என்ன செய்தார் சைதை துரைசாமி – 169
ஒரு மேயராக மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் எத்தனை சலுகைகள், வசதிகள் செய்துதர முடியுமோ அவ்வளவும் சைதை துரைசாமி செய்துகொடுத்தார். அதோடு ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நடத்தினாலும், மாணவர் தேர்ச்சி விகிதம் அதிகரித்துவந்தாலும், மாநகராட்சிப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பதை உணர்ந்தார்.
இதற்கான காரணங்கள் குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் பேசினார். தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட முடியாத அன்றாடக் கூலி வேலை செய்யும் விளிம்பு நிலை மக்கள் மட்டும்தான் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். பொருளாதாரத்தில் சிரமப்படும் நடுத்தர மக்கள் கூட கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகிறார்கள் என்பதை அறிந்தார்.
தனியார் பள்ளியில் படிக்கவைத்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. மக்களின் இந்த எண்ணத்தை மாற்றுவதற்கும் நடுத்தர மக்களும் தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் வந்து சேர்க்கவும் வேண்டுமென்றால் ஒரு புதிய மாற்றம் தேவை என்பதை உணர்ந்தார். அதற்கான தீர்வும் கண்டறிந்தார்.
அதன்படி, அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் படித்துத் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு, தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பது சரியான தீர்வாக இருக்கும் என்று நம்பினார். இப்படி அரசு ஆணை வெளியானால் அரசு பள்ளிகளை நோக்கி மக்கள் மீண்டும் திரும்புவார்கள், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தனியார் பள்ளிகளில் படித்தால் தான் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்ற மாயையில் இருந்து மக்கள் விடுபடுவார்கள். இதன் மூலம் தொடக்கக் கல்விக்கு தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை செலவழிக்கும் நடுத்தர மக்களின் பொருளாதாரம் மேம்படும் என்று கண்டறிந்து திட்டம் தீட்டினார்.
இந்த திட்டத்தை அரசு இப்போது செயல்படுத்தினாலும் தமிழகத்தின் அரசு பள்ளிகளின் நிலைமை மாறிவிடும் என்பது உறுதி.
- நாளை பார்க்கலாம்.