காமராஜர் நினைவலைகள் – 3
காமராஜர் முதல்வராக இருந்த நேரம் விடுதலைப் போராட்டத் தியாகி ஒருவர் தன் இல்லத் திருமணத்திற்கு வரவேண்டுமென்று அழைப்பிதழ் கொண்டுவந்தார். அவரை அழைத்து அமரச் செய்து நலம் விசாரித்தார். இன்னமும் வசதியற்ற வாழ்க்கையில் அவர் இருப்பதைப் புரிந்து கொண்டார்.
அந்த திருமண நாளில் தனக்கு வேறு அலுவல் இருப்பதாகக் கூறி விழா சிறப்பாக நடப்பதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து அனுப்பிவிட்டார். வந்த நண்பர் மிகவும் வருத்தத்துடன் விடை பெற்றார்.
’’காமராஜரும் நானும் நண்பர்களாக இருந்தோம். இருவரும் ஒரே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தோம். அன்று ரொம்பவும் அன்பாகப் பழகினார். இன்று திருமணத்துக்கு வர முடியாத அளவுக்கு உயர்ந்த இடத்துக்குப் போய்விட்டார். ஆனால், கூப்பிட்டு அன்பாகப் பேசிய வரையில் சந்தோஷம்’’ என்று நண்பரிடம் சொல்லிவிட்டு ஊருக்குத் திரும்பினார்.
அந்த நண்பர் கிராமத்தில் தன் பொருளாதார வசதிக்கேற்ப மிக எளிமையாக திருமண விழா நடத்திக் கொண்டிருந்தார். திடீரென அந்த வீதியில் பரபரப்பு, ஆரவார ஒலி கேட்டு அந்த தியாகி வெளியே வந்தார். அவர் கண்களை நம்ப முடியவில்லை. ஆம், முதல்வர் காமராஜ் காரிலிருந்து இறங்கினார். புன்னகை பூத்தமுகத்தோடு தியாகியின் கைகளைப் பற்றினார்.
தியாகிக்கோ கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. அவரைத் தட்டிக் கொடுத்த வண்ணம், ‘வா, விழா மேடைக்குப் போவோம்’ என்று கூறிய வண்ணம் மண்டபத்தின் உள்ளே சென்றார், மணமக்களை ஆசீர்வதித்தார். அவரைச் சரியான ஆசனத்தில் கூட அமர்த்த முடியவில்லையே என்று அந்தத் தியாகி ஏக்கத்தோடு செயலற்று நின்றார்.
அப்போது காமராஜ், “நீ அழைப்பிதழ் கொடுத்த அன்றைக்கே நான் வர்றதுக்கு முடிவு செஞ்சிட்டேன். ஆனா நான் அப்பவே வர்றதாச் சொல்லியிருந்தா முதலமைச்சரே வர்றார்ன்னு சொல்லி கடனை வாங்கித் தடபுடலா பண்ணியிருப்ப, உன்னை மேலும் கடன்காரனாக்க நான் விருப்பல. இப்ப வந்துட்டேன், உனக்கு திருப்தி தானே” என்றார். கூடியிருந்த கூட்டத்தை பெருமிதத்தோடு பார்த்தார் அந்தத் தியாகி.
“சரி…வரட்டுமா… மேல் கொண்டு காரியத்தை கவனி” என்று விடை பெற்றார் காமராஜ். இந்த வகையில் நட்புக்கு புதிய அதிகாரம் எழுதியவர் காமராஜர்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
