என்ன செய்தார் சைதை துரைசாமி – 195
பெருநகர சென்னைக்கு இன்றும் நாள் தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குடியேறிக்கொண்டே இருக்கிறார்கள். வாகனங்கள் எண்ணிக்கையும் நாள்தோறும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. சைக்கிள், இருசக்கர வாகனம், ஆட்டோ கார், லாரி, பஸ் என சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 60 லட்சம் வாகனங்கள் நடமாடுவதாக கணக்கிடப்படுகின்றன.
கடந்த 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதோடு ஒவ்வொரு நாளும் புதுப்புது வாகனங்கள் ரோட்டில் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. அதேநேரம், சென்னையில் சாலைகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதற்குப் பதிலாக நிறைய மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த மேம்பாலங்கள் நெரிசலைக் குறைக்கவில்லை என்பதே உண்மை. நாளுக்கு நாள் சென்னை நகரம் திக்குமுக்காடி வருகிறது. இந்த நெரிசல் காரணமாக மக்கள் பயணிக்கும் வேகம் குறைந்துவிட்டது.
போக்குவரத்து முடக்கம் காரணமாக சாலைகள் எளிதில் சேதமடைகின்றன. போக்குவரத்து தாமதம் ஆவதால் அதிகப்படியான எரிபொருள் செலவாகி மக்களுக்கு அதிக செலவு ஏர்படுகிறது. அதோடு போக்குவரத்து நெரிசல் காரணமாக நச்சுப் புகை வெளியேற்றம் அதிகமாகி மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பும் உண்டாகிறது.
பெருநகர சென்னைக்கு மேயராக சைதை துரைசாமி பதவியேற்றதும், போக்குவரத்து நெரிசல் சென்னையின் தீர்க்கமுடியாத ஒரு பிரச்னையாக காலம் காலமாக இருந்துவருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 200 வார்டுகளிலும் உள்ள 33,000-க்கும் மேற்பட்ட சாலைகளையும் மேம்படுத்தும் பணியை முக்கியப் பணியாக எடுத்து செய்வதற்கு முன்வந்தார் மேயர் சைதை துரைசாமி. அதேநேரம், சாலைகளை மேம்படுத்துவதால் மட்டும் போக்குவரத்து நெரிசல் தீரப்போவதில்லை, சாலைகளை அகலப்படுத்துவது மட்டுமே தீர்வாக இருக்கும் என்று கூறினார். இதைக் கேட்டதும் ஒட்டுமொத்த அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
- நாளை பார்க்கலாம்.