ஞானகுரு :
விதியே காரணம். ஆனால், இது நீங்கள் நினைக்கும் தலைவிதி அல்ல. சாலை விதிகள். ஒருவரின் அலட்சியம் பலருக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. சாலை விதிகளை நீங்கள் மட்டும் கடைபிடிப்பது போதாது, எதிரே வருபவரும் அப்படியே நடக்க வேண்டும். ஆனால், மனிதர்கள் மனதில் எப்போதும் சுயநலம் ஓங்கியே இருக்கும். தங்களுக்குத் தேவை ஏற்படும்போது வேகக் கட்டுப்பாட்டை மீறிச் செல்வது, ஒருவழிப் பாதையில் செல்வதை பெரிய குற்றமாக நினைக்கவே மாட்டார்கள். தன்னால் கண் விழித்து நீண்ட நேரம் ஓட்ட முடியும் என்று தற்பெருமை பேசுபவரும், எத்தகைய சூழலிலும் என்னால் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்று நினைப்பதும் விபத்துக்கு முக்கிய காரணமாகிறது.
மனிதர்கள் மட்டும் சரியாக இருப்பது மட்டும் போதாது. வாகனங்களும் சரியான பராமரிப்புடன் இருக்க முடியும். இதையெல்லாம் தாண்டியும் மழை, சகதி, மணல், கல் போன்ற சின்னச்சின்ன விஷயங்களாலும் விபத்துகள் ஏற்படுவதுண்டு. விபத்து நடக்கிறது என்பதற்காக பயணிக்காமல் இருக்கத் தேவையில்லை. வீட்டுக்குள் தவறி விழுந்து செத்தவர்களும் இருக்கவே செய்கிறார்கள். எனவே நம்மால் மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக்கொண்டு நகர்வதே வாழ்வு.
