அண்ணா பல்கலையில் தில்லுமுல்லு பேராசிரியர்கள்.

Image

கவர்னரும் அமைச்சரும் சீட்டிங்கிற்கு உடந்தை?

ஒரே ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆனால், ஒரே ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நிரந்தரப்பணியாளர்களாக இருக்கும் மோசடியை அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது.

அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் அண்ணா யுனிவர்சிட்டியில் மாரிச்சாமி, முரளிபாபு, அரங்கராஜன், வெங்கடேசன், வசந்தா சுவாமிநாதன் ஆகியோர் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நிரந்தரப் பணியாளர்களாகப் பணியாற்றுவது தெரியவந்துள்ளது.

அறப்போர் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதை பொய் புகார் என்று சொல்லி தப்பிக்க முடியாது.

தனலட்சுமி சீனிவாசன் காலேஜ், டி.ஜே.இன்ஸ்டிடியூட், முத்துக்குமரன் இன்ஸ்டிடியூட், வெங்கடேஸ்வரா காலேஜ், மீனாட்சி காலேஜ் போன்ற கல்லூரிகள் இப்படி பல கல்லூரி பேராசிரியர்களை வேலைக்கு நியமனம் செய்திருக்கிறது.

இந்த கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளிலும் பணிபுரிகிறார்களா? அல்லது வேறு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் பெயர்களை இந்த கல்லூரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்களா? இப்படி பல கல்லூரிகளில் பேராசிரியர்களாக ஒரே நபர் பணி செய்வதை ஆய்வுக்கு சென்ற அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடிக்கவில்லையா? அல்லது கண்டும் காணாமல் இருந்தார்களா?

ஒவ்வொரு பேராசிரியருக்கும் AICTE இணையத்தில் Unique Id கல்லூரி உள்ளீடு செய்யும் வழிமுறை உள்ளது, வேற எங்கேனும் பணியில் இருந்ததால் அந்த கல்லூரி பேராசிரியர் பட்டியலில் இணைக்க முடியாது. ஆனால் முறையான, AICTE வழங்கிய Unique IDஐ Entry செய்யாமல், போலித்தனமாக AU, AUU, AU1, Number1, AU1000 போன்று போலியான ID வழங்கி முழுநேர பேராசியராக இருப்பவர்கள் எண்ணிக்கை மட்டும் 13,891 பேர். இவர்கள் அங்கு உறுதியாக பணியில் இருக்கிறார்களா?, மேலும் அப்படி தனிப்பட்ட ID வழங்காதவர்கள் தகுதியான பேராசியரா என்பதும் சந்தேகமே.! எனவே முழுநேர பேராசிரியர்களுக்கு உரிய தனிபட்ட ID தரவுகள் வழங்கபடாமல் பணிபுரிவதாக சொல்லப்படும் 13,891 பேராசிரியராக பணிபுரிவதை ஆய்வு செய்து தகுதியான பேராசிரியர்களா என்பது விசாரிக்கப்பட வேண்டும்

மாணவர்களுக்கு இந்த வருட பொறியியல் கலந்தாய்வு தொடங்க இருக்கும் இந்த நேரத்தில், பேராசிரியர்கள் மோசடி குறித்த விளக்கத்தை தமிழக அரசும், தமிழக ஆளுநரும் உடனடியாக வெளியிட்டு மாணவர்கள் பயத்தை போக்கவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு. ஆசிரியர்களே மோசடியாளர்களாக இருந்தால் மாணவர்கள் நிலைமை என்னாகும்..?

இந்த மோசடி புகார் குறித்து வேந்தராக இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி அல்லது உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி ஆகியொர் வாயைத் திறக்கவே இல்லை. அதேநேரம், அண்ணா பல்கலையின் துணைவேந்தர் வேல்ராஜ், ‘ஆதார் எண்களை மாற்றி ஒரே பேராசிரியர் 32 கல்லூரிகளில் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் விவரங்களைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு அறப்போர் இயக்கத்தினர், ‘’குழு அமைத்து தேடுவது இருக்கட்டும். முதலில் அறப்போர் கொடுத்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுங்கள். இந்த கல்லூரிகளை ஆய்வு செய்து All is Well சான்றிதழ் கொடுத்த ஆய்வுக்குழுவை விசாரணை செய்யுங்கள். குழு அமைப்பது அதை வைத்து 2 வருடம் விசாரணை நடத்தி பிரச்சனையை மறக்கடிப்பது போன்ற ஆதி காலத்து முயற்சிகளை எல்லாம் நம்ப மாணவர்கள் தயாராக இல்லை. பொறியியல் கலந்தாய்வு ஆரம்பிக்கும் முன்பாக மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் உங்கள் நடவடிக்கைகள் இருக்கட்டும்’’ என்று கூறியிருக்கிறார்கள்.

சரிதான், நடவடிக்கையே முக்கியம்.

Leave a Comment