சாலையை அகழ்ந்தெடுக்கும் நடைமுறை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 225

பெருநகர சென்னையில் புதிய ரோடு போடுவதில் ஒரு மிகப்பெரும் சிக்கல் நிலவியது. அதாவது, ஒவ்வொரு முறை புதிதாக ரோடு போடும் நேரத்திலும் அதன் உயரம் அதிகரிக்கும். இதன் காரணமாக ரோட்டை ஒட்டியிருக்கும் வீடுகள் எல்லாமே பள்ளத்துக்குப் போய்விடும். முன்கூட்டியே ரோடு உயரம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு என்று அதிக உயரத்தில் தளம் அமைத்த வீட்டுக்காரர்கள் மட்டுமே பாதிக்கப்பட மாட்டார்கள். மற்ற அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவர்கள்.

எல்லா வீட்டுக்காரர்களாலும் உடனடியாக தங்கள் தளத்தை உயர்த்திக் கட்ட முடியாது. ஏனென்றால் இது அதிக செலவு வைக்கக்கூடியது மட்டுமின்றி, நிறைய வீடுகள் முன்பு குறைந்த உயரத்தில் கட்டப்பட்ட காரணத்தால் கடும் சிரமத்தை சந்தித்தன. இந்த சிக்கல் காரணமாக ரோடு போட வேண்டாம் என்று சிலரும், ரோடு வேண்டும் என்று சிலரும் கூறும் நிலைமை உருவானது.

சொந்த வீட்டுக்காரர்கள் மட்டுமின்றி மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் மின்சாரக் கம்பத்திற்கும் ரோடு உயரமாவதால் பாதிப்பு ஏற்பட்டது. மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் பெரும் பிரச்னை ஏற்பட்டது. புதிய ரோடு உயரமாகவும், அதனையொட்டிய சின்னஞ்சிறு கிளை ரோடுகள் தாழ்ந்த உயரத்திலும் இருக்கும். இந்த பிரச்னையை தீர்த்து, யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் சாலை அமைப்பதற்கு மேயர் சைதை துரைசாமி ஆலோசனை நடத்தினார்.

இதற்காக சாலைகளை அகழ்ந்தெடுத்து புதிய சாலை போடப்படும் புதிய தொழில்நுட்பத்தை இந்த பகுதிகளில் எல்லாம் மேற்கொள்வது சரியாக இருக்கும் என்று தெரியவந்தது. உடனடியாக இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சியில் பயன்படுத்த உத்தரவிட்டார்.  

புதிய தொழில்நுட்பமாக மில்லிங் இயந்திரம் கொண்டு  பழைய சாலை அகழ்ந்தெடுக்கப்பட்டு, அதன்பிறகு புதிய  சாலை  அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சாலையின் உயரம் அதிகரிப்பதால் உருவாகும் அனைத்து பிரச்னைகளுக்கும், இந்தப் புதிய முறையில் நல்ல தீர்வு கிடைத்தது. இதே பாணியில் சாலைகளில் ஒட்டுப்பணிகளும் ரோட்டின் மட்டத்திற்கு இருக்கும்படி துல்லியமாக மேற்கொள்ளப்பட்டன. சாலையின் மேற்பரப்பு சமமாக இருந்த காரணத்தால், வாகனங்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் பயணிக்க முடிந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment