ஞானகுரு :
வயநாட்டில் நடந்திருக்கும் பேரழிவுக்குக் காடுகள் அழிப்பும், காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பெருமழையும் முதன்மைக் காரணங்கள் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை சுரண்டாமல் காப்பாற்றியிருந்தால் இந்த இழப்பினை குறைத்திருக்க அல்லது தடுத்திருக்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.
இது அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது சரியெனத் தோன்றும். ஆனால், உண்மையில் இயற்கையின் சுழற்சியில் இது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம். மனிதர்கள் இயற்கையை சீண்டாத காலத்திலும் இதைவிட கொடூர நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எத்தனையோ உயிரினங்கள் அழிந்து போயிருக்கின்றன.
டயனோசர், மம்மூத் போன்ற உயிரினங்கள் இயற்கைக்கு என்ன கேடு விளைவித்தன. ஆனால், அவை அழியத்தான் செய்தன. எனவே, மனிதர்களால் இயற்கையைக் கெடுக்க முடியும், இயற்கையை சுரண்ட முடியும் என்றாலும் அதனால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை.
மனிதர்கள் எதுவும் செய்யாமல் இருந்தாலும் இயற்கை பேரழிவு நடக்கவே செய்யும். புயல், சூறாவளி, பூகம்பம், எரிமலை, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் எந்த அளவுக்கு வரும், எப்படிப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்பதை எல்லாம் யாராலும் அத்தனை எளிதில் கணக்கிட முடியாது. கணக்கிட்டாலும் தப்பிவிட முடியாது.
ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதிலிருந்தே இது போன்ற சோதனைகள் கேரளத்துக்கு ஏற்படுவதாக ஆன்மிகவாதிகள் சொல்லிவருவது முட்டாள்தனத்தின் உச்சம். ஐயப்பன் கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி கொடுத்த நீதிபதிகள், அரசியல்வாதிகள், காவலர்களை எல்லாம் எதுவும் செய்யாத ஐயப்பன், நள்ளிரவில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த அப்பாவி ஜனங்களைக் கொலை செய்திருக்கிறார் என்றால், அவர் கடவுள் தானா..?
கடவுள் என்று ஒருவர் இருந்தால் கூட அவரால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை. இயற்கையைப் புரிந்துகொண்டு மனிதர்கள் தான் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.