சமூகநலக்கூட முன்பதிவுக்குக் கட்டுப்பாடுகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 332

அரசு பொதுமக்கள் நன்மைக்கு செயல்படுத்தும் திட்டங்களை எல்லாம் இடையில் இருப்பவர்கள் சுரண்டிக் கொழுப்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. முகூர்த்த தேதிகளை எல்லாம் பிளாக் செய்து வைத்திருக்கும் அடாவடி நபர்களின் கையில் சமூகநலக் கூடங்கள் மாட்டியிருப்பதை அறிந்தார்.

அப்பாவி பொதுமக்கள் தேதி கேட்டு வரும் நேரத்தில் கூடுதல் பணம் கொள்ளை வசூல் செய்துவந்ததை தடுத்து நிறுத்துவதற்குத் திட்டமிட்டார். அந்த அடாவடி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதால் மட்டும் இந்த பிரச்னை தீர்ந்துவிடப் போவதில்லை என்பது மேயர் சைதை துரைசாமிக்கு நன்கு தெரியவந்தது. ஏனென்றால், இவர்களுக்கு மாநகராட்சியின் ஊழியர்களும் உடந்தையாக இருந்தார்கள். ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தால் வேறு ஒருவர் வந்து முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே, யாருமே முறைகேட்டில் ஈடுபடாத வகையிலும் பொதுமக்களுக்கு நேரடியாக நன்மை கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்தார்.

மாநகராட்சிக்கு சொந்தமான சமூகநலக் கூடங்களில் ஆன்லைன் புக்கிங் எனும் நடைமுறையைக் கொண்டுவரப் போவதாக அறிவித்தார் மேயர் சைதை துரைசாமி. அதோடு, சமூகநலக் கூடங்கள் எந்தெந்த நாட்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது, எந்தெந்த நாட்களில் பதிவு செய்யப்படவில்லை என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆன்லைன் வசதிக்கு ஏற்பாடுகள் செய்தார். இதனால், ஏதேனும் ஒரு இடத்தில் இல்லையென்றால் வேறு ஒரு மண்டபத்தில் இடம் இருக்கிறதா என்பதைப் பார்த்து புக்கிங் செய்து கொள்வதற்கு வாய்ப்புகள் உருவாகின.

மேயர் சைதை துரைசாமி ஆன்லைன் புக்கிங் நடைமுறை வரப்போவதாக அறிவித்த நேரத்தில் முறைகேடு செய்தவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆன்லைன் புக்கிங்கிலும் முன்பதிவு செய்து வைத்துக்கொண்டு, வழக்கம்போல் முறைகேடுகளில் ஈடுபடலாம் என்றே நினைத்தார்கள். ஆனால், யாருமே முறைகேடு செய்துவிட முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் போட்டு வைத்தார் மேயர் சைதை துரைசாமி.

இப்படி எல்லாம் கட்டுப்பாடு போட முடியுமா என்று முறைகேடு செய்பவர்கள் அதிர்ந்தே போனார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment