ஞானகுரு:
ஒரு பெண் காதலித்தால், அது அவளுக்கு மட்டும்தான் தெரியும். அதுவே ஆண் காதலித்தால், அந்தப் பெண்ணைத் தவிர அத்தனை பேருக்கும் தெரியும் என்பார்கள். பெண்ணின் மனதில் நீங்கள் இருக்கிறீர்களா என்பது இங்கே முக்கியம் அல்ல. முதலில் காதல் செய்வதற்கான தகுதி இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
இரண்டு பேருக்கும் அடுத்து குழந்தை வந்தால் அதற்கும் சேர்த்து செலவழிக்க முடியும் அளவுக்கு சம்பாதிக்க முடிகிறதா? உடல் அளவிலும் மனதளவிலும் முழு ஆரோக்கியமாக இருக்கிறீர்களா..? பெண் எதிர்கால நன்மைக்கு என்னவெல்லாம் செய்ய முடியும்? அவள் கட்டிய புடவையுடன் வந்தால் ஏற்றுக்கொள்ளத் தயாரா?. அவள் காதலுக்காக உங்கள் குடும்பத்தை இழக்கத் தயாரா?.
அவளிடம் எத்தனை குறைகள் இருந்தாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு காலமெல்லாம் வாழத் தயாரா… எதிர்காலத்தில் அவள் உங்களை விட்டு பிரிய விரும்பினால், அதற்கும் மனப்பூர்வமாக சம்மதம் கொடுப்பீர்களா என்பது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் உங்களிடமே விடை கேளுங்கள். இத்தனைக்குப் பின்னும் அந்தப் பெண்ணின் மீது காதல் இருந்தால், நம்பிக்கையுடன் அந்தப் பெண்ணிடம் உங்கள் காதலைச் சொல்லுங்கள். அவள் ஏற்றுக்கொண்டால் நல்லது இல்லையென்றாலும் நல்லது என்ற எண்ணத்தில் காதலை சொல்லுங்கள், காதல் ஜெயிக்கட்டும்.
