உறவுகளை மேம்படுத்தும் வழிகாட்டி
தன்னுடைய ரசனை, தன்னுடைய தேர்வு, தன்னுடைய கணிப்பு, தன்னுடைய சிந்தனை மற்றவர்களை விட உயர்வானது என்ற எண்ணம் பெரும்பாலான நபர்களிடம் ஆணித்தரமாக ஒளிந்திருக்கிறது. அதனால் ஆடை, படிப்பு, வேலை, மணப்பெண், மணமகன் தேர்வு போன்றவைகளை பிறருக்காக தாங்களே முடிவு செய்கிறார்கள்.
இந்த விஷயத்தில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன தெரியுமா..?
நாம் ஆசையாகத் தேர்வு செய்து அணிந்திருக்கும் ஆடை, செருப்பு, செல்போன், வாட்ச் போன்றவை, எத்தனையோ நபர்களால் பிடிக்கவில்லை என்று நிராகரிக்கப்பட்டவை. மலிவானது என்று விமர்சிக்கப்பட்டவை. கேலியாக கருதப்பட்டவை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
எனவே, இந்த உலகில் சரி, தவறு, அழகு, அழகின்மை என எதுவும் கிடையாது. உண்மை, பொய் என்று எதுவும் இல்லை. இந்த உலகத்தில் திட்டவட்டமானது என்று எதுவுமே கிடையாது.
மிகவும் சரியான மனிதர், முழுமையான மனிதர் என்று யாரும் இல்லை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதே உண்மை. நமக்கு என்ன தேவையோ அதை தேர்வு செய்ய நமக்கு முழு உரிமை உண்டு. அதே போன்று ஒவ்வொரு நபருக்கும் அவர் விரும்பியதை தேர்வு செய்வதற்கும், பிடித்ததைச் செய்வதற்கும் சுதந்திரம் உண்டு.
எனவே, பிறர் விருப்பத்தை கிண்டல் செய்வது, பிறருடைய விருப்பத்தில் தலையிடுவது அவர்களை அவமானப்படுத்துவதற்கு சமம்.
பிறர் விருப்பத்தை மதிப்பதும் ஏற்றுக்கொள்வதும் அந்த உறவை மேம்படுத்துகிறது. நம்பிக்கையை உருவாக்குகிறது, அன்பை விதைக்கிறது. எனவே, எல்லோரையும் அவரவர் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே மகிழ்ச்சி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்