என்ன செய்தார் சைதை துரைசாமி – 300
பெருநகர சென்னையின் முதல் மேயராக பதவியேற்ற சைதை துரைசாமிக்கு குப்பை மேலாண்மை பெரும் சவாலாக இருந்தது. பெருநகர சென்னை விரிவாக்கத்திற்குப் பிறகு கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை வளாகம் மட்டும் போதுமானதாக இல்லை என்பதால், நீண்ட காலத் திட்டமாக புதிய வளாகங்கள் தேர்வு செய்ய விரும்பினார்.
சென்னையில் சேரும் குப்பைகளை சேகரித்து மேலாண்மை செய்வதற்கு குறைந்தது நான்கு இடங்களாவது தேவைப்படும் என்று உணர்ந்தார். அந்த வகையில் புதிதாக இரண்டு இடங்கள் தேடப்பட்டன. பெருநகர சென்னை முழுவதும் மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட ஆய்வின்படி திருவள்ளூர் மாவட்டம் கூத்தம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் ஆகிய இடங்கள் பொருத்தமாக இருந்தன. புதிய இடங்களில் ஹைடெக் முறையில் குப்பை கொட்டும் வளாகம் உருவாக்குவதற்குத் திட்டமிட்டார்.
ஆனால், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதி மக்கள் குப்பையால் படும் அவஸ்தையைக் கண்ட கூத்தம்பாக்கம் மற்று மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மக்கள், அப்படியொரு நிலைமை தங்கள் பகுதிக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்தனர். ஆகவே, தங்கள் பகுதியில் குப்பை கொட்டும் வளாகம் வரக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள்.
அந்த பகுதி மக்களிடம் மேயர் சைதை துரைசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். குப்பை கொட்டும் வளாகம் நவீன முறையில் அமைக்கப்படும் என்றும் இங்கு தினமும் கொட்டப்படும் குப்பைகள் பங்கர் முறையில் சேகரிக்கப்பட்டு, குப்பையில் இருந்து மின்சாரம், எரிவாயு, உரம் தயாரிக்கப்படும் என்பதால், குப்பை கொட்டும் வளாகம் ஒரு தொழிற்சாலை போன்றுதான் காணப்படும் என்று தன்னுடைய எதிர்காலத் திட்டத்தை விளக்கினார்.
அதேநேரம், மக்களுக்கு இந்த திட்டத்தினால் உண்டாகும் அச்சத்தைக் கண்டார். அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அவசியம் என்ற முடிவுக்கு வந்தார்.
- நாளை பார்க்கலாம்.