஏற்படாது. உணவை உமிழ்நீர் கலந்த திரவமாக இரைப்பைக்குள் அனுப்பினால் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு
வாய்ப்பே இல்லை. சர்க்கரை, தைராய்டு, கொழுப்பு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள்
உருவாக மலச்சிக்கல் மட்டுமே ஆரம்ப காரணியாக இருக்கிறது.
’பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று நம் முன்னோர்
சொன்னது 16 வகையான செல்வங்களை அல்ல. நமது வாயில் 27 வகையான உமிழ்நீர் சுரக்கிறது. அவற்றில்
16 வகையான உமிழ்நீர் ஜீரணத்துக்கு உதவிகரமாக இருக்கின்றன. அந்த 16 வகையான உமிழ்நீருடன்
உணவை மென்று தின்பவர்கள் வாழ்க்கை சுகமாக அமையும் என்பதைத்தான் பெருவாழ்வு என்று சொல்லி
வைத்தார்கள்.
தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் நேரம் செலவிடுபவர்கள்,
வாழ்வின் மிகமுக்கியமான ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்காமல் அவசரம் என்ற அறியாமை நோயில்
சிக்கியிருக்கிறார்கள். காலை உணவு எடுக்காமல் நேரடியாக மதிய உணவு சாப்பிடுவது, இரவு
11 மணிக்கு மேல் சாப்பிடுவது போன்ற ஆபத்தான பழக்கம் பலரிடம் இருக்கிறது. நம் உடல் கடிகாரத்திற்கும்
உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் ஒவ்வோர் உறுப்பும் ஆதிக்கம் செலுத்தும்
நேரம் அறிந்து உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலை 7 மணி முதல் 8 மணி வரை வயிற்றுக்கான நேரம். ஆகவே,
இந்த நேரத்துக்குள் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். மதியம் 12 மணி முதல் பிற்பகல்
1 மணி வரை சிறுகுடலின் நேரம் என்பதால், இந்த நேரத்திற்குள் மதிய உணவு சாப்பிட வேண்டும்.
இரவு 7 மணிக்குள் இரவு உணவை முடித்திருக்க வேண்டும்.
கைக்குத்தல் அரிசி, சிறு தானியங்கள், பயிறுகள் உணவில்
முதன்மையாக இருக்க வேண்டும். சாப்பிட்டதும் பழச்சாறு, ஐஸ்க்ரீம் போன்றவை கூடாது. சாப்பாட்டுக்கு
ஒரு மணி நேரத்திற்கு முன்னரும் பின்னரும் எதுவும் சாப்பிடக் கூடாது. இரவு நேரத்தில்
தயிர் சாப்பிடக்கூடாது. முளை கட்டிய பயிறுகள், பழங்கள் போன்ற விவசாய உற்பத்தி பொருட்களை
மட்டுமே நொறுக்குத்தீனியாக எடுக்க வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியம் கிடைப்பதுடன்,
விவசாயப் பொருட்கள் விற்பனையாகி அவர்கள் வாழ்க்கையும் நலப்படும்.