ஸ்டாலின் தூண்டில்
ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து தைரியமாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தேர்தலில் சுயேட்சையாக நின்று தோற்றுப்போனாலும், தன்னுடைய குரலை அவர் ஒரு போதும் இழந்ததில்லை. முதன்முறையாக தி.மு.க. மேடையில் ஏறியிருக்கு பிரகாஷ்ராஜை மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்து கட்சிக்குள் இழுப்பதற்கு ஸ்டாலின் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று நடித்துக்கொண்டு இருந்தவர் பிரகாஷ் ராஜ். பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளரும் பிரகாஷ் ராஜின் தோழியுமான கௌரி லங்கேஷ் 2017ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிறகே தீவிர அரசியல் கருத்துக்கள் கூற ஆரம்பித்தார். பா.ஜ.க.வு இந்துத்துவா மற்றும் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து ஆவேசம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற திருச்சி சிவா நூல்கள் வெளியீட்டு விழாவில் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டு பேசினார். அவர், ‘’நான் எதுபேசினாலும் அரசியலாகிவிடுகிறது. என்னுடைய குரல் அரசியல்வாதியின் குரல் அல்ல. ஒரு சாதாரண மனிதன், ஒரு கலைஞனின் குரல் என்னுடையது. திருச்சி சிவா என்னுடைய நண்பர் என்பதற்காக மட்டும் நான் இந்த மேடையில் இருக்கவில்லை. அவர் குரல் மக்களுக்கான குரல். அந்தக் குரலுக்குக்காகத்தான் நான் இந்த மேடையில் இருக்கிறேன். கலைஞர் இருந்தபோது என்னைப் போன்றவர்களெல்லாம் அரசியல் பற்றி பேசவேண்டிய தேவையில்லை. கலைஞர் அவர்களே நமக்காகப் பேசிக்கொண்டிருந்தார். அவரைப் போன்றவர்கள் இப்போது இல்லை என்பதால் நாங்களெல்லாம் பேச வேண்டியத் தேவை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதல் குரலாக பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் பேசியவர் அண்ணா. அதையடுத்து கலைஞர் பேசினார். அந்த வழியாக வந்தக் குரல்களில் ஒன்று திருச்சி சிவாவின் குரல். அந்தக் குரலுக்குக்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். பஸ்ஸில் ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்று போர்ட் போடுவார்கள். அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அங்க ஒரு துணை முதலமைச்சர் ‘சனாதனம்’ பேசுகிறார். இங்கு இருக்கும் துணை முதலமைச்சர் ‘சமத்துவம்’ பேசுகிறார். நாங்கள் சமத்துவம் பேசுவர்கள் பக்கம் நிற்கிறோம்” என்று பேசியிருக்கிறார்.
பிரகாஷ் ராஜுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அடுத்து அவருக்கு மாநிலங்கவை எம்.பி. பதவி கொடுக்கும் முடிவுக்கு ஸ்டாலின் வந்திருக்கிறார். 2026 தேர்தலுக்கு கமல்ஹாசனுடன் சேர்ந்து பரப்புரை செய்வதற்கு பிரகாஷ்ராஜ் பயன்படுவார் என்று பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாம். பிரகாஷ் ராஜ் என்ன முடிவு சொல்லப்போகிறார் என்று தி.மு.க. ஆவலுடன் காத்திருக்கிறது.